வெற்றிக்கு உதவா ஓட்டங்கள்..!
ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கான காரணம் அவனின் புத்திசாலித்தனம், அதிர்ஷ்டம் என்ற வார்த்தைகளைக் கூறிவிட்டு கடந்து போகிறோம். புத்திசாலித்தனம், அதிர்ஷ்டம் இவற்றை தாண்டி ‘நேரம்’ என்பதை முக்கிய விஷயமாக கொள்ள வேண்டும். ஒவ்வொரு காரியத்தையும் நாளை செய்யலாம் என ஒத்திப் போடுவதன் விளைவு நம்முடையை வெற்றியும் தள்ளிப் போகும் நிலை ஏற்படுகிறது.
‘நேரம்’ என்பது யாருக்காகவும் எதற்காகவும் காத்து கொண்டு இருப்பது இல்லை, இழந்த நேரம் திரும்ப கிடைப்பதும் இல்லை. மனிதனின் ‘புத்திசாலித்தனம்’ என்பதை அவன் ‘நேரத்தை’ எவ்வாறு பயன்படுத்திக் கொண்டான் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். நேரத்தை வீணாக்குவது நமது எதிர்காலத்தை கடினமாக்குகிறது என்று பொருள். நாம் நம்முடைய நேரத்தை எங்கெல்லாம் வீணடிக்கிறோம்..?
எதிர்மறை எண்ணம் கொண்டவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவது. தேவையற்ற விவாதங்களில் கலந்து கொண்டு காலத்தை விரயமாக்குவது.
ஜாதகம் பார்க்கிறேன் என்று அதில் கவனம் செலுத்தி நாம் எடுத்து செய்ய இருந்த காரியத்தை தேவையற்று தள்ளிப் போடுவது.
நீண்ட கால பணியினை விட்டுவிட்டு திடீரென வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி காலநேரத்தை விரயமாக்குவது என இப்படி ஏராளமான விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் உங்கள் நேரத்தை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களின் வெற்றிக்கான காலம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
எந்நேரமும் நான் பிஸி… நான் பிஸி.. என அரற்றிக் கொண்டு வேலை, வேலை என ஓடாதீர்கள். நிதானமற்ற இந்த ஓட்டம் எங்கேயாவது தடைக்கற்களை ஏற்படுத்தி விடும். வேலைக்கான நேரத்தை ஒதுக்குவது போல் உங்களை நீங்களே உத்வேகப்படுத்திக் கொள்வதற்கும் நேரம் ஒதுக்குங்கள்.
உங்களை நேசிக்கிறவர்களோடு தினமும் சிறிது நேரத்தை செலவிடுங்கள். அந்த மகிழ்ச்சியான தருணங்கள் உங்களை உற்சாகப்படுத்தும். செலவி னங்களை பற்றி யோசிக்காமல் கையிலிருக்கும் இருக்கும் பணத்திற்கு ஏற்ப நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ மகிழ்ச்சியாக சுற்றுலா சென்று வாருங்கள். அது உங்களை உத்வேகப்படுத்தும்.
உங்களை நீங்கள் ஏற்றம் பெறச் செய்ய பிறருடன் ஒப்பிடுங்கள். உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ள பிறருடன் ஒப்பிடாதீர்கள். அது உங்களை பலவீனப்படுத்தும். கடந்த கால தோல்விகளை நீங்கள் சீர்தூக்கிப் பாருங்கள். அதில் உள்ள தவறுகளை அலசுங்கள். ஆனால் அந்த தோல்வி சிந்தனை உங்களை அழுத்தி மூழ்கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நம்மை உற்சாகப்படுத்தும் நல்ல விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உணவில் தேவையற்ற பொருட்களை தூக்கி எறிந்துவிட்டு சாப்பிடுவது போல் வாழ்வில் நீங்கள் சந்திக்கும் தேவையற்ற விஷயங்களை தூக்கி எறிந்து விட்டு மேலே அடுத்தடுத்த காரியங்களில் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் வளர்ச்சியை நீங்கள் சீர்தூக்கிப் பாருங்கள். நேற்றைவிட இன்று உங்களின் வளர்ச்சி எப்படி உள்ளது என ஒப்பிடுங்கள். வளர்ச்சியோ, வீழ்ச்சியோ அனைத்தும் உங்களுக்கான வாழ்க்கை பாடம்.
வளர்ச்சிக்கான காரணத்தை ஆராய்ந்தால் அது உங்களை மேலும் உயர்த்தும். வீழ்ச்சிக்கான காரணத்தை சீர்தூக்கி ஆராய்ந்தால் அது உங்களை பக்குவப்படுத்தும். மீண்டும் அது போன்ற தவறுகள் நடக்காமல் தற்காத்துக் கொள்ளச் செய்யும். நடந்த தவறுகளுக்கான காரணத்தை நினைத்து அடிக்கடி வருந்துவது உங்களை பலவீனப்படுத்தும். ‘நடந்தது நடந்துவிட்டதுஞ் இனி அதை நினைத்து என்ன ஆகப் போகிறது’ என்ற எண்ணத்துடன் அதை புறந்தள்ளுங்கள்.
வியாபாரத்தில் வெற்றி பெற்றவர்களுடன் அடிக்கடி நேரத்தை செலவிடுங்கள். தோல்வி கண்டவர்களிடம் அதற்கான காரணத்தை ஆராயுங்கள். அதே வேளையில் அவர்களின் புலம்பல்களை புறந்தள்ளுங்கள். அது உங்களை செயல்படவிடாமல் பலவீனப்படுத்தும்.
எடுத்த காரியத்தில் தோல்வி கிட்டினால் என்ன செய்வது என்ற பயத்துடன் ஒரு காரியத்தை தொடங்காதீர்கள். தோல்வி பயம் உங்களை நிச்சய தோல்விக்கு இட்டுச் செல்லும். தோல்வி பயத்தில் நேரத்தை வீணடிக்காமல் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் அணுகுங்கள்.
நாம் செய்யும் செயல் பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். அது உங்களை பின்னோக்கி இழுக்கும். நீங்கள் செய்யும் செயல் மற்றவர்களுக்கு பாதிப்பை உண்டாக்காது என்றால் உங்கள் காரியம் குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். உங்களுக்கு நேர்மையாக இருந்துவிட்டு வாழ்க்கையை நகர்த்திச் செல்லுங்கள்.