Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் பட்டுக் கடை…(“மலைக்கோட்டை வாசலில் உள்ளே கடை”)

நான்கு தலைமுறைகள் தாண்டிய பயணம்

1

“மலைக்கோட்டை வாசலில் உள்ளே கடை” என்று கூறினாலே அனைவருக்கும் தெரியும் அது திருச்சி, மலைக்கோட்டை நுழைவாயிலில் அமைந்திருக்கும் எம்.என்.நாகேந்திரன் & சன்ஸ் பட்டுக் கடை தான் என்று.!

1890க்குப் முன்பு நரசிம்மன் என்பவரால் அவரது புதல்வர் நாகேந்திரனின் பெயரிலேயே தொடங்கப்பட்டது எம்.என்.நாகேந்திரன் & சன்ஸ் பட்டுக் கடை. நரசிம்மனை தொடர்ந்து நாகேந்திரன், அடுத்து குப்புசாமி, அதையடுத்து குப்புசாமியின் புதல்வர்கள் பத்மநாபனும் ஸ்ரீகீர்த்தியும் கடையை நிர்வகித்து வந்தனர். தற்போது அவர்களின் வாரிசுகள் முரளிதரணும், விஷாலும் கடையை நடத்தி வருகின்றனர்.

4

மலைக்கோட்டை வாயிலில் உள்ளே சென்றதும் வலதுபுறத்தில் உள்ள பட்டுக் கடையில் நுழைந்தால் எளிமையான தோற்றத்துடன் கடை அமைந்திருக்கும். “பட்டுப்புடவை வேண்டும்” என்று சொல்லிப் பாருங்கள், பட்டின் பிரம்மாண்டம் நம் கண்களை அகல விரியச் செய்யும். கடையின் உட்புறச்சூழல் பழமையை கண்முன் நிறுத்தும்.

3

கடையில் உட்புறத்தில் அமைந்துள்ள கதவுகளில் எழுதப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துக்கள் கடையின் வரலாற்றை பிரதிபலிப்பதாக இருக்கும். தமிழ் பாரம்பரியத்தை மறக்காது, வரும் வாடிக்கையாளர்களை பாய் விரித்து அமரச் செய்து சலிப்பின்றி அவர்கள் கேட்கும் வண்ணம் புடவைகளை அடுத்தடுத்து காண்பித்து அசரடிக்கின்றனர்.

உங்கள் கடையில் எவ்வளவு ரூபாயிலிருந்து பட்டுப்புடவைகளின் விலை தொடங்குகிறது?
திருமண விசேஷத்திற்கு தேவையான அனைத்து வகையான பட்டுப்புடவைகளை ரூ.3,000 முதல் ரூ.1 லட்சம் வரையில் விற்பனை செய்வதால் வாடிக்கையாளர்களின் பட்டுத் தேவை பூர்த்தியாகிறது. அத்துடன் வேஷ்டி, துண்டு என விசேஷத்திற்குத் தேவையான அனைத்து பட்டுத் துணிகளும் இங்கு கிடைக்கிறது.
நான்கு தலைமுறை கண்ட இந்நிறுவன வளர்ச்சிக்கு என்ன காரணம்
“பட்டு மாதிரியான புடவைகள் எங்களிடம் கிடையாது. பட்டுப் புடவைகள் மட்டுமே இங்கு உள்ளது” என்கிறார் கடையின் உரிமையாளரில் ஒருவரான விஷால்.

“நவீன நாகரித்திற்கு ஏற்ப கடையின் உட்கட்டமைப்பை மாற்றி, கடையை வளர்க்க முயற்சிக்காமல் பழமையான பாரம்பரியம் கெடாமல், தரத்தில் குறைவின்றி வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப புடவை, துணிகளை தருவித்து விற்பனை செய்வது தான் எங்களின் நிலைத் தன்மைக்கு காரணம்.! “கடையை பெரிதாக வளர்க்கிறேன் என்ற முயற்சியில் பெயரை கெடுத்து விடாதீர்கள்” என்று தந்தை கூறுவார்.

2

இதன் உற்பத்தி பொருளை எங்கிருந்து தருவிப்பீர்கள்?
காஞ்சிபுரம், திருபுவனம், அய்யம் பேட்டை, சேலம், இளம்பிள்ளை, ஜலகண்டபுரம், மதுரை ஆகிய உள்ளிட்ட பல இடங்களில் நாங்களே நேரடியாக தறி நெய்து பட்டுப்புடவைகளை தருவித்து தருகிறோம். இதற்கான பட்டு இழைகளை சூரத்திலிருந்து பெறுகிறோம். முன்பு ஒன்பது கஜம் வரை புடவைகள் தயாரித்து விற்றோம். ஆனால் இப்போது மடிசார் கட்டும் பிராமணர்கள் எண்ணிக்கையும் குறைந்து போனதால் ஒன்பது கஜம் என்பது ஆறு கஜமாக குறைந்துள்ளது.

திருமண பட்டுப்புடவையில் தற்போதைய பேஷன் என்ன?
திருமணத்திற்கு ஒன்பது கஜம் தேவைப்படுவோருக்கு புடவை, மணமக்களின் பெயர் பொறித்த புடவை, மணமக்களின் புகைப் படங்கள் கொண்ட பட்டுப்புடவைகள் என அனைத்தையும் ஆர்டரின் பெயரில் தயாரித்து தருகிறோம்.
சிலர் விசேஷத்தின் போது அணிய ஒரே வண்ணத்தில், டிசைனில் பத்துக்கும் மேற்பட்ட புடவைகள் கேட்பார்கள். அவர்களுக்கும் நாங்கள் எத்தனை புடவைகள் என்றாலும் புதியதாக நெய்து தருகிறோம்.

வாடிக்கையாளர் அணுகுமுறையில் உங்கள் பெரியோர் சொன்ன அறிவுரை என்ன?
கடையில் ஏசி அமைத்து, கூல்டிரிங்க் கொடுத்து என புதிதாக எந்தவித அணுகுமுறையையும் நாங்கள் பின்பற்றுவதில்லை. எங்கள் கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா எப்படி வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் அணுகுகினார்களோ அதையே அவர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்கள். அதையே தான் நாங்களும் வழிவழியாக கடைபிடித்து வருகிறோம்.

பொதுவாக திருமணத்திற்கு துணி எடுக்க வருகிறார்கள் என்றால் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என சுமார் பத்து, இருபது பேர் வருவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துடன் துணிகளை தேர்வு செய்வார்கள். அனைவரின் கருத்தையும் புறக்கணிக்காமல் இன்முகத்துடன் பேசி வியாபாரம் செய்து வருகிறோம்.

பெரிய பட்டு நிறுவனங்கள் டிவிகளில் அதிக விலை கொடுத்து விளம்பரம் செய்கிறார்கள். அதையும் தாண்டி உங்கள் கடைக்கு வாடிக்கையாளர்கள் வர என்ன காரணம்?
எங்கள் விற்பனைக்கான பெரிய விளம்பரமே எங்கள் பாரம்பரிய வாடிக்கையாளர்கள் தான். இரண்டு தலைமுறைக்கு முந்தைய எங்கள் வாடிக்கையாளர்கள், இன்றைய தலைமுறையினரிடம் எங்கள் கடை பெயரை சொல்லி “அங்கே சென்று பட்டுத் துணிகளை வாங்குங்கள்” என சொல்லி அனுப்பி வைப்பார்கள். மூத்த வாடிக்கையாளர்கள், “உங்கள் கொள்ளுத் தாத்தாவிடம் நாங்கள் துணி வாங்கியிருக்கிறோம்” என்று சொல்வார்கள். அது எங்களுக்கு மிகுந்த பெருமையாக இருக்கும். எங்கள் பாரம்பரியத்தை உணர்த்தும்.

இணையதளம் மூலம் பட்டுதுணி விற்பனை எளிதானதா?
பிற பட்டுத் துணி விற்பனையாளர்கள் இணையதளங்களின் மூலம் பட்டுத் துணிகளை விற்பனை செய்வார்கள். டெலிவரியின் போது டிஸ்ப்ளேயில் பார்க்கும் கலரில் இல்லாமல் புடவை வேறு வண்ணங்களில் இருக்கும். இதனால் பெரும்பாலான புடவைகள், துணி வகைகள் ரிட்டன் ஆகும். ஆனால் நாங்கள் பெரும்பாலும் நேரில் காண்பித்தே துணிகளை விற்க முயற்சிப்போம் என்றார்.

5

Leave A Reply

Your email address will not be published.