மாணவர் பட்டிமன்றம் ஆய்வரங்கம் விளையாட்டுப் போட்டிகளில் சேம்பியன் கல்லூரியைக் கலக்கும் செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறை
178 ஆண்டுகள் பழமை மிக்க திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ் இலக்கியங்களுக்கு எளிய உரை தந்த ஐயம்பெருமாள் கோனார், முத்தமிழ் மாமணி முனைவர் சாமிமுத்து உள்ளிட்ட எண்ணற்ற தமிழ் ஆளுமைகள் பேராசிரியர்களாகப் பணிபுரிந்த புகழ்மிக்க துறை தமிழ்த்துறை.
வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமல்லாது அனுபவக் கல்வியை மாணவர்களின் உள்ளத்தில் விதைத்திடும் நோக்கத்தில் இந்தக் கல்வியாண்டில் எண்ணற்ற புதிய செயல்பாடுகளைத் தொடங்கி முதன்மை வாய்ந்த துறையாகத் திகழ்கிறது.
அண்மையில் நடைபெற்ற கல்லூரியின் விளையாட்டுவிழா போட்டியில் வரலாற்றில் முதல் முறையாக ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்று சாதனை புரிந்த அத்துறையின் மாணவ மாணவியர், மாவட்ட, மண்டல, மாநில, தேசிய அளவிலும் தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.

திருச்சியில் உள்ள புனித சிலுவைக் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, காவேரி மகளிர் கல்லூரி தொடங்கி மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் கடந்து எண்ணற்ற கல்வி அமைப்புகள் நடத்துகிற போட்டிகள், பயிலரங்குகள், முத்தமிழ் விழாக்களில் மாணவ மாணவியர் பங்கேற்றுத் தங்கள் துறைக்கான தனி முத்திரையைப் பதித்து வருகின்றனர்.
தமிழ் இலக்கிய மாணவர்கள் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றை மட்டும் கற்றுக்கொண்டு வெளியே செல்வதைவிட ஆய்வுத்தளத்தில் அவர்களுடைய அறிவு விரிவடைய வேண்டும் என்கிற எண்ணத்தில் தமிழ்த்துறை உருவாக்கி இருக்கிற அமைப்புதான் வளனார் ஆய்வு மன்றம். இந்த ஆய்வு மன்றத்தில் பேராசிரியர்களும் மாணவர்களும் தங்கள் ஆய்வுத்தேடலை வெளிப்படுத்தும் விதமாக நூல் அறிமுகம், நூல் திறனாய்வு, சமூகக் கருத்துக்கள் மையமிட்ட திரைப்படத் திறனாய்வு, சமூக உரையாடல் ஆகியவற்றை நிகழ்த்தித் தங்களை வளர்த்து வருகின்றனர். கருத்துரைகளுக்குப் பிறகு நடைபெறும் கலந்துரையாடல் மாணவ மாணவிகளைப் புடமிடும் வண்ணம் அமைந்துள்ளது.
வளனார் கல்லூரி வளாகத்தில் கடந்த வாரத்தில் தமிழ்த்துறை நடத்திய நடைபெற்ற வள்ளலார் 200வது ஆண்டு பிறப்பு விழா, சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றுவதாக அமைந்தது. வள்ளலாரின் வாழ்வியல் கருத்துக்களை அவருடைய நூல்களிலிருந்து மேற்கோளிட்டுக் காட்டிய கல்லூரியின் செயலர் தந்தை அருள்முளைவர் கு.அமல், வள்ளலாரின் வார்த்தைகளை வாழ்க்கையின் இலட்சியமாக மாற்றுவதற்கு இந்த விழா காரணமாக அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது அனைவரின் பாராட்டையும் பெற்றது.
வள்ளலார் கொள்கைகளில் விஞ்சி நிற்பது இறைநேயமா? மனிதநேயமா? என்கிற மையப்பொருளில் நற்றமிழ் நாவரசி முனைவா் சாத்தமைப்பிரியா தலைமையில் நடைபெற்ற மாணவர் பட்டிமன்றம், வள்ளலாரின் கருத்துக்களை மாணவர்கள் இதயத்தில் ஊன்றச் செய்தது.

கடந்த ஆண்டில் மட்டும் முனைவர் கி.பார்த்திபராஜா, முனைவா் சிவ.மாதவன், முனைவர் வே.சங்கர நாராயணன், கவிஞா் நந்தலாலா, கவிஞா் முத்துநிலவன், கவிஞா் மதுக்கூர் இராமலிங்கம், கவிஞா் சக்திஜோதி, மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின், எழுத்தாளர் இரா.முருகவேள், எழுத்தாளர் கிருங்கை சேதுபதி உள்ளிட்ட எண்ணற்ற ஆளுமைகள் தமிழ்த்துறையின் மேடையை அலங்கரித்துள்ளனர்.
தமிழ்ப்பல்கலைக் கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ள தமிழ்த்துறை நிகழ்த்தி வருகின்ற முனைவா் பட்ட உருவாக்கம், பேராசிரியா் தகுதித் தோ்வுக்கான பயிற்சி, தமிழ்நாடு அரசுப் பணிக்கான பயிற்சி, படைப்பிலக்கியப் பயிற்சி, நாடகம் நடிப்பதற்கான பயிற்சி, வளன் ஆயம் ஆய்விதழ் வெளியீடு ஆகியவை துறையின் தனித்த அடையாளங்களாக அமைகின்றன.
இலக்கண அறிவு, இலக்கிய புரிதல் மட்டுமல்லாது படிப்பிடைப் பயிற்சி, கள ஆய்வு, திட்டக்கட்டுரைத் தயாரிப்பு, கவியரங்கம், பட்டிமன்றம், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், படைப்பிலக்கியப் பயிற்சிப்பட்டறை, நாடக மன்றம், மதிப்புக்கூட்டுப்பாடம், சான்றிதழ் வகுப்புகள், மாணவா் கருத்தரங்கம், இணையவழிக் கருத்தரங்கம், தேசியக் கருத்தரங்கம் என மாணவர்களை ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற்றவர்களாக உருவாக்கிடும் கல்லூரியின் தமிழ்த்துறை தூய வளனார் கல்லூரியின் புகழுக்கு பொன்னால் பொட்டிட்டது போல அமைந்திருக்கிறது என்றால் அது மிகையானதல்ல.
– ஆதன்