வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனியாகச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் தமிழ்நாடு 1957-லிலிருந்து வட்டிக்குப் பணம் கொடுப்பதை நெறிப்படுத்தும் சட்டம் (tamil nadu money lenders act 1957) நடைமுறையில் உள்ளது. அதன்படி வட்டிக்குப் பணம் கொடுப்பதைத் தொழிலாக நடத்துபவர்கள் முறைப்படி தாசில்தாரிடம் அனுமதி பெற்று நடத்தவேண்டும்.
இது தனி நபர், கூட்டாக பங்குதாரர்களாக நடத்தலாம். ஆனால் இந்தச் சட்டம் வங்கிகளுக்கோ, வட்டிக்குப் பணம் கொடுக்கும் கூட்டுறவு சங்கங்கள், நிதி நிறுவனங்களுக்குப் பொருந்தாது. ஏனென்றால் டெபாசிட் வாங்குவது வட்டிக்குப் பணம் கொடுப்பது என்றால் வங்கி நடைமுறைக்கு கீழ் வருவதால் அதற்கு ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற வேண்டும்.
நான் டெபாசிட் எதுவும் வாங்கவில்லை, வெறுமனே பணம் மட்டுமே வட்டிக்குக் கொடுத்து வாங்குகிறேன் என்றால் அதற்கு தாசில்தாரிடம் லைசென்ஸ் வாங்க வேண்டும். அடகுக் கடை வைத்திருப்பவர்கள் லைசென்ஸ் வாங்குவது போல் இதற்கும், ‘மணி லெண்டர்ஸ் ஆக்ட் 1957’-ன் கீழ் உள்ள சட்டத்தின் கீழ் லைசென்ஸ் வாங்க வேண்டும். அப்படி இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முழுநேரத் தொழிலாக செய்வது சட்டப்படி குற்றம்.
ஒரு தனிநபர் தனது நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு வாழ்க்கையில் பணத் தேவைக்கு உதவும் போது பணம் கொடுத்து வட்டி வாங்குவது வழக்கமாக இருக்கும். அவர்களை முழு நேரத் தொழிலாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது அதில் லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒருவருக்கோ, சிலருக்கோ உதவி செய்வதை லைசென்ஸ் வாங்கி செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு வேளை ஒருவர் லைசென்ஸ் எடுக்காமல் தொழிலாகச் செய்தார் என்று புகார் வந்தால் அதற்கு தண்டனை ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்தால் விதிக்கப்படும். சிறைத் தண்டனை எதுவும் இல்லை.
இதில் கோடிக்கணக்கில் பணம் வட்டிக்கு கொடுத்திருந்து உரிமம் வாங்கவில்லை என்று குற்றச்சாட்டு வந்தாலும் சட்டம் தொகையைப் பற்றி சொல்லவில்லை. உரிமம் வாங்காமல் வட்டிக்குப் பணம் கொடுத்து தொழில் செய்வது தான் குற்றம் என்கிறது. ஒரு வேளை நடவடிக்கை வந்தால் அதற்கு ரூ.1,000 அபராதம் என்பது தான் சட்ட நடவடிக்கை.