கலை ஆர்வம் இருந்தால் போதும் கலக்கல் வருமானம் பார்க்கலாம்.!
படைப்புத்திறன் அவசியம்
அனிமேஷன் துறை, அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இத்துறையில் பயிற்சி தருவதற்கு சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரை போட்டி போடுகின்றன. உள்ளுக்குள் ஊறியிருக்கும் படைப்புத் திறனை இவற்றில் மெருகேற்றிக் கொண்டால், முயற்சி திருவினையாக்கும்! அனிமேஷன் படிப்புக்கான குறுகியகால படிப்புகள் உள்ளன. விநாடி அடிப்படையில் வருமானத்தைக் கொட்டும் தொழில் இது.
பிரிண்டிங் தொழில்
ஸ்க்ரீன் பிரின்ட்டிங், ஃபேப்ரிக் பிரின்ட்டிங் போன்ற தொழில்கள் தொடங்க அதிகம் முதலீடு தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு வார பயிற்சி போதும். ஸ்க்ரீன் பிரின்ட்டிங்கில் பொதுவாக விசிட்டிங் கார்டுகள், திருமண அழைப்பிதழ்கள் என்று பிசியாகவே இருக்க முடியும். ஃபேப்ரிக் பிரின்ட்டிங்கைப் பொறுத்தவரை பெண்களுக்கான உடைகள் விற்கும் கடைகளோடு நல்ல தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வது வளர்ச்சிக்கு உதவும்.
ஓவியம் வரைபவரா?
ஓவியம், கார்ட்டூன் போடும் கலை உங்களுக்கு வாய்த்திருக்கிறதா? பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் அதன் உதவி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுடன் மின்னஞ்சல், கடிதம் வழியாகத் தொடர்பு கொண்டு வாய்ப்புக் கேட்டு முன்னேறலாம்.
கிளாஸ் பெயிண்டிங்
‘கிளாஸ் பெயின்ட்டிங்’ இப்போது மிகவும் பாப்புலர். நல்ல கவன சக்தி இருந்தால் போதும் கண்ணாடி பெயின்ட்டிங்கில் கலக்கலாம். இன்ட்டீரியர் டிசைனரோடு தொடர்பில் இருந்தால் வாய்ப்புகள் தேடி வரும்.
ஃபேஷன் ஜுவல்லரி
ஃபேஷன் ஜுவல்லரி உருவாக்குவது இப்போதைக்கு சூப்பர் பிசினஸ். வேலையில் இருக்கும் பெண்கள்கூட ஓய்வு நேரங்களில் இதில் இறங்கி காசு பார்க்கிறார்கள். இதற்கான பயிற்சி நிலையங்கள் எக்கச்சக்கமாக உள்ளன. நகரங்களில் இதற்கென தனிக் கடைகள் உள்ளன.
ஃபேஷன் டிசைனிங்
ஃபேஷன் டிசைனிங்… வீட்டில் இருந்தபடியே செய்யக் கூடிய ஒரு நல்ல வேலை. நல்ல கற்பனை வளமும், உலக ஞானமும் இருந்தால் இதில் சாதிக்கலாம். ரெடிமெடு ஆடை நிறுவனங்களில் நிறைய வாய்ப்பு உள்ளது.
தையல் கலை
வீட்டு ஜன்னல் களுக்கு அழகழகாக கர்ட்டன் செய்து போடுவது ஒரு நல்ல கலை. சிறப்பாக வடிவமைக்க முடிந்தால், அது ஒரு நல்ல தொழிலாகிவிடும். கொஞ்சம் டெய்லரிங், கொஞ்சம் கலையுணர்வு இரண்டும் இருந்தால்… நிறைய சம்பாதிக்கலாம்.
பொம்மை தயாரிப்பு
பொம்மை செய்வது பெண்களுக்கு எளிதான ஒரு பணி. பொம்மை உருவாக்கும் கம்பெனிகளிடமிருந்து ஆர்டர் பெற்று வீட்டிலேயே பொம்மைகளைத் தயாரிக்கலாம். அக்கம் பக்கத்து கடைகளிலேயே ஆரம்பகட்ட ஆர்டகளை கணக்கிட்டு, தொழிலைத் தொடங்கலாம். வருபவர்களின் பார்வையில் நீங்கள் தயாரித்த பொருட்கள் பட்டால் அதிர்ஷ்டம் உங்களுக்குதான்.