‘வாடகை ஒப்பந்தம்’ பதிவு ஏன்..?
வீடு வாடகைக்கு இருப்பவர்களுக்கும், வீட்டு உரிமையாளருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடுவது மிகவும் முக்கியமான ஒன்று. முன்பை விட தற்போது வாடகை ஒப்பந்தப் பத்திரம் குறித்து மக்கள் ஓரளவு விழிப்புடன் இருக்கின்றனர். காரணம், முன்பெல்லாம் ஆயிரங்களில் முன்பணம் செலுத்துவர், ஆனால் தற்போது லட்சங்களில் செலுத்துகின்றனர்.
வாடகை ஒப்பந்தத்துக்கு 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் பயன்படுத்தலாம். இந்த ஸ்டாம் பேப்பரில் கையெழுத்திடப்படும் ஒப்பந்தம் வாடகைக்கு குடியிருப்பவருக்கும் வீட்டின் உரிமையாளாருக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாக அமையும். ஆனால் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டால் வீட்டு உரிமையாளர் வாடகை தொகையை திடீரென்று ஏற்றம் செய்யவும், முன்பணம் கொடுக்கவில்லை என்று மாற்றி பேசுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
இதனை தவிர்ப்பதற்கு ஒப்பந்தத்தை பதிவு செய்வது அவசியம். பெரும்பான்மையினர் பத்திரத்தை பதிவு செய்வதில்லை. வாடகைதாரர் வீட்டு உரிமையாளார் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் விசாரணையின் போது பதிவு செய்யப்படாத பத்திரத்தை நீதிமன்றம் ஏற்காது. ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே நீதிமன்றம் அதனை முக்கியமான ஆதாரமாக கருதி வழக்கை விசாரிக்கும்.
வாடகைதாரர் வீட்டை விட்டு வெளியேறும் போது வீட்டின் உரிமையாளர் முன்பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தினால் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வீட்டின் உரிமையாளர் குடியிருப்பவர்கள் முன்பணத்தை வட்டியுடன் திருப்பிக்கொடுக்க நீதிமன்றம் உத்தரவிடும். எனவே வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை பதிவு செய்வது முக்கியமானது.