ஜீரோ முதலீடு அதிக லாபம் டிஜிட்டல் உலகில் நிபுணத்துவம் பெற வைக்கும் புதிய தொடர் 4
இமெயில் மார்கெட்டிங், மற்ற டிஜிட்டல் மார்கெட்டிங் முறைகளை காட்டிலும் பழமையான முறை தான், இருப்பினும் 4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இமெயில் மார்கெட்டிங்கை பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் இமெயில் மார்கெட்டிங் முறை எப்போதுமே குறைந்தபட்ச உத்தரவாதம் தரக்கூடிய மார்க்கெட்டிங் முறை ஆகும். மேலும் இது மற்ற முறைகளை காட்டிலும் செலவு குறைந்த முறையாகும்.
இமெயில் மார்கெட்டிங் என்றால் என்ன ?
தயாரிப்பு மற்றும் சேவையை பற்றி வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த அவர்களின் இமெயில் முகவரிக்கு தகவல்களை அனுப்புவதே இமெயில் மார்கெட்டிங். நாம் அனைவருமே தெரிந்தோ தெரியாமலோ இணையத்தைப் பயன்படுத்தும் போது நம்முடைய தகவல்களை ஆங்காங்கே விட்டுச் செல்கிறோம்.
உதாரணமாக செய்தி இணையதளங்களை பயன்படுத்தும் போது ஷிவீரீஸீ வீஸீ செய்யச் சொல்லி ஒரு பாப்அப் தோன்றும், நாமும் தொடர்ந்து செய்திகளை பெற இமெயில் மற்றும் மொபைல் நம்பர் ஆகியவற்றை தந்து விடுவோம்.
அவ்வாறு பதிவிடும் இமெயில்களுக்கு, அந்த இணையத்திலிருந்து தொடர்ந்து இமெயில்கள் வந்து கொண்டே இருக்கும். இதேபோல் நாமும் நம்முடைய வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளை சேகரிக்க முடியும். அவ்வாறு சேகரிக்கப்பட்ட இமெயில்களுக்கு ஈமெயில் மார்க்கெட்டிங் செய்யும் கருவிகளை கொண்டு நம்முடைய சேவை அல்லது தயாரிப்பின் தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் அனுப்ப முடியும். (பல இணையதளங்கள் இமெயில்களை, விற்பனை செய்கின்றன. ஆனால் இமெயில்களை விற்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றமாகும்.)
சாதாரணமாக ஜிமெயில், யாஹூ போன்றவற்றை பயன்படுத்தி குறிப்பிட்ட அளவிலான இமெயில் முகவரிகளுக்கு மட்டுமே ஒரே நேரத்தில் இமெயில்களை அனுப்ப முடியும். மாறாக அதிகமான இமெயில் முகவரிகளுக்கு ஒரே நேரத்தில் இமெயில்களை அனுப்பினால் அவை spam ஆக மாறக்கூடும். எனவே அதிகமான இமெயில் முகவரிகளுக்கு ஒரே நேரத்தில் இமெயில்களை அனுப்ப இமெயில் மார்க்கெட்டிங் செய்யும் கருவிகளைப் பயன்படுத்துவது உகந்தது .
Mail Chimp (மெயில்சிம்ப்), Constant Contact (கான்ஸ்டண்ட்கான்டாக்ட்), Sendinblue (சென்ட்இன்புளு), Get Response (கெட்ரெஸ்பான்ஸ் ) மற்றும் SendGrid (சென்ட்கிரிட்) ஆகியவை சிறந்த இமெயில் மார்க்கெட்டிங் கருவிகளாக கூறலாம். இமெயில் மார்கெட்டிங் என்பது நேரடி மின்னஞ்சல்கள், செய்தி மடல் மின்னஞ்சல்கள், பரிவர்த்தனை மின்னஞ்சல்கள் என பல்வேறு வகைகளில் உள்ளது.
Direct Email (நேரடி மின்னஞ்சல்கள்)
உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றி நேரடியாகப் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் நேரடி மின்னஞ்சல்கள் ஆகும். பெரும்பாலும் இவை சலுகைகள், கூப்பன்கள் மற்றும் தள்ளுபடிகள் பற்றி கூறும் மின்னஞ்சல்கள் ஆகும்.
Newsletter Email (செய்தி மடல் மின்னஞ்சல்கள்)
செய்திமடல் மின்னஞ்சல்கள் வாடிக்கையாளர்களுடன் உரையாடலை உருவாக்கப் பயன்படுகின்றன. செய்திமடல் மின்னஞ்சல்கள் ஒரு நிறுவனத்தை பற்றிய பின்னூட்டம் , அறிக்கை அல்லது ஆய்வு பற்றியதாக இருக்கலாம்.
Transactional Emails (பரிவர்த்தனை மின்னஞ்சல்கள் )
நாம் டிக்கெட் புக்கிங் செய்யும் இணையதளங்களை பயன்படுத்தும் போது, உறுதி (Confirmation) செய்வதற்காக இமெயில்கள் அனுப்பப்படும். இது போன்ற மின்னஞ்சல்கள் பரிவர்த்தனை மின்னஞ்சல்கள் ஆகும்.
இமெயில் மார்க்கெட்டிங் முறையில் ஒரு சேவை அல்லது தயாரிப்பு அதன் சரியான வாடிக்கையாளரை (Direct Audience) சென்றடையும். இந்த முறையில் சேவை (அ) தயாரிப்பின் மின்னஞ்சல் எத்தனை நபர்களை சென்றடைந்தது, எத்தனை நபர்கள் பதிலளித்துள்ளனர் போன்ற அனைத்து தகவல்களையும் துல்லியமாக கணக்கிடமுடியும். இந்த முறையில் உங்கள் சேவை (அ) தயாரிப்பை குறைந்த செலவில் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய செய்யலாம்.
எனவே சிறு, குறு தொழில் செய்வோரும் இந்த மார்க்கெட்டிங் முறையை பயன்படுத்த முடியும். இந்த முறையை பயன்படுத்தும் போது வாடிக்கையாளருக்கும், நிறுவனத்திற்கும் நேரடி தொடர்பு ஏற்படும். எனவே நிறுவனத்தின் சேவை (அ) தயாரிப்பின் நிறை குறைகளை உடனுக்குடன் நிறுவனத்தால் தெரிந்து கொள்ள முடியும். இது சேவை (அ) தயாரிப்பின் தரத்தை உயர்த்த உதவுகிறது.
-தேவா கேசவன்
முந்தைய தொடரை வாசிக்க…
ஜீரோ முதலீடு அதிக லாபம்… டிஜிட்டல் உலகில் நிபுணத்துவம் பெற வைக்கும் புதிய தொடர் 3