படிக்கும் போதே மாணவிகளை தொழில்முனைவோராக்கும் திருச்சி கல்லூரி முதல்வர்
திருச்சியில் 1984ல் தொடங்கப்பட்ட காவேரி மகளிர் கல்லூரியில், முதல் ஆசிரியராக பணியில் சேர்ந்த வர் சுஜாதா. கல்லூரியில் அவரின் சீரிய பணி அவருக்கு முதல்வர் பொறுப்பு கிடைக்கச் செய்தது.
பொறுப்பேற்று 18 வருடமாக முதல்வராக பணிபுரிந்து வரும் முதல்வர் சுஜாதா, பெண்களுக்கும், கல்லூரி மாணவிகளுக்கும் ஒரு வழிகாட்டியாக திகழ்பவர். சுஜாதா அவர்கள் காவேரி மகளிர் கல்லூரியில் பெண்களுக்கு கல்வி மட்டுமல்லாமல் படிக்கும்போதே மாணவிகள் தொழில்முனைவோராக வேண்டும் என்ற நோக்கத்தில் Student Incubation Center என்ற மையத்தை தொடங்கியுள்ளார்.
மாணவிகள் கல்லூரி பயிலும் போதே தொழில் அனுபவம், நிர்வாகத் திறனை வளர்த்துக் கொள்ளுதல், தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவை இம்மையத்தின் நோக்கமாகும்.
இம்மையம் குறித்து இளங்கலை வேதியியல் பாடப் பிரிவில் பயிலும் மாணவி தக்ஷாயினி கூறுகையில், “2019ஆம் ஆண்டு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ரூ. 1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் இம்மையத்தில் Stationary, Beauty Parlour, Cake Backing, Printer, Gallery, Napkin உள்ளிட்ட பல்வேறு விற்பனை, சேவை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் படிக்கும்போதே மாணவிகளுக்கு வருமானம் கிடைப்பதோடு கல்லூரி படிப்புக்குப் பிறகு தனியாக தொழில் தொடங்கும் அளவிற்கு தயாராகின்றனர்.
இங்கு பயிலும் மாணவிகள் மட்டுமின்றி இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவிகளும் இந்த Student Incubation centre-ல் தங்களை இணைத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் சந்தையில் தொழில் வாய்ப்புகள் குறித்து மாணவிகள் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் இங்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அத்துடன் தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கைகள் தயாரிக்கவும் பயிற்சி வழங்கப்படுகிறது என்றார்.
தொடர்ந்து இளங்கலை பி.காம் மூன்றாம் ஆண்டு பயிலும் அஸ்வினி, ஆதித்யா ஆகியோர் கூறுகையில் “இம்மையத்தின் மூலம் ஒரு நிர்வாகத்தை தனியாக நிர்வகிக்கும் அளவிற்கு வரவு செலவு கணக்குகளை கையாள்வது, கொள்முதல் மற்றும் இருப்பு நிலைகளை கையாளுதல், வாடிக்கை யாளர்களை அணுகுதல் குறித்தும் மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர். மேலும் நாங்கள் இங்கு பெறும் அனுபவங்களை அடுத்து வரும் புதிய மாணவிகளுக்கும் கற்றுத் தருகிறோம்“ என்றனர்.