Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மும்பைக்குப் போனேன்…  முன்னேறினேன்….!!!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மும்பையின் நவி மும்பை பகுதி கார்கர் குடியிருப்பு வீடுகள். அங்கே ஒவ்வொன்றும் அண்ணாந்து பார்க்கும் அளவிலான உயரமான அடுக்குமாடி வீடுகள். காரகர் பத்தாம் எண் பிளாக். சாலையோரமாக நிரந்தரத் தள்ளுவண்டியில் சிற்றுண்டிக் கடை. “சாய் க்ருபா சவுத் இந்தியன் food சென்டர்” எனப்படும் நடைபாதை உணவகம். அங்கு அதனை நடத்தி வருபவர்கள் தமிழர்கள்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா சேரகுளம் கிராமம். தாமிரபரணி ஆறு ஸ்ரீவைகுண்டத்துடன் வளைந்து ஓடினாலும், அவர்களது சேரகுளம் கிராமம் ஆனது வானம் பார்த்த பூமி தான். நிலத்தடி நீர்க் கிணற்றுப் பாசனம். அந்தக் கிராமத்தில் இருந்து பூல் ராஜா, அவரது தம்பி செந்தில்வேல் ஆகிய இருவரும் சிறு வயதில் மும்பைக்குச் செல்கின்றனர். மும்பை தான் எங்கள் வாழ்க்கைக்கான வெற்றிப் படிகளை அமைத்துத் தந்து எங்களை அரவணைத்துக் கொண்டது எனச் சொல்கிறார் பூல் ராஜா.

பூல் ராஜா
பூல் ராஜா

அவரது பெயரில் உள்ள “பூல்” என்பது, கிராமத்தில் உள்ள “பூலுடைய சாஸ்தா” என்கிற அவர்களது குலதெய்வப் பெயரின் முதல் எழுத்துகள் ஆகும். எங்களது குலதெய்வப் பெயருடன் சேர்த்து என்னைக் குறிப்பிட்டால் தான் எங்கும்  எல்லோர்க்கும் தெரியும். வெறும் ராஜா என்று என்னைக் குறிப்பிட்டால் யாருக்கும் தெரியாது என்கிறார் அவர்,.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

பூல் ராஜா என்பவரிடம் நாம் பேசினோம்.

((??)) எந்த வயதில் மும்பைக்கு வந்தீர்கள்?

((!!!))  என்னுடைய பதினான்கு வயதில் மும்பைக்கு வந்தேன். இப்போது எனக்கு வயது முப்பத்தி எட்டு. மும்பைக்கு வந்து இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆகி விட்டன.

((??))  பதினான்கு வயதில் மும்பைக்கு வந்து முதலில் என்ன செய்தீர்கள்?

((!!!))  என்னுடைய பெரியம்மா இந்தப் பகுதியில் இட்லிக் கடை நடத்தி வந்தார்கள். தினசரி காலை நேரத்தில் நான் சைக்கிளில் சென்று இட்லி விற்று வந்தேன். சைக்கிளில் பல எரியாக்களுக்குச் சுற்றியலைந்து எளிய மக்களைத் தேடிப்  பிடித்து வியாபாரம் செய்து வந்தேன். அப்போதெல்லாம்  ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி. தினசரி நான் மட்டும் முந்நூறு இட்லி விற்று விடுவேன். இதில் ஒரு நான்கு ஆண்டுகள் சுற்றியலைந்தேன்.

((??))  அதன் பின்னர் என்ன செய்தீர்கள்?

((!!!))  என்னுடைய மாமா தினசரி பத்திரிகை மற்றும் வார இதழ் புத்தகங்கள் ஏஜென்ட் எடுத்து, நவி மும்பையில் நடத்திக் கொண்டிருந்தார். சைக்கிளில் சுற்றியலைந்து  இட்லி விற்பதில் இருந்து விலகி வந்த பின்னர், தினசரி காலையில் வீடு வீடாகச் சென்று தினசரி பேப்பர் போடும்  வேலையில் என்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்டேன். அதிகாலை மூணு மூன்றரை மணிக்கு எழுந்தாக வேண்டும். காரகர் ஏரியாவில் ஒவ்வொரு வீடாக பேப்பர் போட்டு வர காலை எட்டரை ஒன்பது மணி ஆகி விடும். பத்து மாடி, பதினைந்து மாடி, இருபது மாடி என்று அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள். பேப்பர் பண்டலைத் தோளில் சுமந்து லிப்டில் இருபது மாடிக் கட்டிடத்தின் உச்சிக்குச் சென்று விடுவேன். அங்கிருந்து இறங்கு வரிசையில் ஒவ்வொரு மாடியாகப் படிகளில் இறங்கி நடந்து வந்து கீழ்த் தளம் வரைக்குமாக ஒவ்வொரு மாடியின் ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித்தனியாக பேப்பர் போடுவேன்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

((??))  என்னென்ன மொழி பேப்பர்கள் நீங்கள் போட்டீர்கள்?

((!!!))  மராத்தி, இந்தி, இங்கிலீஸ், தமிழ் பேப்பர்கள் எங்கள் மாமாவுக்கு ஏஜென்சியில் வரும். அவைகளில் நான் மட்டும் தினசரி அறுநூறு வீடுகளுக்குப் பேப்பர் போட்டு வருவேன். அந்த அதிகாலையில் எழுந்து அத்தனை உயர மாடிகளிலும் படிகளில் கீழிறங்கி நடந்து வந்து பேப்பர் போட்ட உழைப்பு தான் இன்னமும் என்னைச் சுறுசுறுப்பாக இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

((??))  தினசரி பேப்பர் போடுவதில் இருந்து எப்போது வேறு வேலைக்கு மாறுனீர்கள்?

((!!!)  தினசரி பேப்பர் போடுவதை இப்போதும் நான் விட்டு விடவில்லை. தனியாக வேலைக்குப் பையன்கள் வைத்து போட்டு வருகிறேன். காலை மாலை இரவு என எங்களுக்கு இந்த டிபன் சென்டர் வியாபாரமே நேரம் சரியாகிப் போகும். 2௦13ல் இந்த இடத்தில் தள்ளு வண்டியில் டிபன் கடை போடத் தொடங்கினோம். இந்த இடத்தில் அதுவே நிரந்தரத் தள்ளு வண்டி டிபன் கடையாகப் போயிற்று. எனக்கு 2014ல் திருமணம் நடந்தது.  என் தம்பி செந்தில்வேலுக்கு 2017ல் திருமணம் நடைபெற்றது. பதினோரு ஆண்டுகளுக்கு மேலாக இதே இடத்தில் காலை மற்றும் இரவு நேர டிபன் கடை நடத்தி வருகிறோம்.

((??))  டிபன் கடையில் என்னென்ன ஐட்டம் தயாரித்து விற்று வருகிறீர்கள்?

((!!!))  இட்லி, தோசை, தோசையில் மட்டும் பத்து வகைகள், உளுந்து மெது வடை, கடலைபருப்பு மசால் வடை என்று இவைகள் மட்டும் தான் சூடாக சுவையாகத் தயாரித்துப் பரிமாறி வருகிறோம். சுவையாக இருப்பதால் எங்களுக்கென நிரந்தர வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். எனக்கும் என் தம்பிக்கும் காலை மாலை இரவு என்று ஒரு நாள் பொழுதும் இதற்கே சரியாகப் போய் விடும். இத்தனைக்கும் எங்களது கடின உழைப்பு தான் காரணம். எங்களுக்கு எங்கள் உழைப்பும், எங்கள் வாடிக்கையாளர்கள் தந்து வரும் ஆதரவும் தான் எங்களின் மூலதனம்.

((??))  எல்லாம் சரி. நவி மும்பைக்கு நீங்கள் இந்தப் பகுதிக்கு வந்து இருபத்திநான்கு ஆண்டுகள் ஆகி விட்டன. உழைப்பு உங்களுக்கு என்ன பலனைத் திருப்பித் தந்துள்ளது?

((!!!))  மனசாட்சிப்படி சொல்ல வேண்டும் என்றால் நிறையத் தந்துள்ளது. நவி மும்பை காரகர் பதிமூன்றாம் பிளாக்கில், தரைத் தளம் சேர்த்து மூன்று மாடிக் கட்டிட வீடு எனது  பெயரில் வாங்கியுள்ளேன். கொஞ்சம் தள்ளி ஒரு இடத்தில் எனது தம்பிக்குச் சொந்தமாக ஒரு வீடு வாங்கியுள்ளோம். நவி மும்பையில் சொந்தமாக வீடு வாங்குவது எளிதல்ல. இது மட்டுமல்ல. தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் சேரகுளம் கிராமத்தில் முன்பு எங்களுக்குப் பூர்விகமாக நான்கு ஏக்கர் நிலம் இருந்தது. அங்கு எங்களின் அப்பா அம்மா இருவரும் அதில் விவசாயம் செய்து வருகின்றனர்.

அண்ணன் தம்பி நாங்கள் இருவரும் இத்தனை ஆண்டுகளாக மும்பையில் சம்பாதித்ததைச் சேர்த்து வைத்து, எங்களின் பூர்விக நிலத்துக்கு அருகில் மேலும் நான்கு ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கிப் போட்டுள்ளோம். இப்போது அந்த எட்டு ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறோம். நான்கு ஏக்கரில் நெல் அல்லது அவ்வப்போது மாற்றுச் சாகுபடிப் பயிர் செய்து வருகிறோம். எல்லாம் கிணற்று நீர் மோட்டார் பாசனம் தான். மீதம் நான்கு ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளோம். மூவாயிரம் வாழைகள் அங்கு செழித்து வளர்ந்து வருகின்றன.

கடந்த ஏழெட்டு மாதங்களுக்கு முன்பாக சொந்த நிலத்தில் பழைய வீட்டுக்கு அருகில், நவீன வசதிகளுடன் எங்கள் அப்பா அம்மாவுக்காக ரூபாய் அறுபது லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வீடு கட்டிப் புதுமனைப் புகுவிழா நடத்தியுள்ளோம். இதைவிட எங்களுக்கு வேறென்ன வேண்டும்?

எனக் கேட்கிறார் நவி மும்பை கார்கர் பகுதியில் நிரந்தரத் தள்ளு வண்டியில் நிரந்தர டிபன் கடை நடத்தி வருகின்ற, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தாலுக்காவில் உள்ள சேரகுளம் கிராமத்தின் பூல் ராஜா.

 

— ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.