1 லிட்டர் பால் ரூ. 4000 பணம் கொட்டும் பால் பிசினஸ் !
கழுதை மேய்க்கத்தான் லாயக்கு என இனி வருங்காலத்தில் யாரையும் திட்ட முடியாது. பட்டதாரி இளைஞர் ஒருவர் முசிரி அருகே கழுதை பண்ணை அமைத்து அதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்.
முசிரி அருகே உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் ஐந்திணை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணை யை நிர்வகித்து வருபவர் பட்டதாரி இளைஞர் ராஜு. இவர் தனது ஐந்திணை பண்ணையில் 45 கழுதைகளை வளர்த்து வருகிறார். இந்த கழுதை பண்ணையில் ஆன்லைன் மூலம் 1 லிட்டர் கழுதைப்பால் ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இந்த பண்ணையில் 45 கழுதைகள் பராமரிக்கப் படுகிறது. இதில், 7 கழுதைகள் பால் கறக்கிறது.
கழுதைப்பால் சித்த மருத்துவத்தில் முக்கிய பங்காற்றுகிறது. அதேபோல் கழுதை பாலை குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. உடல் பருமன் உள்ளவர்களுக்கு கழுதைப்பால் சிறந்த பானமாகும். கழுதைப் பாலில் விட்டமின் ஏபி-1, பி-2, சி ஆகியவை உள்ளது. பல சித்த மருத்துவர்கள் கழுதைப் பாலை வாங்கிச் செல்கின்றனர். கழுதைப்பால் எளிதில் கெட்டுப் போகாது. பாலை ஃப்ரீசரில் வைத்து மாதக்கணக்கில் பயன்படுத்த முடியும்.
ஒரு கழுதை நாளொன்றுக்கு காலை 200 மில்லி மாலை 200 மில்லி அளவில் பால் கறக்கும் தன்மை கொண்டது. காலையில் மட்டும் கழுதையின் பாலை கறந்து கொண்டு மாலை அதன் குட்டிக்கு விட்டு விடுவோம். கழுதைப்பால் லிட்டர் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கிறோம்.
எனது பண்ணையில் கழுதை பால் மூலம் சோப்பு தயார் செய்யப்படுகிறது. அழிவின் விளிம்பில் இருந்த கழுதை இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ஒரு சில கழுதைகள் வாங்கி வளர்த்து வந்தேன். அதனைத் தொடர்ந்து கழுதையினால் கிடைக்கும் பலன்களை அறிந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்குச் சென்று கழுதைகளை விலைக்கு வாங்கிவந்தேன். நான் கழுதை மேய்ப்பதை பார்த்த சிலர் சிரித்து கிண்டல் செய்தவாறு செல்வார்கள். அவர்களுக்கு கழுதையினால் கிடைக்கும் பயன்கள் தெரிவதில்லை.
என்னிடம் வளர்க்கப்படும் கழுதைகளிடம் இருந்து பால், லத்தி (சாணம்), உதிரும் முடி என அனைத்தும் பணமாகும். ஆன்லைன் மூலமும், நேரிலும் கழுதைப் பால் சிறப்பான முறையில் விற்பனை ஆகிறது.
கழுதை லத்தி அதாவது சாணத்திலிருந்து சாம்பிராணி, கொசு விரட்டி ஆகியவை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். கழுதைப்பால் மூலம் பிஸ்கட், குளியல் சோப் ஆகியவையும் தயார் செய்யப்படுகிறது, கழுதை பால் மூலம் தயாரிக்கப்படும் சோப்பு தோலில் ஏற்படும் அலர்ஜி பாதிப்பை போக்க வல்லது. மேலும் கழுதை கோமியமும் விற்பனை செய்யப்படுகிறது.
என்னிடம் ஏழு கழுதைகள் தற்போது பால் கறக்கிறது. இதன் மூலம் மாதந்தோறும் 30 லிட்டர் கழுதை பால் விற்பனை செய்கிறேன். இதன் மூலம் எனக்கு கிடைக்கும் வருமானம் 90 ஆயிரம், கழுதை லத்தி குறைந்தபட்சம் 50 கிலோ விற்பனை செய்கிறேன். லத்தியிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். .கழுதை கோமியம் விற்பனையில் இருந்து ரூபாய் ஐந்தாயிரம் கிடைக்கும். ஆகமொத்தம் என்னுடைய மாத வருவாய் ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் என்றார். அழிந்துவரும் விலங்கினமான கழுதை இனத்தை மீட்டு வாழ வைக்கும் முயற்சியில் இறங்கிய என்னை கழுதைகள் வாழ வைக்கிறது. இது போக நான் நான்கு பேருக்கு கழுதைகளை பராமரிப்பதற்காக வேலை கொடுத்துள்ளேன் என்று கூறினார்.
இளைஞர்கள் மற்றும் வேலை இல்லாதோர் கழுதை பண்ணை அமைப்பதற்கு உதவுவதாகவும் ராஜு தெரிவித்தார். அரசின் முறைப்படியான அனுமதி வருவது ஒருபுறம் இருந்தாலும், கழுதைப்பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருள்கள் விற்பனை மூலம் ஏற்கெனவே பல நிறுவனங்கள் கல்லா கட்டத் தொடங்கிவிட்டன.
இதேபோன்று ஆர்கானிக் பொருள்களை விற்பனை செய்யும் சிந்துஜா என்பவரும், கழுதைப்பாலில் தயாரிக்கப்பட்ட சோப்புகள் அழகு சாதன பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறார். இவர், தனது தயாரிப்பு நிறுவனத்துக்கான கழுதைப்பாலை டெல்லியை அடுத்த காஜியாபாத், பஞ்சாப் மாநிலத்தின் பார்மர், மகாராஷ்டிராவின் சோலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள், பழங்குடியினத்தவர்களிடமிருந்து வாங்கிக் கொள்கிறார்.
புனேவில், இரண்டாம் தலைமுறை விவசாயியான குமார் ஜாதவ், 100 மில்லி கழுதைப்பாலை 700 ரூபாய்க்கு விற்றுவருகிறார். கைக்குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்கள், இருமல் பிரச்சனை உள்ளவர்கள், வயிறு மற்றும் தோலில் தொற்று உள்ளவர்கள் இவரின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
கழுதைப்பால், கறந்த 8 முதல் 10 மணி நேரத்துக்குள் கெட்டுவிடும் என்பதால், தொலை தூரம் உள்ள வாடிக்கையாளர்கள் என்றால், அவர்களது வீட்டுக்கே கழுதையை அழைத்துச் சென்று பாலைக் கறந்து கொடுத்துவிட்டு வருகிறார். இவரிடம் 12 கழுதைகள் உள்ளன. மாதம் சுமார் 70,000 ரூபாய் வரை இதன் மூலம் சம்பாதிக்கிறார்.
இந்த நிலையில், கழுதைப் பாலைக் கொண்டு அழகு சாதன பொருள்களைத் தயாரிக்கலாம் என்பதையும், ஊட்டச்சத்து பொருள்களிலும் அதைக் கலக்கலாம் என்பதையும் ஒப்புக்கொள்ளும் வேளாண் விஞ்ஞானிகள், இந்தியாவில் கழுதை வளர்ப்பு நல்ல லாபகரமான தொழிலாக நாளுக்கு நாள் மாறிவருகிறது..
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேளாண் புதுமை விவசாயி விருது பெற்ற அபி பேபி என்பவரின் டால்பின் ஐபிஏ என்ற நிறுவனம், தடிப்பு தோல் அழற்சி உடையவர்களுக்காக கழுதைப்பாலில் தயாரிக்கப்பட்ட க்ரீம் ஒன்றை விற்பனை செய்துவருகிறது. 88 கிராம்கொண்ட ஒரு பேக்கின் விலை 4,840 ரூபாய். அதேபோன்று சொறி, சிரங்குக்கான க்ரீம் 6,136 ரூபாய். 200 மில்லி ஷாம்பூ 2,400 ரூபாய் என விற்றுவருகிறது.