இன்று நேரடியாக பணத்தை பயன்படுத்துவதைக் காட்டிலும், டிஜிட்டல் UPI பணப்பரிவர்த்தனை முறைக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். டீக்கடையில் பத்து ரூபாய்க்கு ஜிபே செய்வதெல்லாம் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது.
தற்போதைய, யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை முறையில் 24 மணி நேரத்தை அடிப்படையாக கொண்ட நாளொன்றுக்கு ஒரு இலட்சம் மட்டுமே பரிமாற்றம் செய்யமுடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.
இந்நிலையில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்திற் கொண்டும் பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நோக்கிலும் அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது, இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் NPCI .
இதன்படி, பங்குச்சந்தை முதலீடு, காப்பீட்டுப் பிரிமியம், அரசுக்கு செலுத்தவேண்டியத் தொகை, போன்றவைகளுக்கான உச்ச வரம்பு ரூ. 2 இலட்சத்திலிருந்து ரூ.10 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்திற்க்கான கட்டணம் ரூ. 1 இலட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடன் அட்டை நிலுவை செலுத்துவதற்கான உச்ச வரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 6 இலட்சமாகவும் , புதிய நகைகளை வாங்குவதற்கான பரிவர்த்தனை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 6 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், தனி நபர் மற்றொரு தனி நபருக்கான பணம் செலுத்தும் உச்சவரம்பு முன்பிருந்த அதே ரூ. 1 இலட்சமாகவே உள்ளது.
இப்புதிய மாற்றங்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமுலுக்கு வருமென இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் NPCI தெரிவித்துள்ளது.