திருச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் 30வது ஆண்டு விழா!
தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் 30வது ஆண்டு விழா மற்றும் 14வது மாநாடு திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், நிறுவனத்தலைவர் கணேஷ் ராம் தலைமை தாங்கி உரையாற்றினார். அப்போது சங்கத்தின் தோற்றம், 30 ஆண்டு கால பயணத்தில் சந்தித்த இடையூறுகள், சங்கத்தின் நெறிமுறைகளை வினியோகஸ்தர்கள் கடைபிடிக்க வேண்டிய அவசியம், ஒற்றுமைக்கான தேவைகள், போன்று பல்வேறு விதமான கருத்துக்கள் குறித்து பேசினார்.
மாநில செயலாளர் திருச்சி ராஜசேகர் மாநாட்டு தீர்மானங்கள் வாசித்தார். அதில் சில்லறை வணிகத்தில் Corporate நிறுவனங்கள் அனுமதிக்கப் படாமல் சில்லறை வணிகம் சில்லறை வணிகர்களுக்கே என்ற நிலையை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கிட வேண்டும்.
GST Council உறுப்பினர்களாக தேசிய அளவில் 20 வணிகர் சங்கங்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும். கொரானா காலத்தில் ஊரடங்கு காரணமாக பெற்ற அவசர கால வங்கி கடனுக்கான வட்டியை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் மற்றும் அசலை திரும்ப செலுத்த மாத தவணை தொகையை மேலும் ஒரு ஆண்டு காலம் நீட்டிப்பு செய்ய பிரதமருக்கு வேண்டுகோள் விடுப்பு தீர்மானம், வணிக பிரதிநிதிகள் தங்களது வினியோகஸ்தர்களுடன் தீர்க்க முடியாத வணிக சர்ச்சைகள் இருந்தால் TNCPDA நிர்வாகிகள் உதவி பெற்று சுமூகதீர்வு காண்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் அண்ணாத்துரை, பொருளாளர் ராஜ்குமார் உட்பட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் என 27 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.