திருச்சியை கலக்கும் 2 ரூபாய் தோசை
இரவு 10 மணி. பசியோடு நின்று கொண்டிருந்த நம்மிடம், “இரண்டு ரூபாய் தோசை கடைக்கு போகலாமா” என்றார் என் நண்பர். “இரண்டு ரூபாய்க்கு இட்லி தருவதே பெரிய விஷயம். இரண்டு ரூபாய்க்கு தோசையா..? எப்படி தருகிறார்கள் என்ற ஆச்சர்யத்தை போக்க, அந்த கடைக்கே அழைத்துச் சென்றார் நண்பர்.
இருசக்கர வாகனத்தில் இரண்டு ரூபாய் தோசை கடையை நோக்கி செல்லும் வழி முழுக்க, எனக்கு ஒரு யோசனை..! இரண்டு ரூபாய் தோசை எப்படி இருக்கும், எப்படி கட்டுப்படியாகும், ஒரு வேளை தோசை மட்டும் இரண்டு ரூபாய் என்று சொல்லி மற்றவற்றின் விலையை கூட்டியிருப்பாரோ என்றெல்லாம் மனதிற்குள் எண்ணம்.
திருச்சி, உறையூர் போலீஸ் ஸ்டேஷன் வழியாக பாண்டமங்கலம் அரசமரத்தில் இருந்து இடதுபுறம் சென்று கல்நாயக்கன் தெருவுக்கு முன் பகுதியில், குடிசையோடு, பெரிய விறகு அடுப்புகளோடு, தெரு முழுக்க கூட்டமாக காட்சியளித்தது இரண்டு ரூபாய் தோசை கடை. இரண்டு ரூபாய் தோசை கடை. அப்பகுதியில் செம்ம ஃபேமஸ் என்பது அங்கு சென்ற பின்பு தான் தெரிந்தது. சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை இரண்டு ரூபாய் தோசையை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
2 செட் ஆனியன் தோசை ஆர்டர் செய்துவிட்டு கடை உரிமையாளரிடம் பேசினோம். உரிமையாளர் சின்னத்தம்பி நம்மிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, கோணப்பட்டி பகுதியைச் சேர்ந்த நான் திருச்சிக்கு வந்து ஹோட்டலில் பணிபுரிந்தேன். ஆறு வருடத்திற்கு முன்பு ஹோட்டல் நடத்தலாம் என்று முடிவு செய்து தொடங்கினோம். 3 வருடத்திற்கு முன்பு வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல என்ன முயற்சி மேற்கொள்ளலாம் என்று யோசிக்கும் பொழுது உதயமானது தான் மலிவு விலை தோசை எண்ணம்.
அதே சமயம் மலிவு விலை தோசை என்று தொடங்கினால் எப்படி கட்டுப்படியாகும் என்று யோசித்தோம். குடும்பமே சேர்ந்து உழைக்கத் தொடங்கினோம். என் மனைவி வெள்ளையம்மாள், மகள் முத்துலட்சுமி, மற்றொரு மகள் சங்கீதா என நான்கு பேரும் இணைந்து வேலையை செய்தோம். இதனால் சம்பளக் காசு மிச்சம்.
தரம் குறையாமல் தரும் மலிவு விலை தோசையினால் விற்பனை நன்றாக இருக்கிறது. லாபம் பெரிதாக இல்லாவிட்டாலும் மனத் திருப்தி கிடைக்கிறது.
2வது மகள் 11 வகுப்பு படித்து வருகிறார், அவரும் பள்ளி சென்று வந்த பிறகு கடையைக் கவனித்துக் கொள்வார். தினமும் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் பணி இரவு 11 மணி வரை செல்லும், ஒவ்வொரு நாளும் எங்களுக்குள் குடும்பமாக இணைந்து வேலை செய்கிறோம்” என்றார்.
இப்பகுதி மக்கள் மட்டுமில்லாமல் 2 ரூபாய் தோசை செய்தி கேள்விப்பட்டு மற்ற பகுதிகளிலிருந்து கூட சாப்பிட வருகின்றனர். தோசை இரண்டு ரூபாய், முட்டை தோசை 5 ரூபாய், ஆனியன் தோசை 4 ரூபாய், பொடி தோசை 3 ரூபாய், புரோட்டா 7 ரூபாய் என்று மட்டும் இல்லாது கடையில் விற்கும் ஒவ்வொன்றுமே மலிவு தான். ருசியோ மீண்டும் மீண்டும் வரச் செய்கிறது. நீங்களும் ஒரு நடை போய் சாப்பிட்டு வாங்க..!
-இப்ராகிம்