உலகில் உள்ள பெரும் பணக்காரர்களை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு வருமானம் வரும் வழி என்பது ஒன்றாக இருக்காது; பலவாக இருக்கும். பல வழிகளில் பணம் வந்ததால் அவர்கள் பணக்காரர்களாகி இருக்கிறார்கள்; தொடர்ந்து பணக்காரர் களாகவும் இருக்கிறார்கள்.
ஒருவருக்கு பல வகைகளில் வருமானம் வருவது முக்கியம். அப்படி இருந்தால்தான் இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை நடத்த முடியும். இந்தப் பல வகை வருமான வழிகள் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமானது மட்டுமல்ல, நடுத்தர வருமானப் பிரிவினரும் பல வழிகளில் வருமானம் ஈட்ட முடியும். அவர்கள் எந்தெந்த வழிகளில் வருமானங்களை ஈட்ட முடியும் என்பதைப் பார்ப்போம்.
1. முதன்மை வருமானம்…
ஒருவருக்கு அவரின் முதன்மையான வருமானம் (primary income) என்பது வேலை அல்லது தொழில் மூலம் வருவதாக இருக்கிறது. இந்த முதன்மையான வருமானம் என்பது ஒருவரின் மொத்த வருமானத்தில் சுமார் 60% முதல் 75 சதவிகிதமாக இருக்கும். இந்த வருமானத்தின் அடிப்படையில்தான் நம் குடும்பச் செலவுகளை பிரதானமாக ஈடுகட்டி வருகிறோம். இந்த வருமானம் பற்றி நம் அனைவருக்கும் தெரியும் என்பதால், அது பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை.
2. ராயல்டி வருமானம்…
சிலருக்குக் கூடுதலாக எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை மற்றும் குறிப்பிட்ட துறையில் சிறப்பான அறிவு இருக்கும். இதைக் கட்டுரை யாக எழுதித் தருவதன்மூலம் வருமானம் சம்பாதிக்கலாம். அல்லது, ஒரு யூடியூப் வீடியோவில் பேசி, அதைப் பதிவேற்றுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். இப்படி வரும் வருமானம் மாதம்தோறும் இவ்வளவு வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. என்றாலும், புதிதாக நீங்கள் யோசித்து, புதிய சிந்தனைகளைத் தொடர்ந்து தருவதன் மூலம் உங்கள் வருமானம் வந்து கொண்டே இருக்கும். இதைச் செயலற்ற வருமானம் (passive income) என்பார்கள்.
3. பொருள்கள், சேவைகள் விற்பனை…
அதிகம் பேர் படிக்கும் இணையதளத்தை நடத்தும் பட்சத்தில் அதில் மற்றவர்களின் பொருள்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்வதன்மூலம் கமிஷன் கிடைக்கும். இதற்கு நீங்கள் ஒருமுறை சில விஷயங்களைச் செய்துவிட்டால் போதும். அதன் பிறகு, வருமானம் என்பது தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். மேலும், இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள் மூலமும் பொருள்களை விற்று வருமானம் ஈட்ட முடியும்.
4. வாடகை மூலமாக வருமானம்…
சிலருக்கு சொந்த வீடு இருக்கும். அதில் ஒரு பகுதியில் நீங்கள் இருந்துகொண்டு மீதமுள்ள பகுதியை வாடகைக்கு விட்டிருப்பார்கள். இதன் மூலமும் கணிசமான வருமானம் கிடைக்கும். வாடகைக்கு வீடு கட்டி விட்டு வருமானம் பார்க்கிறவர்கள் நம் ஊரில் நிறைய பேர் இருக்கிறார்கள். வர்த்தகக் கட்டடங்களை வாடகைக்கு விடுவது மூலமும் அதிகம் பேர் அதிக வருமானம் ஈட்டி வருகிறார்கள்.
5. முதலீடு மூலமாக வருமானம்…
முதன்மை வருமானமான சம்பள வருமானம், பிசினஸ் வருமானம், வாடகை வருமானம் ஆகியவற்றை ஃபிக்ஸட் டெபாசிட், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்வது மூலம் வருமானம் கிடைக்கும். இந்த முதலீடுகள் மூலம் வட்டி / வருமானம், டிவிடெண்ட், மூலதன ஆதாயம் ஆகியவை கிடைக்கும். இப்படி ஒருவர் முதலீடு செய்யும்போது அவர் விரைவிலேயே கோடீஸ்வரர் ஆகிவிட முடியும்.
6. நிபுணத்துவ ஆலோசனை…
சிலருக்கு குறிப்பிட்ட துறையில் பழுத்த அனுபவம் மற்றும் அறிவு இருக்கும். இதை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள கட்டணம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். டாக்டர்கள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள், நிதி ஆலோசகர்கள் எனப் பலதரப்பினர் இந்த முறையில் தொடர் வருமானத்தைப் பெறுபவர்களாக இருக்கிறார்கள். இதேபோல், தனிமனிதர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதுடன், தொழில் நிறுவனங் களின் சிக்கலைத் தீர்ப்பது, கடன் வாங்க ஆலோசனை அளிப்பது மூலமும் வருமானம் ஈட்ட முடியும்.
ஒருவர் பாடிபில்டர் ஆக இருக்கலாம். அதில் சிறந்து விளங்கி பல பரிசுகளைப் பெற் றிருக்கலாம். இந்த நிலையில், அவர் தான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது மூலம் கணிசமாகச் சம்பாதிக்க முடியும். பல பெண்கள் திருமணத்தின் போது மணப் பெண் உள்ளிட்ட வர்களுக்கு சேலை கட்டி விடுவது மூலம் சம்பாதித்து வருகிறார்கள். படிப்புக்கு நல்ல கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி என்கிற ஆலோசனையை அளித்துகூட பணம் ஈட்ட முடியும்.
இன்றைய தேதியில், இந்தியாவில் பணி ஓய்வுக்குப் பிறகும் சுமார் 60% பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இதற்கு காரணம், அவர்கள் சம்பாதிக்கும் காலத்தில் பல வழிகளில் வருமானம் ஈட்டவில்லை மற்றும் பணத்தைப் பெருக்கவில்லை என்பதாகும். ஆனால், மேலே கூறப்பட்ட ஆறு வகையான வருமானங்களை ஒருவர் சுலபமாக ஈட்ட முடியும். இவற்றில் ஓரிரு வழிகளில் வருமானம் ஈட்டினால்கூட நிதிச் சுதந்திரத்தை எளிதில் அடைய முடியும்.