திருச்சியில் குரல்வளை புற்று நோய்க்கான சிறப்பு கருத்தரங்கம்
திருச்சி தில்லைநகர் நான்காவது கிராஸ் மேற்கு விரிவாக்க பகுதியில் உள்ளது சில்வர் லைன் மருத்துவமனை. இங்கு குரல்வளை புற்று நோய்க்கான குரல் அற்றவர்களுக்கான குரல் என்றும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செந்தில் குமார் கூறும் பொழுது பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் 3 முதல் 6% வரை குரல்வளை புற்றுநோயாகும். பெரும்பாலான குரல்வளை புற்றுநோய் கிட்டத்தட்ட 80 சதவீதம் வரை குணப்படுத்த கூடியதாகும். இதில் பெரும் பகுதி புகையிலை மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது.
குரல்வளை புற்றுநோயின் பொதுவான அறிகுறி குரல் மாற்றம் ஆகும். தொண்டை நோய் தொற்றின் காரணமாக கூட குரல் மாற்றம் ஏற்படலாம் ஆனால் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் குரல் மாற்றம் இருப்பின் குரல்வளை புற்றுநோய்க்கான சோதனை மேற்கொள்வது அவசியம் ஆகும்.
முதலில் விழுங்குவதில் சிரமம், கழுத்தில் வீக்கம், சுவாசப்பதில் சிரமம் பின்னர் உணவு உட்கொள்வதே சிரமமாகிவிடும். குரல் மாற்றத்துடன் நோயாளி இருக்கும் பொழுது குரல்வளை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து கதிர்வீச்சு சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்த இயலும்.
புற்றுநோயின் தீவிரம் அதிகமாக இருக்கும் பொழுது அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வாகும் .அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் புற்றுநோயை முழுவதும் குணப்படுத்த இயலும்.
இந்த கருத்தரங்கில் குரல்வளை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல்வளையின்றி பேசுவதற்கு அளிக்கப்படும் பயிற்சி வழங்கப்படுகிறது. எங்களது சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை வழங்குகிறோம். திருச்சியில் அதிகபட்ச குரல்வளை அறுவை சிகிச்சை செய்த ஒரே மருத்துவமனை எங்களுடையது என்று பெருமிதம் கொள்கிறோம்.
பேச்சு பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கிறோம். உரிய காலத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்ட தொடக்க காலத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால் அறுவை சிகிச்சை அவசியமற்றதாகிவிடும்.
மேலும் நோயாளிகள் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையுடன் ஒத்துழைத்தால் சிகிச்சையில் கூடுதல் பலன் கிடைந்து விரைவில் நோயாளிகள் குணமடைந்து சராசரி மனிதர்கள் போல் வாழவும் முடியும் என்று தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது அறுவை சிகிச்சை மருத்துவர் நிபுணர் டாக்டர் பாலாஜி, மருத்துவ ஆலோசகர் டாக்டர் நரேந்திரன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின்சென்னை செயலாளர் சர்புதீன் உட்பட பலர் இருந்தனர்.