கொரோனா 2வது அலை… மறுபடியும்… 20 லட்சம் கோடியா..
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் உற்பத்தி, வேலைவாய்ப்பு, சேவைத் துறை என பலரும் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து சிறு தொழிலாளர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட் டோர் பயனடைவதற்காக கடந்த ஆண்டு ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சலுகை தொகையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தற்போது இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களிலும் மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இரண்டாவது பொருளாதார சலுகை தொகையை அறிவிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பொருளாதார சலுகையை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.