Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஏதோ கையில காசு இருக்கு, நாமளும் ஒரு டீக்கடையை ஆரம்பிப்போமுன்னு ஆரம்பிச்சா மட்டும் அதுல ஜெயிச்சிடமுடியாது ! வெற்றியின் ரகசியம் உடைக்கும் திருச்சி நாகநாதர் டீ ஸ்டால் உரிமையாளர் !

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

 

‘எந்தா சேட்டா, ஒரு சாயா போடும்’ இந்த வார்த்தை கேரளாவில் ஒலிச்சதோட தமிழ்நாட்டுல தான் அதிகம் கேட்டிருக்கும். அந்தளவுக்கு திரும்புகிற பக்கமெல்லாம் சேட்டன்களுடைய டீக்கடைகளே நம்மை ஆக்கிரமித்திருக்கின்றன. அப்படியிருக்க, ஒரு டீக்கடையை பிராண்ட் ஆக்கி திருச்சி மாநகரின் முக்கிய வீதிகளில் முச்சந்தியில்  ( மூன்று தெருக்கள் இணையும் இடத்தில் )    திருச்சி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது ‘நாகநாதர் டீ ஸ்டால்’..

ஒரு அழகிய மாலைப்பொழுதில் நாகநாதர் டீ ஸ்டால் உரிமையாளர் ஆர்.முத்துக்குமார் அவர்களை சந்தித்து பேசினோம். “ராமநாதபுரம் பக்கத்துல மஞ்சங்குளம் கிராமம் தான் எங்களோட பூர்வீகம்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

நாங்க அண்ணன் தம்பிங்க மொத்தம் நாலு பேர். அதுமட்டுமில்லாம தங்கச்சிங்க ரெண்டு பேர். எங்க அண்ணன் ஆர்.கனகசபாபதி பால் விற்பனையாளர்கள் சங்கத் தலைவராக இருக்கார். ஆரம்பத்துல அவர் பால் வியாபாரத்துல இருந்ததால தான் எங்களுக்கு டீக்கடை ஆரம்பிக்கணும்ங்கிற எண்ணம் வந்துச்சி. அப்படித்தான் திருச்சி அண்ணாசிலை இ.ஆர். ஸ்கூலுக்கு பக்கத்துல 1981-ல் முதல் டீக்கடையை ஆரம்பிச்சோம். எங்க அண்ணனோட ஒத்தாசையில நானும் என்னோட தம்பி சிவானந்தனும் தான் கடையோட முழுவேலையையும் ராப்பகலா பார்த்தோம்.

கடை ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே நாங்க ஒரு விஷயத்துல தெளிவா இருந்தோம். அது பொருள் தரமா இருக்கணும்கிறது. அப்படி நம்ம தரமான பொருளை கொடுத்தா மக்கள் நம்மளை தேடி வருவாங்கங்கிறதை நாங்க முழுசா நம்பினோம். அந்த நம்பிக்கை தான் எங்களை அடுத்தடுத்து திருவள்ளூர் பேருந்து நிலையம், காஜாபேட்டை, ஜங்சன், ஒத்தக்கடை, மேலப்புதூர், பீமநகர், நீதிமன்றம், அண்ணாசி, திருவானைக்கோவில்,  என பல இடங்களில் கடையை திறக்க காரணமா அமைஞ்சது. இப்பொழுது திருச்சி மாநகரில் மட்டும் கிட்டத்தட்ட ‘நாகநாதர் டீ ஸ்டால்’ என்ற பெயரில் சுமார் 40 டீக்கடைகள் இருக்கின்றன. அதில், ஒருசில கடைகளை எங்களுடைய உறவினர்கள், சொந்தபந்தங்கள் என பலருக்கும் கொடுத்து நடத்தி வருகிறோம்” என்றார்

தொடர்ந்து பேசியவர், “ஏதோ கையில காசு இருக்கு நாமளும் ஒரு டீக்கடையை ஆரம்பிப்போமுன்னு ஆரம்பிச்சா மட்டும் அதுல ஜெயிச்சிடமுடியாது. இது தரமானதுன்னு மக்கள்கிட்ட நம்பிக்கையை உண்டாக்கணும். இன்னைக்கு பல கடைகளில் பாக்கெட் பாலை தான் பயன்படுத்துறாங்க. ஆனா, நாங்க பாக்கெட் பாலை தொடுறதேயில்லை. நாமக்கல் மற்றும் அதுக்கு பக்கத்துல இருக்க ஊர்ல இருந்து வர்ற கறவைப் பாலை மட்டுமே பயன்படுத்துறோம். லாபத்துக்காக நம்ம தரத்துல எந்த சமரசமும் செஞ்சிடக்கூடாது. ஒரு வடைக்கு எதை சேர்க்கணுமோ, அதை சேர்த்தா தானே டேஸ்ட் வரும்!. அதனால, நானே தினமும் மார்க்கெட் போய் கடைக்கு தேவையான காய்கறி எல்லாம் வாங்கிட்டு வந்திடுவேன்.

தரத்தை குறைக்காம, ஓரளவுக்கு லாபம் கிடைச்சா போதும்கிற மனப்பக்குவத்துக்கு வந்துட்டாலே நம்ம ஜெயிச்சிடலாம். ஆனா, அதை இங்க நிறைய பேர் நினைக்குறதில்லை. அதனால தான் இங்க திறந்த வேகத்துலயே கடையை மூடிட்டு போயிடுறாங்க.

தரம் ஒருபக்கம் இருந்தாலும், டீக்கடைக்கு மெயினே மாஸ்டர் தான். நான் பல கடைகள்ல டீ மாஸ்டரா இருந்திருக்கேன்னு சொல்லி வேலை கேட்டு வந்தா நாங்க வேலை கொடுக்குறதில்லை. ஏன்னா, அப்படி வர்றவங்க ரெண்டு நாளைக்கு மேல வேலை பார்க்க மாட்டாங்க. ஏன்னா! எங்க கடைக்குன்னு ஒருசில ஸ்டைல் வச்சிருக்கோம். டீக்கடைன்னாலே முன்னாடி பெஞ்ச் போடணும்கிறது எழுதப்படாத விதி. ஆனா, அதை நாங்க முதல்ல உடைச்சோம்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

அதுமட்டுமில்லாம கிளாஸ் கழுவுறதுக்குன்னு தனியா ஒரு ஆளை போட்டதும் முதன்முதல்ல நாங்க தான். அப்படி எங்க கடையில டீ கிளாஸ் கழுவுன பசங்கள தான் நாங்க இன்னைக்கு மாஸ்டரா வச்சிருக்கோம்.

நாகநாதர் டீ ஸ்டால் உரிமையாளர் ஆர்.முத்துக்குமார்
நாகநாதர் டீ ஸ்டால் உரிமையாளர் ஆர்.முத்துக்குமார்

எங்ககிட்ட வேலை பார்க்கின்ற ஆட்கள் மனசு நோகாம அவங்களுக்கு நியாயமான சம்பளத்தை கொடுத்திட்டு வர்றோம். இன்னைக்கு ஆயிரம் ரூபாய் எக்ஸ்ட்ரா லாபம் கிடைச்சா, லேபருக்கு ஒரு 50 ரூபா சேர்த்து கொடுப்போம். அந்தவகையில், எங்களுக்கு கீழ வேலை செய்றவங்களை நாங்க வேலைக்காரனா பாக்குறதில்லை.

தொழில் மேலயும், கடவுள் மேலயும் அதிக பக்தியுள்ளவன் நான். அதனால தான் எங்க குல தெய்வமான ‘நாகநாதர்’ பெயரை நான் கடைக்கு வச்சிருக்கேன். இன்னைக்கு வரை கடைக்குள்ள நான் செருப்பு போட்டுட்டு போறதில்லை. கடையில தண்ணியடிச்சிட்டு வேலை பார்த்த பல மாஸ்டரை வேலையைவிட்டு அனுப்பியிருக்கோம்.

எனக்கு மரியாதை கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை தொழிலுக்கு மரியாதை கொடுக்கணும்னு என்கிட்ட வேலை பாக்குறவங்ககிட்ட நான் இன்னமும் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

தொழில் மேல நமக்கு உள்ள பக்தி, கடவுளோட ஆசிர்வாதம் இதெல்லாம் தான் இன்னைக்கு டீக்கடைன்னாலே நாகநாதர்ங்குற பிராண்ட்-ஐ உருவாக்கியிருக்கு. இன்னைக்கும் மத்திய பேருந்து நிலையத்துல இருக்குற 4 பெரிய லாட்ஜ், ஹோட்டலுக்கு எங்க கடையில இருந்து தான் டீ, காபி வாங்கிட்டு போறாங்க.
இப்படி டீக்கடை நடத்தியே என்னோட ரெண்டு பசங்களை டாக்டருக்கு படிக்க வச்சிட்டேன்.

பெரியவன் மணிகண்டன் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்துல உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சீஃப் டாக்டராக இருக்கான். இன்னொரு பையன் சந்தோஷ்குமார் இப்போ எம்.டி, மத்த என்னோட அண்ணன், தம்பி பசங்க எல்லாம் இஞ்சினியரிங் அதுஇதுன்னு படிச்சி நல்லா செட்டிலாகிட்டாங்க.

ஏதோ நாம சம்பாதிச்சோமுன்னு இல்லாம, நம்ம ஊருக்குன்னு ஏதாவது பண்ணணும்னு நாங்க எங்களால முடிஞ்சதை பண்ணிக்கிட்டு இருக்கோம். எங்க ஊர்ல கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கு. அந்த குடும்பங்கள் எல்லாம் எங்களோட சொந்தபந்தங்கள் தான். அப்படி எங்க ஊர்ல உள்ள படிச்ச பசங்களை என்னோட தம்பி மகேஸ்வரன் மூலமா சிங்கப்பூருக்கு அனுப்பி அவங்க குடும்பத்தையே இன்னைக்கு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துட்டோம். அப்புறமா, எங்க ஊர்ல உள்ள பலரை எங்க கடைக்கு வேலைக்கு சேர்த்து எங்களால முடிஞ்ச உதவியை செஞ்சிட்டு வர்றோம்.

அதுமட்டுமில்லாம, எங்க ஊர்ல எதாவது பிரச்சினைன்னு மக்கள் சொன்னா, எங்களால முடிஞ்ச அளவுக்கு அதை அதிகாரிகளோட கவனத்துக்கு எடுத்திட்டு போயி அந்த பிரச்சினையை தீர்க்க முயற்சிப்போம். எங்களோட ஊரைச் சுற்றி கால்நடை வளர்ப்பு அதிகம். ஆனா, இன்னைக்கு மழையில்லாம கடும் வறட்சியா இருக்கதால, எங்களோட சொந்த செலவுல, 4 பேர் போட்டு அதிலிருந்து தண்ணியை பைப் மூலமா கொண்டு போய் ஊர்ப்பொது ஏரியில் அதை பாய்ச்சி கால்நடைகளுக்கு தண்ணி கொடுத்திட்டு இருக்கோம்.

ஒரு தொழிலை மதிச்சு, நேர்மையா, கொஞ்சம் கடினமா உழைச்சா நமக்கு மட்டும் இல்ல, நம்ம கூட உள்ளவங்களுக்கும் நல்ல வாழ்க்கை அமையும் என்பதை செய்து உணர்ந்ததில் எங்க குடும்பத்துக்கு மிகுந்த மனநிறைவு” என நெகிழ்ந்து போனார்..

– கிருஷ்வின்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.