ஆதார் மோசடிகளை தடுக்க எளிய வழி..!
ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க UIDAI எண்கள் ஹேக்கர்களின் கைகளில் கிடைப்பதால் நடக்கும் வங்கி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வங்கி மோசடிகள் குறித்து புதுவிதமான புகார்கள் வங்கியில் குவிந்து வருகின்றன. வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்பதால் மோசடிகளுக்கு எளிதில் கதவை திறந்துவிடும் வாசலாக ஆதார் அமைந்துள்ளது.
இதைத் தடுக்க ஒருவர் தனது ஆதார் எண்ணை லாக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய வசதி மூலம் வங்கி மோசடிகள் தடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இப்புதிய வசதி விர்ச்சுவல் ஐடி அங்கீகாரம் முறையில் செயல்படுவதால் இதில் உள்ள லாக் மற்றும் அன்லாக் வசதி 12 இலக்க எண்ணை தவறாக பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது. ஆதார் அட்டை தொலைத்து விட்டால் கூட ஆதார் எண்ணை லாக் செய்வதன் மூலம் தேவையில்லாத சங்கடங்களை தவிர்க்கலாம்.
ஆதார் அட்டையை SMS மூலம் லாக் செய்ய முதலில் OTP ஐப் பெற வேண்டும். அதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1947க்கு ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் டைப் செய்து SMS அனுப்ப வேண்டும்.
சில நொடிகளில் உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு UIDAIல் இருந்து 6 இலக்க OTP வரும். இந்த OTP-யை பெற்றவுடன், நீங்கள் மீண்டும் உங்களது மொபைலில் இருந்து, LOCKUID என்று டைப் செய்து, அத்துடன் உங்கள் ஆதாரின் கடைசி நான்கு இலக்க எண், மற்றும் உங்களுக்கு வந்த ஆறு இலக்க OTP-யை டைப் செய்து மீண்டும் 1947 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.
SMS அனுப்பப்பட்டதும், UIDAI உங்கள் ஆதார் அட்டையை லாக் செய்ததாக பதிலுக்கு உறுதிப்படுத்தும் SMS கிடைக்கும். இதேபோல், ஒருவர் புதிய ஆதார் அட்டையைப் டவுன்லோட் செய்யும் போதும் ஆதார் அட்டையை அன்லாக் செய்யலாம்.
இதே போல் SMS மூலம் அன்லாக் செய்ய, 1947 என்ற எண்ணுக்கு ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் டைப் செய்து SMS அனுப்பி முதலில் OTP-யைப் பெற வேண்டும்.
OTP கிடைத்த பிறகு மற்றொரு SMS அனுப்ப வேண்டும். அதற்கு UNLOCKUID என டைப் செய்து, அதன்பிறகு அடையாள அட்டை எண்ணின் கடைசி ஆறு இலக்கங்கள் மற்றும் ஆறு இலக்க OTP-யை டைப் செய்து அனுப்ப வேண்டும்.
உங்கள் இரண்டாவது SMS கிடைத்த பிறகு, உறுதிப்படுத்தும் செய்தியை அனுப்புவதன் மூலம் UIDAI உங்கள் ஆதார் அட்டை எண்ணை அன்லாக் செய்யும்.