சிறு தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு இரண்டு கோடி வரை எளிய கடன்..
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் நிலையில் இந்த நிறுவனங்களுக்கு கடன் பெற்றுக்கொள்ள வழிவகுக்க அரசு நான்கு முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த திட்டங்கள் மூலம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் கடன் பெற்று தங்கள் நிறுவனத்தை வளர்ச்சி அடைய செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் நான்கு முக்கிய அரசு திட்டங்களின் வழியாக கடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலையில் அந்த திட்டங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
கடன் இணைக்கப்பட்ட மூலதன மானியம்
கடந்த 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் சந்தையில் சிறப்பாக போட்டியிடுவதோடு, தொழில்நுட்ப ரீதியாக தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கினால் அதில் 15 சதவீதம் மானியம் கிடைக்கும். மேலும் எஸ்.சி, எஸ்.எடி. பிரிவினர், பெண்களை சொந்த தொழில் செய்ய ஊக்குவிக்கும் வகையில் இந்த மானிய சலுகை வழங்கப்படுகிறது.
சிறப்பு கவனம் : இந்த கடன் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தர்காண்ட் போன்ற மலைப்பிரதேச மாநிலங்கள், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு போன்ற தீவுகள் ஆகிய பகுதிகளில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பம் : இந்த திட்டத்தில் கடன் பெறுபவர்கள் மானியம் கோருவதற்கு முதன்மை கடன் வழங்கும் நிறுவனங்கள் (PLIs) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நோடல் ஏஜன்சி சரி பார்த்து மானியத்திற்கு பரிந்துரை செய்யும்.
குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதித் திட்டம்
இந்திய அரசின் எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் மற்றும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) இணைந்து நிறுவியுள்ள இந்த கடன் திட்டம் புதிதாக தொடங்கப்பட்ட சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்குகிறது. இந்த கடனுக்கு நிறுவனத்தினர் எந்தவித பிணையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த கடனை பெற தகுதி வாய்ந்த நிறுவனங்கள் வட்டார கிராமப்புற வங்கிகளை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
பிரதம மந்திரியின் வேலை வாய்ப்புத் திட்டம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறு வணிகங்களை உருவாக்கி அதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்கி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். 18 வயது பூர்த்தி அடைந்த தகுதி வாய்ந்தவர்கள் இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒருவரின் தகுதிக்கு ஏற்ப, அவர்களுடைய பிராஜெக்டுகளுக்கு ஏற்ப 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படும்.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி : 18 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தின் மூலம் பலனடையலாம்.
அதேசமயம் தயாரிப்புத் துறையில் 10 லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும் பிராஜெக்டுகளுக்கும் வணிகம் அல்லது சேவை துறையில் 5 லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும் பிராஜெக்டுகளுக்கும் அந்த நபர் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
மானியம் : உற்பத்தி தொழில் களுக்கு 25 லட்ச ரூபாய் வரையிலும் சேவை தொழில்களுக்கு 10 லட்ச ரூபாய் வரையிலும் வங்கிக்கடனுக்கு வழிவகை செய்யப்படுகின்றன. பொதுப்பிரிவின்கீழ், நகரப்பகுதிகளில் தொடங்கப்படும் தொழில்களுக்கு 15 சதவீதமும் ஊரகப் பகுதிகளில் தொடங்கப்படும் தொழில்களுக்கு 25 சதவீதமும் மானியம் வழங்கப்படும்.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்
2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தொழிலை வளர்ச்சி அடைய செய்வதற்காக இந்த திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
சிஷு (Shishu) என்கிற பெயரில் 50,000 ரூபாய் வரை கடனும், கிஷோர் (Krishor) என்கிற பெயரில் 50,000 ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை கடனும், தருண் (Tarun) என்கிற பெயரில் 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை கடனும் என 3 பிரிவுகளாக கடன் வழங்கப்படுகிறது