Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

“வலியும், வைராக்கியமும் தான் என்னை வாழவைத்தது ! – திருச்சி முருகன் வடை கடை

1

“வலியும், வைராக்கியமும் தான் என்னை வாழவைத்தது ! – திருச்சி முருகன் வடை கடை

 

சில்லென்ற காற்றுடன் சாரல் மழையும் சேர்ந்தடிக்க மழைக்கு பயந்து ஓரிடத்தில் ஒதுங்கினோம். அந்த இடத்தில் ஆளை இழுக்கும் ஒரு வாசனை. அந்த வாசனையை பிடித்துக்கொண்டு ஒரு கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கிறது. என்னவென்று எட்டிப்பார்த்தால் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது பலகார வியாபாரம்.

4

திருச்சி, பெரியகடைவீதி திரெளபதி அம்மன் கோவிலை ஒட்டி இருக்கிறது அந்த பலகாரக்கடை. ‘40 வருட பாரம்பர்யம். முருகன் வடை கடை’ என இரவிலும் பளிச்சென போர்டு மின்னுகிறது. வடை, பஜ்ஜி, சுண்டல், முறுக்கு என பாரம்பர்ய தமிழ்நாட்டு வாசனை.

3
திருச்சி முருகன் வடை கடை
திருச்சி முருகன் வடை கடை

இந்தக்கடையில கத்திரிக்காய் பஜ்ஜி ரொம்ப பேமஸ் என சொல்ல, அது ரெண்டை வாங்கி சாப்பிட்டு லயித்தபடியே அந்த கடை உரிமையாளர் வெள்ளிமலை அவர்களை ஓரம்கட்டி பேசினோம்.

“நான் விவசாயம் செஞ்சு 1970-லயே 40 ஆயிரம் ரூபாயை எனக்கு தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட நம்பிக்கையா கொடுத்துவச்சிருந்தேன். ஆனா, அவர் ஒருகட்டத்துல என் பணத்தை என்கிட்ட திருப்பி கொடுக்காம ஏமாத்திட்டார். அந்த விஷயத்துல நான் ரொம்ப ஒடிஞ்சி போய்ட்டேன்.

எப்படியாவது விட்ட காசை சம்பாதிக்கணும்கிற வலியோடும், வைராக்கியத்தோடும் தான் திருச்சிக்கு பஸ் ஏறுனேன். அப்படி இங்க வந்து ஆரம்பிச்சது தான் இந்த ’முருகன் வடை கடை’. எப்படியோ இந்த வடை கடை என் 40 வருஷத்தை ஓட்டிடுச்சி” என தன்னுடைய கடை ஆரம்பித்த பழைய நினைவுகளில் மூழ்கினார்.

தொடர்ந்து பேசியவர், “திண்டுக்கல் பக்கத்துல இருக்கிற ‘சிலுவத்தூர்’ங்கிற கிராமம் தான் என்னோட பூர்வீகம். நாங்க பாரம்பர்யமான விவசாயக் குடும்பம். நான் கோபிசெட்டிப்பாளையம் பக்கத்துல ஒரு சர்க்கரை மில்லில் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன்.

2

அந்த டைம்ல ரொம்ப கடுமையான பஞ்சம். எங்க கிராமத்துல விளைஞ்ச காடெல்லாம் தண்ணியில்லாம வறண்டு போயிருந்த நேரம். சாப்பாட்டுக்கே வழியில்லாம கிராமமே, கண்ணீர் வடிச்சிக்கிட்டிருந்த நேரத்துல பஞ்சம் பிழைக்க 1970-ல் திருச்சிக்கு வந்தோம்.

“70-ல திருச்சிக்கு வந்ததும் எனக்கு கல்யாணம் ஆச்சு. என் வீட்டுக்காரம்மா பேரு ரமணி. எனக்கு நாகராஜன்னு ஒரு பையனும், வள்ளி – சசிகலா – தேவிகா ராணி மூணு பொண்ணுங்க.

திருச்சிக்கு வந்தவுடனேயே வேற ஏதாவது வேலை செஞ்சு பொழச்சுக்கலாம்னு தான் வந்தோம். ஆனா, எதுவுமே ஒத்துவரலை. சரி நமக்கு தெரிஞ்ச எதையாவது செய்வோமுன்ன்னு தான் முறுக்கு செஞ்சு வியாபாரம் பண்லாம்னு ஆரம்பிச்சேன்.

முறுக்கு வியாபாரம் சூடுபிடிக்க, அப்படியே வடை, பஜ்ஜி, போண்டா, சுண்டல்ன்னு ஒரு பலகாரக்கடை போட்டேன். வடை 5 காசு, பஜ்ஜி – சுண்டல் – அதிரசம் 10 காசுன்னு போட்டு வியாபாரம் பண்ண ஆரம்பிச்சேன்.

1970-ல நான் கடை ஆரம்பிச்ச சமயத்துல மாசத்துக்கு எல்லா செலவும் போக 50 ரூவா கெடைக்கும். அந்த 50 ரூபாயில தான் குடும்பத்தோட அன்றாட செலவுகளை செஞ்சிக்கிட்டு, ஒத்த ஒத்த ரூபாயா சேர்த்துவச்சு இன்னைக்கு என்னோட மூணு பொண்ணுங்களையும் நல்ல முறையில கட்டி கொடுத்திருக்கேன்.

எப்படியாவது இந்த தொழிலை நல்ல முறையா செஞ்சு பொழைச்சுக்கலாமுன்னு நம்பிக்கை இருந்ததே தவிர, இது வேலைக்காகாதுன்னு ஒரு நாளும் சோர்ந்து போனதில்லை. அதுமட்டுமில்லாம அடுத்தவங்கக்கிட்ட கைகட்டி ஏன் வேலை பார்க்கணும்னு கவுரவம் வேற! என்னை வேற எங்கயும் போய் வேலை பார்க்க தூண்டலை.

எங்க கடையில கத்திரிக்காய் பஜ்ஜி தான் ரொம்ப பேமஸ். ‘எங்கயுமே இந்த மாதிரி கத்திரிக்காய் பஜ்ஜியை நாங்க சாப்பிட்டதே இல்லை’ன்னு வர்றவங்க பாராட்டுவாங்க. அதுமட்டுமில்லாம, ஆரம்பத்துல நான் செஞ்ச முறுக்கு மக்களுக்கு ரொம்ப புடிச்சி போச்சு. அந்த முறுக்கை இன்னைக்கு வரைக்கும் செஞ்சுக்கிட்டு இருக்கோம். இன்னைக்கும் இந்த பகுதியில் இருக்க முஸ்லீம்கள், வெளி நாட்டுக்கு போறப்ப எங்களோட முறுக்கை வாங்கி பார்சல் செஞ்சு அவங்க சொந்தக்காரங்களுக்கு அனுப்பி வைப்பாங்க.

காசுக்காக நாம எதையும் செய்றதில்லை. நம்மளை தேடி வர்ற வாடிக்கையாளருக்கு பொருள் தரமானதாகவும் அவங்களுக்கு சாப்பிட்ட திருப்தி கொடுக்கணும்கிறது தான் முதல் எண்ணம்.இன்னைக்கு எல்லோரும் எங்க கடை பலகாரத்தை சாப்பிட்டுட்டு நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போறாங்க. அது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. தொழிலில் பெரியளவு லாபம் கிடைக்காவிட்டாலும், மனதிருப்தியா இருக்கு. அதுவே போதும்.

என்ன ஒரு சின்ன வருத்தம், இப்ப வரைக்கும் சின்னதா சொந்தமா ஒரு இடத்தை வாங்கி கடை போட முடியாம போச்சேன்னு இருக்கத்தான் செய்யுது. இன்னைக்கு இந்த அளவுக்கு கடவுள் நம்மளை வச்சிருக்காரேன்னு நினைக்குறப்ப அதெல்லாம் பெருசா தெரியலை. 40 வருஷமா வாழ்க்கை நல்லா போய்க்கிட்டு இருக்கு. மிச்சமிருக்க வாழ்க்கையும் அப்படியே சந்தோஷமா போனா போதும்”என்றார் நெகிழ்வுடன்!…

 

5

Leave A Reply

Your email address will not be published.