‘வலிமை’ கொடுக்கும் புன்னகை
அன்பான புன்னகை, அமைதியான சொல் நம் வியாபாரத்தை பெரிதாக்குவது மட்டுமின்றி நம் வாழ்க்கையையே புரட்டிப் போடும் ஆற்றல் கொண்டது. முகத்தில் புன்னகையுடன் காலையில் விழிக்கும் போது அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும், சிறப்பான நாளாக அமையும்.
புதிய வாடிக்கையாளர் ஒருவரைப் பார்த்தவுடன் நீங்கள் உதிர்க்கும் மெல்லிய புன்னகை அவருக்குள்ளும் உற்சாகத்தை ஏற்படுத்தி ஒரு ஈர்ப்பையும் உண்டாக்குவதால் உங்கள் வியாபாரம் எளிதாக அமையும். ஒவ்வொரு முறையும் உங்கள் வாடிக்கையாளரைப் பார்த்து, அவர் நிரந்தர வாடிக்கையாளரோ, புதிய வருகையோ எவராயிருப்பினும் நீங்கள் புன்னகைக்கும் போது அது அவருக்கு அன்பு பரிசாக மாறுகிறது.
ஒரு புன்முறுவலுக்கு நம் முகத்தில் 13 தசைகள் இயங்குகின்றன. பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒருவரின் திறன், சமூகத்தில் ஒருவர் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பதை தீர்மானிப்பது புன்னகை எனும் மந்திரம்.
சிரிப்பு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, வலியை குறைக்கிறது. உங்கள் மனதையும், உடலையும் மீண்டும் சமநிலைக்கு கொண்டு வருவதற்கு நல்ல சிரிப்பை காட்டிலும் வேறு எதுவும் வேகமாக செயல்படாது என்பதே உண்மை. வாடிக்கையாளருடன் உங்கள் உறவுகளை மேம்படுத்த பெரிய ஆதாரமே புன்னகை.