மோசடி நிறுவனங்களை கண்டறியும் வழி…
இன்றைக்கு ஊருக்கு ஊர் மோசடி நிதி நிறுவனங்கள் பொதுமக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டு தான் இருக்கின்றன.மாதம் தோறும் 8%, 16%, 24% அதற்கு மேலும்கூட வருமானம் தருவதாகச் சொல்லி, மக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்த பிறகு, ஒரு நல்ல நாளில் மொத்தப் பணத்தை யும் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவது இது மாதிரியான நிறுவனங்களின் தொழிலாக இருக்கிறது. மோசடி நிறுவனங்கள் நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள் குறித்துப் பார்ப்போம்.
அதிகமான லாபம் தருவோம்….
எந்த முதலீடாக இருந்தா லும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குதான் வருமானம் கிடைக்கும். மூலதனத்துக்குப் பாதுகாப்புத் தரும் வங்கி எஃப்.டி போன்ற திட்டங்களில் ஆண்டுக்கு 6% வருமானம் கிடைக்கும். அதாவது, ரூ.1 லட்சத்தை வங்கி எஃப்.டி-யில் முதலீடு செய்தால், ஓராண்டு கழித்து ரூ.6,000 வருமானம் கிடைக்கும். இந்த அளவு வருமானம் தான் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் தர முடியும். இதற்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று சொல்லும் முதலீடுகளில் என்ன ரிஸ்க் இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
என்ன தொழில் (அ) எதில் முதலீடு….
எந்தத் தொழில்/முதலீடாக இருந்தாலும், குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும். அந்த லாபமும் ஒவ்வோர் ஆண்டும் கிடைக்கும் என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை. எனவே, அதிகமான லாபம் தருவோம் என்று சொல்லும் நிறுவனங்களில் பணம் கட்டும்முன், அந்த நிறுவனம் என்ன தொழில் செய்கிறது அல்லது நம் பணத்தை எதில் முதலீடு செய்து, இவ்வளவு தருவதாகச் சொல்கிறது என்று கேளுங்கள். ஷேர் மார்க்கெட் டிரேடிங், கமாடிட்டி டிரேடிங், ஃபாரெக்ஸ் டிரேடிங், கிரிப்டோகரன்சி டிரேடிங், ஏற்றுமதி/இறக்குமதி எனப் பல பொய்களைச் சொன்னால் நம்பாதீர்கள்.
அரசுப் பதிவுபெற்ற நிறுவனமா-…
நம் நாட்டில் செயல்படும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அரசு அனுமதி பெற வேண்டும். ஒரு சிறு டீக்கடையை நடத்தினாலும், அதற்கான அனுமதியை வாங்கியே ஆக வேண்டும் என்கிறபோது, கொள்ளை லாபம் தருவோம் என்று சொல்லும் நிதி நிறுவனங்கள் எந்தெந்த அரசு அமைப்புகளிடம் அனுமதி வாங்கி இருக்கின்றன எனக் கட்டாயம் கவனிக்க வேண்டும். பலரிடமும் பணம் வாங்கி, ஏதோ ஒன்றில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரிய மான ‘செபி’யிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். சில நிறுவனங்கள் ஜி.எஸ்.டி எண்ணைக் காட்டி ஏமாற்றுகின்றன. இதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
பத்திரம் எழுதித் தந்தால்…
மோசடி நிறுவனங்கள் மக்களிடம் வாங்கும் பணத்துக்கு சான்றாக பத்திரம் எழுதித் தந்தால், அதை நம்பாதீர்கள். மக்கள் தரும் பணத்துக்கு 20 ரூபாய் பத்திரத்தில் எழுதித் தந்தால், அது உத்தரவாதமான ஆவணமாக மக்கள் நினைக்கிறார்கள். எந்தப் பத்திரமாக இருந்தாலும், அதைப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். வெறும் 20 ரூபாய் பத்திரத்தில் எழுதித் தரும் வாசகங்களை வைத்து நம் பணம் நிச்சயமாகத் திரும்பக் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.