மழை காலமோ வெயில் காலமோ சரி, சூடா நச்சுன்னு ஒரு டீ சாப்பிட்டா மண்டைக்குள்ள கிளிக்ன்னு ஒரு உற்சாகம் வரும். பலருக்கு 2 மணி நேரத்துக்கு ஒரு முறை டீ குடிக்கலென்னா அவங்களுக்கு வேலையே நடக்காது. அப்படி நம்முடைய வாழ்க்கைல தினமும் குடிக்கிற டீ ஆரோக்கியமும், தரமும் நிறைஞ்சிருக்கனும்னு நினைக்கிறோம். திருச்சி மக்களுக்கும் அலீப் டீ ஸ்டாலுக்கும் அப்படி ஒரு சொந்தம்.
அலீப் டீ ஸ்டால் பற்றி உரிமையாளர் நூர் முகமது தெரிவித்ததாவது, ” எங்களுக்கு பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி. குடும்பமே டீக் கடை தொழில்தான் செஞ்சிட்டு இருந்தாங்க. அப்பா முகமது யூசுப் 2006ல பாலக்கரைல டீக்கடை ஆரம்பிச்சாரு. இப்போ நானும் தம்பி பீர்முகமதும் தான் கடைய கவனிச்சுட்டு இருக்கோம்.
நம்ம கடைல ஸ்பெஷல் இஞ்சி டீ, நாட்டுசக்கரை பால், பால் சர்பத், பட்டினம் பக்கோடா இது நாலும் தான். பால் சர்பத் பாதாம் பிசின், பால், ரோஸ் பிளேவர், ஸீவிட் ஜீரா இதெல்லாம் கலந்து செய்வோம். பட்டினம் பக்கோடா வெறும் 2 ரூபா தான், காலைல 10-12 மணி வரை தான் அது கிடைக்கும், அதுக்கப்பறம் தீர்ந்திடும்.
அப்பா காலத்தில இருந்து இப்போ வரை இனம்குளத்தூர் பக்கத்தில இருந்து கறவை மாட்டுப்பால் வாங்கி தண்ணி கலக்காமா டீ போடுவோம். அதுதான் நல்ல டேஸ்ட்டுக்கு காரணம்.
தினமும் 1000 முதல் 1500டீ வரை ஓடும். ஹோட்டல் ஸ்பெஷல் சக்கரா கோல்ட் டீத்தூள்தான் உபயோகிக்கிறோம். மத்த கடைல கிளாஸ்லயும், டம்ளர்லயும் டீ கொடுப்பாங்க. நம்ம கடைல பீங்கான்தான்.
இரண்டாவது, கடைக்கு முன்னாடி நாங்க வச்ச செர்ரி மரம் வளர்ந்து இப்போ நிழல் கொடுக்குது, அதனாலேயே புதுசா வரவங்க நிழலுக்காகவே நம்ம கடையை செலக்ட் பண்ணி டீ குடிக்கிறாங்க.
டீ குடிக்கிறவங்க, டேஸ்ட் பாத்துட்டு ரெகுலர் கஸ்டமரா ஆயிடுவாங்க. பாலக்கரை தொகுதி கலில் ரகுமான் நம்ம கடைக்கு கஸ்டமர், திருச்சி எம்.பி. ப.குமார் இந்த பக்கம் எதாவது நிகழ்ச்சிக்கு வந்தா இங்க காரை நிறுத்தாம போகமாட்டாரு. 10, 20 பேரோட வந்தாலும் இங்கே டீ குடிப்பாரு.
மத்த எல்லா டீக்கடைலயும் புகையிலை பொருட்கள் விப்பாங்க நம்ம கடைல அதை விற்பனை செய்றதில்லை, கடைக்குள்ள உக்காந்து தம் அடிக்கறதுக்கும் அனுமதிக்கிறதில்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்ததுக்கப்பறம் பெப்சி, கோலான்னு அன்னிய பானங்கள் விக்கிறதும் இல்லை.” என்கிறார் பெருமிதமாக.