பெற்றோர் இறப்புக்கு முன்பு ஒற்றுமையாக இருக்கும் உடன்பிறப்புகள், அவர்கள் மரணத்திற்கு பிறகு சொத்திற்காக சண்டைபோட்டு நீதிமன்றம் செல்கிறார்கள். இதுபோன்ற மோதல்களை தடுக்க, பெற்றோர்கள் இறப்பதற்கு முன் ஒரு உயில் எழுதுகிறார்கள்.
இந்தியாவில், சொத்துரிமைகள் மதம், பாலினம் மற்றும் உறவைப் பொறுத்து மாறுபடும். அந்த வகையில், சொத்தின் வாரிசுரிமை என்பது பல குடும்பங்களில் குழப்பம், தகராறுகள் மற்றும் சட்டப் போராட்டங்களை ஏற்படுத்தும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். அதிலும் குறிப்பாக, பெற்றோர் இறப்புக்கு முன்பு ஒற்றுமையாக இருக்கும் உடன்பிறப்புகள், அவர்கள் மரணத்திற்கு பிறகு சொத்திற்காக சண்டைபோட்டு நீதிமன்றம் செல்கிறார்கள். இதுபோன்ற மோதல்களை தடுக்க, பெற்றோர்கள் இறப்பதற்கு முன் ஒரு உயில் எழுதுகிறார்கள். இருப்பினும், உயிர் பதிவு செய்யப்படாவிட்டால் நீதிமன்றத்திற்கு செல்லும்போது அது செல்லுபடியாகுமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்திற்கான விடையை தற்போது இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
ஒரு குடும்பத்தில், தந்தை 2022ஆம் ஆண்டு இறக்கிறார். அவருக்கு 5 மகன்கள் மற்றும் 6 மகள்கள் இருக்கின்றனர். அவர் இறப்பதற்கு முன்பு, தந்தை தனது சொத்தை தனது பிள்ளைகளுக்கு வழங்க ஒரு உயில் எழுதினார். ஆனால், உயில் பதிவு செய்யப்படவில்லை. இதற் காரணமாக, அவரது இறப்பிற்கு பிறகு அவரது உடன்பிறந்தவர்களில் சிலர் நீதிமன்றத்தை அணுகினார். 2005 சட்டத்திற்படி சொத்தில் சம பங்கு வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டனர். இதைதொடர்ந்து குடும்பத்தில் சொத்து தகராறு தீவிரமடைந்தது.
இதுபோன்ற சூழ்நிலையில், முதலில் தந்தைக்கு இந்த சொத்து எப்படி கிடைத்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்?. தந்தையால் பெறப்பட்ட சொத்து, 1956ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி தனிப்பட்ட சொத்தாகக் கருதப்படுகிறது. அந்தச் சொத்து மூதாதையர் சொத்தாக மாறாது. அது கூட்டுக் குடும்பச் சொத்தாகக் கூட கருதப்படுவதில்லை. எனவே, தந்தைக்கு உயில் மூலம் சொத்தை ஒதுக்க உரிமை உண்டு. அதே சொத்து, அவரது தந்தை மற்றும் தாத்தா பாட்டிகளிடமிருந்து தந்தைக்கு வந்தால், அனைத்து வாரிசுகளுக்கும் உரிமை உண்டு.
இங்கே பலருக்கு வரும் முக்கிய கேள்வி என்னவென்றால், உயில் பதிவு செய்யப்பட வேண்டுமா? இல்லையா? என்று தான். இதுப்பற்றி சட்ட வல்லுநர்கள் சொல்வது என்னவென்றால், இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின்படி, உயில் பதிவு செய்வதற்கான ஏற்பாடு இல்லை. இதன் பொருள் பதிவு செய்யப்படாத உயில் கூட சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். அது போலியானது அல்லது வலுக்கட்டாயமாக எழுதப்பட்டது என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், அது நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனால் தான் பல பெற்றோர்கள் இன்னும் தங்கள் சொத்தை உயில் வடிவில் தங்கள் வாரிசுகளுக்குக் வழங்குகிறார்கள். சிலர் அந்த உயிலை தங்கள் பெயரில் பதிவு செய்து கொள்கிறார்கள்.
அதேபோல், பலருக்கு எழும் மற்றொரு கேள்வி என்னவென்றால், 2005ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின்படி, மகள்களுக்கும் மகன்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு. இருப்பினும், ஒரு தந்தை தனது தனிப்பட்ட சொத்தில் உயில் எழுதும் விஷயத்தில், சொத்து அவர் குறிப்பிட்டவர்களுக்குச் செல்கிறது. தந்தை உயில் எழுதாமல் இறந்தால், அனைத்து மகன்களுக்கும் மகள்களுக்கும் சம பங்கு கிடைக்கும். சில சந்தர்ப்பங்களில், ஒரு தந்தை தனது உயிலில் தனது அனைத்து சொத்துக்களையும் குறிப்பிடாமல் இருக்கலாம்.



