பருவநிலை மாற்றமும் தொழில் வளர்ச்சியும்!
ஐ.நா.வின் “பன்னாட்டு ஆய்வுக் குழுவின் பருவநிலை தொடர்பான அறிக்கை”, சர்வதேச அளவில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபகாலமாக வட அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ மற்றும் ஜெர்மன், சீனா போன்ற நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்திய பெருவெள்ளம் ஆகியன பருவநிலை மாறுபாடு சிக்கலை இனி உலக நாடுகள் எளிதில் கடந்து செல்ல முடியாது என்ற யதார்த்தத்தை உணர்த்துகின்றன.
1850–1900க்கு இடைப்பட்ட ஐம்பது ஆண்டுகளைக் காட்டிலும், 2011–2021 இடையிலான கடந்த பத்து ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 1.09°சி உயர்ந்திருக்கிறது. முன்னதாக, இந்த நூற்றாண்டில் புவி வெப்பநிலை உயர்வை 2°சி-க்குள் வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்த உறுதியேற்றிருந்த உலக நாடுகள், 2015-பாரிஸ் பருவநிலை மாநாட்டில் அந்த அளவை 1.5°சி ஆக நிர்ணயித்தன. கருத்தளவில் இதனை ஒப்புக் கொண்ட உலக நாடுகள், நடைமுறையில் இதை சாத்தியமாக்க முயற்சிக்கவில்லை.
மேலும், கார்பன் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரிக்குமானால் வரும் 2040 -க்குள் புவி வெப்பநிலை 1.5°சி க்கு மேல் உயரக்கூடும். விளைவாக, கடல் வெப்பநிலை 1°சி அதிகரிக்கும். 2006—2018 ஆண்டுகளில் கடல் மட்டம் சராசரியாக 3 mm உயர்ந்துள்ள நிலையில், 2100-ஆம் ஆண்டில் 3 மீ ஆக உயரும் அபாயம் உள்ளதென இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
கரியமில வாயு வெளியேற்றத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஆகவே, வளர்ச்சி நோக்கிய தொழிற் கொள்கை திட்டமிடுதலில், உலக நாடுகளும் இந்தியாவும் சூழலியல் கொள்கைக்கும் முகம் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இரா.மோ.பிரித்திவிராஜ்,
முதுகலை தமிழ் (முதலாமாண்டு),
பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி