மதம் மாறிய தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு !
மதம் மாறிய தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு பயன்கள்: மத்திய அரசு தீவிரம்
இந்து, பௌத்தம், சீக்கியம் அல்லாத மதங்களுக்கு மாறிய தலித் மக்களின் பொருளாதார, சமூக, கல்வி நிலையை ஆராய மத்திய அரசு தேசிய ஆணையம் அமைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையின் படி, மத்திய அரசுப் பணிகள், மத்திய அரசு கல்வி நிலைய மாணவர் சேர்க்கையில் 15% இடங்கள் பட்டியல் பிரிவனருக்கு (SC) ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களுக்கு மாறிய தலித் மக்கள் இந்த இடஒதுக்கீடு பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாக, மத்திய அரசுப் பணிகள் மற்றும் மத்திய கல்வி நிலையங்களில் எந்தவொரு ஆதாயங்களும் இம்மக்கள் பெறாத நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2007ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, நாட்டில் சமயம் மற்றும் மொழிச் சிறுபான்மை மக்களின் பல்வேறு குறைகளைக் களைய, உச்ச நீதிமன்ற நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் குழு அமைத்தது. இக்குழு, சாதி என்பது இந்துக்களின் பிரச்சனை என்பதைத் தாண்டி இந்திய சமூகத்தின் அடிப்படை கருப்பொருளாக கொள்ளவேண்டும் என்று தெரிவித்தது. எனவே, மதம் மாறிய தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்தது. இருப்பினும், இந்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இதற்கிடையே, சமூக அளவுகோளில் விளிம்புநிலை மக்களாக இருக்கும் தலித் கிறித்தவ, முஸ்லீம் மக்களுக்கு இடஒதுக்கீடு பயன்களை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்நிலையில், எஸ்சி பட்டியலில் மதம் மாறிய தலித் மக்களை சேர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தற்போது தேசிய ஆணையம் அமைக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழு, மதம் மாறிய தலித் மக்களின் பொருளாதார, சமூக, கல்வி நிலையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.