போலி பத்திரமா… ஈசியா தெரிஞ்சுக்கலாம்
நிச்சயம் நிறைய பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் ! அந்த இடத்திற்கு டபுள் டாகுமென்ட் , இந்த பத்திரம் டூப்ளிகேட் என்று ஆனால் அவை எப்படி உருவாகிறது .அதில் இருந்து நாம் எப்படி நம்மை காப்பாற்றி கொள்ளலாம்? என்று நினைப்பவர்களுக்கு இந்த கட்டுரை மிக பயனுள்ளதாய் இருக்கும்.
வழி-1:
பெரும்பாலும் போலி ஆவணங்கள் , போலி நபர், போலி கையெழுத்து ,போலி புகைப்படம் அல்லது இவையெல்லாம் போலியாக செய்யப்பட்டு அழித்து திருத்தி மேற்சொன்ன எல்லா விசயங்களையும் சேர்த்தோ அல்லது இவற்றில் ஒன்றோ நடந்து இருக்கும். இவையெல்லாம் 1995 க்கு முன் இருக்கின்ற பத்திரங்களில் நடந்து இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை மிக முக்கியமாக நினைவில் வைக்க வேண்டும்.
1995க்கு முன்பு அடையாள அட்டை , சான்று புகைப்படம், சான்று கையெழுத்து என்று எதுவும் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. 1990 க்கு முன்பு கிரயம் கொடுப்பவரின் கையொப்பம் மட்டும் தான் பத்திரத்தில் இருக்கும். கிரயம் வாங்குபவர் கையொப்பம் இடம் பெற்று இருக்காது , 1990க்கு முன் புறம்போக்கு நிலங்களை பத்திரம் செய்து இருப்பார், 2005 க்கு பின் பத்திரத்தில் வாங்குபவர், விற்பவர் புகைப்படம் ஒட்டி இருப்பர், சமீபமாக பத்திரபதிவின் போது பதிவு அலுவலகத்தில் டிஜிட்டல் போட்டோ மற்றும் டிஜிட்டல் ரேகை அமுல்படுத்தி இருகின்றனர்.
பத்திரபதிவு துறையில் நடந்த மாற்றங்களை தேதி வாரியாக தெரிந்தால் மட்டுமே அந்த பத்திரம் ஒரிஜினலா போர்ஜரியா என கண்டு பிடிக்க முடியும். பெரும்பாலும் போலி ஆவணங்கள் உருவாக்குபவர்கள் மேற்கண்ட விசயத்தில் நிச்சயம் ஏதாவது ஒன்றை கோட்டை விட்டு விடுவார்கள்!
வழி-2:
கிரைய பத்திரங்களில், பட்டாவில் தமிழ் நாடு அரசினுடைய கோபுரமுத்திரை இருப்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். இம்முத்திரையை கவனித்து பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும் ,அது மெட்டலில் செய்யபட்ட சீலின் அச்சு என்று, இனி இதுவரை கவனிக்காதவர்கள் நிச்சயம் உங்கள் பத்திரங்களில் உள்ள சீலை பார்க்கலாம்.
பெரும்பாலும் போலி பத்திரங்கள் செய்பவர்கள் ரப்பர் ஸ்டாம்பில் தான் கோபுர முத்திரையை செய்து இருப்பார்கள் . மெட்டலில் செய்வது சற்று சிரமமான ஒன்று.
வழி-3:
இதற்க்கு முன்பு எப்படி பத்திரபதிவு துறையில் நடந்த மாற்றங்களை வரலாறு வாரியாக தெரிந்து வைத்து இருக்க சொன்னேனோ, அதே போல் பத்திரபதிவு அலுவலகத்தின் வரலாறும் , மாற்றங்களும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். உதாரணமாக சென்னை -& கொட்டிவாக்கத்தில் சொத்து இருந்தால் அதனுடைய பத்திரபதிவு அலுவலகம் அடையாறு 1981 லிருந்து 1986 வரை மேனுவல் பீரியடில் இருந்தது அதற்கு அடுத்து 1986 லிருந்து 1996 வரை கணினி பீரியட் என அடையாறு சார்பதிவகத்தில் இருந்தது .
1983க்கு முன்பு சைதாபேட்டையில் இருந்தது, 1996க்கு பிறகு இன்று வரை நீலாங்கரையில் சார்பதிவகத்தில் இருக்கிறது. அப்படியானால் ஒரு சொத்தின் வரலாறு பார்க்கும் போது அச்சொத்துடைய சர்பதிவக வரலாறையும் பார்க்க வேண்டும்.
பெரும்பாலும் டூப்ளிகேட் பத்திரம் செய்பவர்கள் இந்த சார்பதிவக மாற்றங்களில் கோட்டை விட வாய்ப்பு அதிகம், தவறான சார்பதிவக சீல்களை ஸ்டாம்ப்களை பயன்படுத்தி இருப்பார்கள் , அதன் மூலமாக போலி ஆவணங்களை கண்டுபிடிக்க முடியும்.