கடன் வழங்கும் போலி மொபைல் செயலியை கண்டறியும் வழி
உத்தரபிரதேசத்தில் கால் சென்டர் நடத்தி வந்த சஞ்சீவ்குமார் சிங்கை, தனது ஐடி நண்பர்கள் ராம் நிவாஸ் குமாவத், விவேக் ஷர்மா மற்றும் பிராஞ்சூல் ரத்தோட் ஆகிய நால்வரையும் மும்பை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
எதற்காக இந்த கைது நடவடிக்கை தெரியுமா.? இந்த நால்வரும் இணைந்து 9 லோன் வழங்கும் செயலிகளை உருவாக்கினர்.
பிரதமர் பெயரில் www.pradhanmantriyojanaloan.com, www.pradhanmantriyojanaloan.com என்ற பெயரிலான வளைதளத்தையும் பிஎம்ஒஎல், பிஎம் பாரத் லோன் யோஜனா, பிரதான் மந்திரி யோஜனா லோன், பிரதான் மந்திரி முத்ரா லோன், பாரத் யோஜனா லோன், முத்ரா லோன், கிருஷ்ணா லோன் என்ற பெயர்களில் செயலிகளையும் உருவாக்கினர்.
மொபைல் செயலி மூலம் கடன் தரும் விவரங்களை சமூக வலை தளங்கள் மற்றும் ஒரு சில ஊடகங்களிலும் விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி விண்ணப்பிப்பவர்களிடம், பரிவர்த்தனை கட்டணமாக சுமார் ரூ.8,000 முதல் ரூ.25,000 வரை வாங்கியுள்ளனர். இந்த பணத்தை பெறுவதற்காக 25 -வாலட்டுகள் மற்றும் 25 வங்கி கணக்குகள் வைத்துள்ளனர். லோன் ஆப்ஸ் மூலம் விண்ணப்பித்தவர்களிடம் பரிவர்த்தனை கட்டணத்தை பெற்ற பிறகு அவர்களுடனான அழைப்புகளை துண்டித்து விடுகின்றனர்.
இது போல் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 8 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த செயலியை சுமார் 2.8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கடன் பெற விண்ணப்பிக்கும் போது பதிவிறக்கம் செய்யும் ஆவணங்களுடன் பரிவர்த்தனை கட்டணத்தையும் செலுத்துவது போல் இந்த செயலிகள் மற்றும் வலைதளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மொபைல் செயலி மூலம் உடனடி கடன் வழங்குகிறோம் எனக் கூறி மோசடி செய்யும் செயலிகள் குறித்து செய்தி படிக்கிறோம். குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கூறி அங்கீகாரம் இல்லாத செல்போன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தது.
ஆனாலும் இணையத்தில் தனிநபர் கடன் வழங்கிட ஏராளமான மொபைல் செயலிகள் வரிசைகட்டி நிற்கின்றன. அவற்றில் எவை நேர்மையான, அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் என்று கண்டறிவது.?
நீங்கள் கடன் வேண்டி விண்ணப்பிக்கும் முன்பு அந்நிறுவனம் பற்றிய தகவல்களை இணையத்தில் சென்று பாருங்கள். அந்நிறுவனம் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என்ற விவரங்களை பார்க்க வேண்டும், அப்படி பதிவு செய்திருந்தால் அதன் சிமிழி நம்பரை அடையாளம் காண வேண்டும். இது தவிர ரிசர்வ் வங்கியின் பதிவு சான்று விவரங்கள் என பலவற்றையும் கவனிக்க வேண்டும். அப்படி ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படவில்லை என்றால் அதனை தவிர்ப்பது நல்லது.
ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டதாக இருந்தால், அதன் கே.ஓய்.சி. விதிமுறைகளை சரி பார்க்க வேண்டும். அந்த விதிமுறைகள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுடன் ஒத்துப் போகிறதா? என்று பார்க்க வேண்டும். பிளே ஸ்டோரில் அந்நிறுவனம் பற்றிய மதிப்புரைகளை பாருங்கள். கடன் வாங்கியவர்கள் அந்நிறுவனம் பற்றிய நிறை குறைகளை பதிவிட்டிருப்பார்கள்.
கடன் வழங்கும் நிறுவனங்கள், நீங்கள் கடன் வாங்குவதற்கு முன்பே உங்களது கே.ஒய்.சி. விவரங்களை வாங்கி சரி பார்க்கின்றனவோ? அதே போல நீங்களும் கடனுக்காக விண்ணப்பிக்கும் முன்பு கடன் வழங்குனரை பற்றி அறிந்திருக்க வேண்டும்.
கடன் வாங்குவதற்கு முன்பு 10 நிமிடம் நேர செலவழித்து இதனை ஆராய்ந்த பின்பு கடன் வாங்கினால், பின்னாளில் வரும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.