திருச்சியில் 100 ஆண்டுகளை கடந்த பிசினஸ்கள் 🔥💐👌
திருச்சிராப்பள்ளியில், 3800 மில்லியன் ஆண்டுக்கு முற்பட்ட உலகில் மிகவும் பழமையான பாறையை கொண்டது மலைக்கோட்டை & இயற்கை..!
ஆயிரம் ஆண்டுகளை கடந்த ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் திருக்கோவில், நத்தர்ஷா பள்ளி வாசல்.. 800 ஆண்டுகளை கடந்த ஜம்புகேஸ்வரர் கோவில் என்றழைக்கப்படும் திருவானைக்கோவில் இன்ன பிற… இவையெல்லாம் ஊர் கூடி தேர் இழுத்தப் பணி..!
300 ஆண்டுகளை கடந்த ராணி மங்கம்மாள் அருங்காட்சியம், 200 ஆண்டுக்கும் முற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்லூரிகள், பள்ளிகள் & இவையெல்லாம் வெகுஜன கட்டமைப்புகள்..!
திருச்சிராப்பள்ளியில் இப்படியான ஆண்டுகள் கடந்த வரலாற்றை ஆராய்ந்தால் ஏராளமாக கொட்டிக் கிடக்கிறது. ஆம்.. கி.மு. 3ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட உறையூரை தலைநகராக கொண்ட சோழர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியை கொண்டது திருச்சிராப்பள்ளி..! எனில் நாம் உணர்ந்து கொள்ளலாம் திருச்சிராப்பள்ளியின் முதுமையை..!
இப்படிப்பட்ட தொன்மையை கொண்ட திருச்சியில் நீண்ட தலைமுறையை கடந்த வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்தால், 100 ஆண்டுகள் கடந்த வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கையே 100ஐ தொடவில்லை..! நீண்ட நெடிய தலைமுறை தொட்டுத் தொடரும் வர்த்தக சங்கிலி எங்கெல்லாம் அறுபடுகிறது..?
“என் தந்தையார் மாட்டு வண்டி சக்கரம் செய்யும் தொழில் செய்து வந்தார். எனக்கு படிப்பில் நாட்டம் இல்லாததால் நான் பள்ளிக் கூடம் போகவில்லை. எங்கள் கடையிலேயே நான் வண்டிச் சக்கரம், மர வேலை செய்தேன். மாட்டு வண்டியின் பயன்பாடு குறைந்து போனதால் வருவாயும் குறைந்து போனது. மர வேலைப்பாடுகள் இயந்திரமயமாகின. கதவுகள், மர வேலைப்பாடுகளெல்லாம் சுத்தியல், உளியை நம்பி செய்யப்பட்டது போய் இப்போது கடைசல் இயந்திரமயமாகிவிட்டது. நான் அந்த வளர்ச்சி பாதையில் போகத் தெரியாமல் இன்னமும் சுத்தியில், உளி என்றே என் காலம் போய் விட்டது. என் தந்தை இறந்தபின் கடையை விற்றுவிட்டோம். இப்போது நான் மரச் சாமான்கள் செய்யும் கடை ஒன்றில் வேலை செய்கிறேன்”.. – இது ஒரு தச்சரின் வார்த்தை.
வளர்ச்சிக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளாமல் போனதால் 100 ஆண்டை தொடுவதற்குள் வண்டிச் சக்கர கடையின் அடையாளம் அழிந்து போனதன் கதை.!
“என் தாத்தா தமிழ் மருந்து கடை நடத்தி வந்தார். அவருக்குப் பின் என் தந்தை அந்த கடையை நிர்வகித்து வந்தார். நான் பட்டப்படிப்பை முடித்து அரசு வேலை பெற்றேன். மக்கள் ஆங்கில மருத்துவ சிகிச்சையை நாடியதால் எங்கள் கடையில் சொல்லிக் கொள்ளும்படி விற்பனை இல்லை. அதனால் கடையை விற்று விட்டோம். இப்போது அங்கு ஒரு மளிகை கடை இயங்கி வருகிறது”. –
பொருளாதார தேவையினால் தலைமுறை அறுந்து போன தமிழ் மருந்து கடையின் கதை.!
“ஆரம்பத்தில் என் தாத்தா கூடையில் பூவை தூக்கிக் கொண்டு தெருத் தெருவாக விற்று வந்தார். அவரைத் தொடர்ந்து என் தந்தையும் பூ வியாபாரம் செய்தார். மார்க்கெட்டில் கடை கிடைக்க விற்பனையும் நன்றாக இருந்தது. வருவாயும் நன்றாக இருந்தது. பூ வியாபாரத்தில் அப்பா சம்பாதித்த வருவாயிலிருந்து தான் நான் இன்ஜினியரிங் படித்தேன். படிப்பிற்கேற்ற வேலை கிடைத்தது. அப்பா இறந்த பின் கடையை கொடுத்து விட்டோம்”. ரிலே ரேஸ் போல் வேறு ஒரு தலைமுறை அந்த பூக்கடையை கடத்திச் செல்கிறது”. –
விற்பனை குறைவின்றி நடந்தாலும் அடுத்த தலைமுறைக்கு முன்னோர்களின் தொழிலில் நாட்டம் இல்லாமல் போனதால் தலைமுறை அறுந்து போன அடையாளம் மாறாத பூக்கடையின் கதை.
இது போல் ஒரு கடையின் வர்த்தகத் தொடர் பாதை அறுந்து, திசை மாறிப் பயணப்படும் கதைகள் ஏராளமாய் உள்ளது. இவையெல்லாவற்றையும் தாண்டி 100 ஆண்டுகளை கடந்து செல்வதென்பது சற்றே கவனம் கொள்ள வேண்டிய விஷயம் தான்.!
திருச்சியில் ஒரு நாட்டு மருந்து விற்பனை செய்யும் கடை… 100 ஆண்டு கடந்தது. ஆனால் அவர்களோ, ” இருக்கிற சொத்தெல்லாம் அழிந்தது தான் மிச்சம். சொல்வதற்கு எதுவும் இல்லை“ என அங்கலாப்பாய் சொல்லி அனுப்பிவிட்டார்.
திருச்சி மாநகரில் 130 ஆண்டுகளை கடந்த எம்.என்.நாகேந்திரன் & சன்ஸ் பட்டுக்கடை, 112 ஆண்டுகளை கடந்த பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ், 100 ஆண்டுகளை கடந்த யானை மார்க் நெய் மிட்டாய் கடை, ஷி.மாணிக்கம் செட்டியார் ஷி சன்ஸ் பருப்பு வியாபாரம் செய்யும் கடை, அப்பாய் மளிகை என சில கடைகள் 100 ஆண்டை கடந்தும் நிற்கிறது.
தமிழர்கள் பட்டுப் பாரம்பரியத்துடன் வளர்ந்தவர்கள். திருமணத்திற்கு பட்டுப்புடவை வாங்க வசதி இல்லாவிட்டாலும் பட்டு மாதிரியான புடவையை கட்டித் தான் திருமணம் நடத்துகிறார்கள். அத்தியாவசியத் தேவையான மளிகை விற்கும் கடைகள். விரும்பி உண்ணும் இனிப்பு, காரம் விற்கும் கடைகள் என மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத சில அத்யாவசியத் தேவைகள் கொண்ட கடைகள் மட்டும் நிலைத்து நிற்பதாகவே தெரிகிறது.
இரு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து 100 ஆண்டுக்கு முன்பு தொடங்கிய எண்ணெய் மில் மற்றும் விற்பனை நிலையம். நான்காவது தலைமுறையாக இன்றும் அவர்களின் வாரிசுகள் மதவேறுபாடின்றி அதே பந்தத்துடன் வியாபாரத்தை நடத்தி வருகிறார்கள்.
நாம் சந்திக்க முடிந்தது குறைவானவர்களையே. ”தரம், நியாயமான விலை, உரிமையாளர்கள் அனைவரிடமும் குறையாத உழைப்பு, இன்முகம் குறையாத அணுகுமுறை, வாடிக்கையாளர்களிடம் தலைமுறை தாண்டிய நல்லுறவு, கடை ஊழியர்கள் மீதான குடும்ப ரீதியான நட்பு..” இதைத் தாண்டிய வியாபார யுக்தி பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதே அனைவரின் கூற்று.
நூறாண்டு கடந்த வர்த்தகம்..! ஆராய்ந்தால், மனித உறவுகள், உணர்வுகள், தொழில் வளர்ச்சி, தமிழர்களின் வரலாறு என ஏராளமாக அறிந்து கொள்ளலாம்.! தொடர்ந்து ஆராய்வோம்.! அறிந்து கொள்வோம்..! “வர்த்தக அறிவு“ வேண்டும் என்றால் அனுபவஸ்தர்கள் பற்றி அறிந்து கொள்வது தானே முதல் அறிவு.!
பயணம் தொடரும் –