சாலையோர வியாபாரிகளுக்கு ஓர் நற்செய்தி…
பாரத பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதித் திட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கடன் தொகையும் அதிகமாகக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா என்ற தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு நுண் கடன் வசதி அளிப்பதற்கான திட்டம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் வியாபாரிகள் ரூ.50,000 வரை கடன் பெற முடியும். இதில் வாங்கும் கடனை ஓராண்டு காலத்தில் மாதத் தவணைகளில் திரும்பச் செலுத்த வேண்டும். உரிய காலத்தில் இந்தக் கடன் தொகையைச் செலுத்தினாலோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கடனை திருப்பிச் செலுத்தினாலோ ஆண்டொன்றுக்கு 7 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டியில் மானியம் அளிக்கப்படும்.
உரிய காலத்திற்கு முன்னதாக கடனைத் திருப்பிச் செலுத்துவோரிடம் எவ்வித அபராதமும் வசூலிக்கப் படமாட்டாது. குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் செய்பவர் களுக்கு ஆண்டொன்றுக்கு 1,200 ரூபாய் ரொக்கம் அவர்களுக்கே திருப்பி அளிக்கப்படும். முறையாக கடனை திருப்பி செலுத்துபவர்கள் அடுத்த கட்ட கடன் வாங்கும்போது கடன் தொகை அதிகரித்துப் பெறுவதற்கு தகுதி பெறுவார்கள்.
தெருவோர வியாபாரிகள் இச்சலுகையைப் பெறுவதற்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31, மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரையிலான மாதாந்திர கேஷ் பேக் சலுகை யையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பிஎம் ஸ்வநிதி திட்டம் தொடர்பாக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்குமான ஸ்வநிதி சம்ரிதி அம்சம் நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2024 டிசம்பர் மாதம் வரை கடன் வழங்கப்படும்.
முதலாவது கடன் ரூ.10,000 இரண்டாவது கடன் ரூ.20,000 பெற்ற நிலையில் கூடுதலாக மூன்றாவது கடன் ரூ.50,000 வரை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2022 நவம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, 31.73 லட்சம் வீதியோர வியாபாரிகள், முதல் கடன் தொகையை பெற்றுள்ளனர்.
இதில் 5.81 லட்சம் பேர், ரூ.20,000 இரண்டாவது கடனைப் பெற்றுள்ளனர். மேலும் 6,926 பேர் ரூ.50,000 என்னும் மூன்றாவது கடனைப் பெற்றுள்ளனர். 2024 டிசம்பர் மாதத்திற்குள் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 42,00,000 வீதியோர வியாபாரிகள் பயன்களைப் பெற உள்ளனர். இத்தகவலை மக்களவையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணை அமைச்சர் கவுசல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.