120 ஆண்டுகளை கடந்த திருச்சியில்
எலும்பு மூட்டு சிகிச்சை !
ஒரு தொழிலில் நீண்ட காலம் நிலைத்திருப்பதற்கு எத்தகைய அணுகுமுறை தேவையோ அதைத் தாண்டிய ஒருபடிநிலை வேண்டும் பரம்பரையான மருத்துவத் தொழில் புரிய..!
அத்தகையதொரு அணுகுமுறையை கொண்டு ஏழுதலைமுறைகளாக சுளுக்குதளை சரி செய்யும் பரம்பரையாக உள்ளது ஏ.எம்.ஏ.பாபுவின் குடும்பம்.
புதுக்கோட்டை அரசு குடும்பத்திற்கு வைத்தியராக பணியாற்றியவர் அசன்ஷா. தொடர்ந்து உசன்ஷா, இப்ராம்ஷா, அப்துல் ஹமீது, குத்தூஸ் என அடுத்தடுத்த வாரிசுகள் மருத்துவப் பணியில் கால்பதித்து 120 ஆண்டுகளை கடந்து தொடர்கின்றனர். பாபுவிற்கு பிறகு அப்துல்ஹக்கீமும் சுளுக்கு வைத்தியத்திற்கு பயிற்சி பெற்று வருகிறார். ஏழாவது பரம்பரையான பாபு மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மருத்துவர் பாபு கூறுகையில், நான் ஒரு பேராசிரியர். ஆரம்ப காலத்தில் சித்த மருத்துவ முறையினை கையாண்டு சிகிச்சை அளித்து வந்தோம். அதுமட்டுமல்லாது அக்குபஞ்சர், அக்குபிரஷர், சுளுக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பது, எலும்பு நரம்பு சார்ந்த பிரச்சனையை சரி செய்வது போன்ற சிகிச்சைகளை எங்கள் முன்னோர்கள் செய்து வந்தனர். அக்குபஞ்சர், அக்குபிரஷர், பாரம்பரிய முறை, கைரோ பிரஷர், டான்தெரப்பி, வர்மா போன்ற முறைகளில் சிகிச்சை அளித்து வருகிறேன். நான் இந்தத் துறையில் டாக்டரேட் முடித்திருக்கிறேன்.
ஆரம்பம் முதலே எங்கள் குடும்பம் இதை சேவையாக செய்து வருகிறது. தற்போது நானும் அப்படியே செய்து வருகிறேன். சிகிச்சை பெறுவோரிடம் பெரிதாக கட்டணம் வசூலிப்பதில்லை. இது வரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தி இருக்கிறேன்.
ஆங்கில மருத்துவ மோகம் அதிகரித்த காலத்தில் பெரும்பாலோர் அங்கே சென்று சிகிச்சை பெற்று வந்தனர். ஏழை எளியோர் மட்டுமே எங்களை நாடுவர். ஆனால் சித்த மருத்துவ சிகிச்சையிலும் பாரம்பரிய மருத்துவ சிகிச்சையிலும் மக்களின் பார்வை திரும்பியதை அடுத்து தற்போது ஏராளமானோர் எங்களிடம் சிகிச்சை பெற வருகின்றனர். அக்குபஞ்சர், அக்குபிரஷர், வர்மாபோன்ற சிகிச்சை முறைகள் மீதும் மக்களின் பார்வை திரும்ப தொடங்கியிருக்கிறது என்கிறார் பெருமையுடன் பேராசியர் பாபு.!