தொழிலாளர்களை பாதுகாக்க, நலத்திட்ட உதவிகள் வழங்க 17 வாரியங்கள் இருக்குப்பா… உங்களுக்கு தெரியுமா?
இந்தியா முழுவதும் சிறு, குறு விவசாயிகள், சாலையோர வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் 43.70 கோடி பேர் உள்ளனர் என்கிறது தொழிலாளர் நலத்துறை. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள், வேலை வாய்ப்பு என பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு, பணி ஒழுங்கு உள்ளிட்டவற்றிற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
யாரெல்லாம் சேரலாம்
கடந்த 1982ம் ஆண்டு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள்(வேலை மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் அரசின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், உதவிகள் கிடைக்கும் வகையில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதிவு செய்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள், ஓய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி உதவி, விபத்து மற்றும் இறப்பிற்கு இழப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவற்றை பெற வேண்டும் என்றால், அவர்கள் வேலை சார்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டியது முக்கியம். நலவாரியங்களில் யாரெல்லாம் சேரலாம். சேர்ந்தால் கிடைக்கும் பயன்களை பார்க்கலாம்.
வாரியங்களின் விவரம்
செய்யும் தொழில், பணி அடிப்படையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், உடலுழைப்புத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தையல், கைவினைஞர், பனை மரத் தொழிலாளர், ஓவியர், பொற்கொல்லர், கைத்தறி நெசவாளர், விசைத்தறி, மண்பாண்டத் தொழிலாளர், சமையல், சாலையோர வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள் நலம் என 17 வகையான அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளன. இவற்றின் கீழ் பல்வேறு வேலைகளைச் செய்வோர் அதன் தொடர்புடைய நலவாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.
குறிப்பாக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், கல் உடைப்பவர், எலக்ட்ரீசியன், பிளம்பர், வெல்டர், பூங்கா நடைபாதை அமைப்பவர் என 50க்கும் மேற்பட்ட பணிகளை செய்வோர் உறுப்பினராக பதிவு செய்ய கொள்ளலாம். உடல் உழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் பிற நல வாரியத்தில் சுமை தூக்குவோர், உப்பள தொழிலாளர், தூய்மைப் பணியாளர்கள், மர வேலை செய்வோர் உள்ளிட்ட 60 வகையான பணிகளை செய்வோர் பதிவு செய்து கொள்ளலாம்.
வாரியத்தில் சேர விரும்புவோருக்கு 18 வயதில் இருந்து 60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தில் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்து, இதற்கான இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கி கணக்கு விபரம்
விண்ணப்பத்துடன், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தொழிலில் ஈடுபட்டுள்ளதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். இந்த சான்றை கிராம நிர்வாக அலுவலர், பணி அளிப்பவர், தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் ஆகிய ஒருவரிடம் பெற வேண்டும்.பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கம், கட்டுமான தொழிலாளர்களுக்கு பதிவு பெற்ற ஒப்பந்ததாரர் அல்லது கட்டுமான நிறுவனத்தின் சான்று வேண்டும். விண்ணப்பதாரரின் வயது சான்று, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களையும் இணைத்து வழங்க வேண்டும்.
ரூ.5 லட்சம் இழப்பீடு கிடைக்கும்
அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்களின் மகன் திருமணத்திற்கான உதவித்தொகை ரூ. 3, 000. மகள் திருமணத்திற்கான உதவித் தொகை ரூ. 5, 000. மகப்பேறு நிதியுதவி ரூ. 6,000, கருக்கலைப்பு/கருச்சிதைவிற்கு ரூ. 3,000 உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது.
உறுப்பினரின் 60 வயது நிறைவிற்கு பின்னர் அல்லது அதற்கு முன்னர் நோயினால் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் மாதம் ரூ. ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கட்டுமானத் தொழிலாளி பணியிடத்தில் இறந்தால் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. விபத்தில் உடல் உறுப்பு இழப்பு, துண்டிப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டால் இழப்பிற்கு ஏற்ப ரூ. 1 லட்சம் வரை இழப்பீட்டுத் தொகை. இயற்கை மரணம் ஏற்பட்டால் நியமனதாரருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு. ஈமச் சடங்கிற்கு ரூ. 5, 000 வழங்கப்படுகிறது.
பெண் குழந்தைகள் படிப்புக்கு நிதி
நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு கல்வியாண்டும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதன்படி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ. 1, 000 உதவித் தொகை, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ. 1,500 வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகள் 10, 11ம் வகுப்பு படிக்க ரூ. 1, 000, 12ம் வகுப்பு படிக்க ரூ. 1, 500, பட்டப் படிப்பிற்கு ரூ. 1, 500, விடுதியில் தங்கி படித்தால் ரூ. 5, 000, தொழில் நுட்ப பட்டம், சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு ரூ. 4, 000, விடுதியில் தங்கிப் படித்தால் ரூ. 6, 000 வழங்கப்படுகிறது.
தொழிற்கல்வி மேற்படிப்பிற்கு ரூ. 6,000, மேற்படிப்பை விடுதியில் தங்கி படித்தால் ரூ. 8, 000, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ. 1, 000, விடுதியில் தங்கிப் படித்தால் ரூ. 1, 200 என உதவித் தொகை வழங்கப்படுகிறது. நலத்திட்ட உதவித் தொகை அனைத்தும் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.