சமோசா அல்லது சமூசா என்ற திண்பண்டமானது, பல்வேறு நாடுகளின் மக்களால் விரும்பப்படும் நொறுக்குத்தீனியாகவும், தொடுகறியாகவும், பசி/சுவையூக்கியாகவும் திகழ்கிறது. இந்த உணவு செய்முறை வடிவில், வேறுபட்டு இருந்தாலும், பன்னாட்டினராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களிலுள்ள பல்வேறு நாட்டினரும் இதனை சிற்றுண்டியாக உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
உலக மக்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கு ஏற்ப, இதன் அளவும், உட்பொருட்களின் கலப்பும், வேறுபடுகின்றன. தேவையான பொருட்களை, இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று வெளிப்புறத்திற்கான, மாவு. இது பெரும்பாலும், மைதா மாவாகும். இரண்டாவது உட்பொருளான மசாலைச் சேர்வை.
திருச்சி பெரியகடை வீதியில் உள்ள சந்துக்கடை போர்டை பார்த்து வண்டியை திருப்பினோம்.
அண்ணே… இங்க சந்துக்கடை எங்க இருக்கு என கேட்க, “அந்தா அங்க கூட்டமா நிக்கறாங்கல்ல அந்த கடை தான்” என்றார். சாயங்காலம் நேரம் என்பதால் பள்ளி குழந்தைகளும் அதிக அளவில் கடையில் மொய்த்திருந்தனர். இருவர் மசாலாவை அள்ளி மைதா தாளில் அடித்து வீச, ஒருவர் சம்சாவை வறுத்தெடுக்க, மற்றொருவர் வேகவேகமாக சம்சாவை பேப்பரில் மடித்து கொடுத்துகொண்டிருந்தார்.
சந்துக்கடை சம்சாவின் உரிமையாளர் ரவியிடம் பேசியபோது” எனக்கு சொந்த ஊர் வேதாரண்யம். சின்ன வயசில இருந்து சிங்காரத்தோப்புல ஒரு ஹோட்டல்ல மாஸ்டரா வேலை பார்த்தேன். 1996ல இங்க நானே சொந்தமா கடை போட்டு சம்சா போட ஆர்ம்பிச்சேன்.
உருளைக்கிழங்கு வாயுங்கிறதனால, வித்தியாசமா கேரட், பட்டாணினு சேர்த்து சம்சா போட ஆரம்பிசேன். டேஸ்ட் பிடிச்சதால மக்கள் அதிகமா, அவங்களோட நிறைய பேர் சேர்த்து கூட்டிட்டுவந்து சாப்பிட்டாங்க. காலைல 7 மணிக்கே மைதா வாங்கி ஊற வைச்சு, பிரஸ்ஸா காய்கறி வாங்கி வெட்டி, இதுக்கான வேலை சாயங்காலம் வரை இழுத்துடும்.
சாயங்காலம் 5 மணில இருந்து நைட் 11 மணி வரை தொடர்ச்சியா சம்சா போடுவோம். குறைஞ்சது ஒரு நாளைக்கு இரண்டாயிரம் சம்சா விக்கும்.
கடையில கூட்டத்தில சில பேர்கிட்ட காசு வாங்காம விட்டாலும் கூட திருப்பி சாப்பிட வரும்போது கொடுத்துடுவாங்க. ஆனா சில பேர் என்ன சம்சாவை 5 ரூபா சொல்லுறீங்கன்னு கேப்பாங்க, பெரிய பெரிய ஹோட்டல்ல போய் உடம்புக்கு ஆரோக்கியமில்லாத உணவுகளை அதிக காசு கொடுத்து வாங்கிசாப்பிடறவங்க, உடம்புக்கு ஆரோக்கியம் தரும் சாப்பாடுக்கு செலவு செய்ய யோசிக்கும் போது வருத்தமா இருக்கு.
சம்சாவை வறுக்க எப்போதுமே ஒரு முறை உபயோகிச்ச எண்ணெய்யை மறுபடி உபயோகிக்கிறதில்லை. குப்பையும் கூட நாங்களே கூட்டி குப்பைதொட்டில போட்டுருவோம்.இங்க வேலை செய்ற என் தம்பிங்களும் எனக்கு ரொம்ப உதவியா இருப்பாங்க. தரமும் டேஸ்டும் மாறாமல் இருக்கறதாலதான் மக்கள் தேடி வந்து சாப்பிடுறாங்க” என்றார்.