மலிவு விலையில் மருந்து மக்கள் மருந்தகம்:
ஒவ்வொரு குடும்பமும் பொருளாதாரத்தில் பெரும்பகுதியை இன்று மருத்துவத்திற்காகவே செலவு செய்கிறது. தினசரி உணவுடன் சேர்த்து இரண்டு மாத்திரை என்று சொல்லும் அளவிற்கு, மாத்திரைகள் இன்றி மனிதர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு மருந்து, மாத்திரைகள் உணவின் அங்கமாகவே மாறிவிட்டது.
மருத்துவச் செலவிற்காக மாதம் ரூ.1,000த்திற்கும் மேல் செலவு செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கை ஏராளமாக உள்ளன. இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் மருந்துப் பொருட்கள் விற்பனை நடப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரிய வருகிறது. சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட பங்கு மருத்துவமனைக்கும், மருந்துகளுக்குமே சென்று சேர்கிறது.
இந்தியாவில் ‘ஜெனரிக் மெடிசன்’ என்று கூறப்படும் மலிவு விலை மருந்து விற்பனை அறிமுகமான போது எம்.ஜி.ராமகிருஷ்ணன், மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி, மருத்துவத்துறை பற்றிய அனுபவம் பெற்றிருந்தார். அப்போது அவருக்குள் தோன்றியது, “நாம் ஏன் மலிவு விலை மருந்தகத்தை தொடங்கக் கூடாது என்று”.
இதையடுத்து மக்களுக்கு மலிவு விலையில் மருந்து வழங்கிட ஜெனரிக் மெடிசனை விற்பனை செய்வதற்கென தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தார். அதே வேளையில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திட்டமும் அறிமுகமானது.
இணையம் வழியாக மத்திய அரசின் மக்கள் மருந்தகம் தொடங்குவதற்கு எம்.ஜி. ராமகிருஷ்ணன் விண்ணப்பம் செய்தார். மருந்துகளை மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்வதற்கு அனுமதி பெற்று, திருச்சி, பெரிய மிளகு பாறை, மெடிக்கல் கல்லூரி எதிரே சில்லரை விற்பனை செய்யும் மக்கள் மருந்தகத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார் எம்.ஜி.ராமகிருஷ்ணன்.
பிற மருந்து கடைகளில் விற்கப்படும் மருந்துப் பொருட்கள் இங்கே 30% முதல் 90% வரை குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. தெளிவாகக் கூற வேண்டும் என்றால் ஒரு சர்க்கரை நோயாளி தனக்கான மாத்திரையை பிற கடைகளில் ரூ.100 கொடுத்து வாங்குகிறார் என்றால் இங்கே அதே மருந்து ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு எம்.ஜி. ராமகிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில், “ஒரு நிறுவனம் மருந்து தயாரித்தவுடன் அதை விற்பனை செய்ய நாடு முழுவதும் ஸ்டாக்கிஸ்ட், டீலர், விற்பனை பிரதிநிதிகள் நியமிப்படுவதோடு மருந்துகளை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கென தனியாக செலவழிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் மக்கள் மருந்தகம், மத்திய அரசு தயாரிக்கும் மருந்து பொருட்களை நேரடியாக தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்து தருவதால், இடையில் கைமாறும் செலவுகள் தவிர்க்கப்பட்டு, குறைவான விலைக்கு எங்களால் தர முடிகின்றது.
எவ்வித மார்க்கெட்டிங் வேலைகளும் மக்கள் மருந்தகத்தில் கிடையாது. ஜெனரிக் மெடிசனில் நிறுவனத்தின் பெயர், பிராண்டு நேம் இருக்காது. அதற்கு பதிலாக மருந்து பொருளின் பெயர் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கும். மலிவு விலை மருந்துகள் குறித்து செய்தித்தாள்களில் படித்து அறியும் மக்கள், மருத்துவர்கள் எங்களிடம் குறைவான விலையில் அவற்றை பெற்றுச் செல்கின்றனர்” என்றார். குறைவான மருந்துப் பொருட்களை பிற மக்கள் மருந்தகத்திற்கு மொத்தமாகவும் விற்பனை செய்து வருகிறார். மொத்தமாக கொள்முதலில் மருந்து வேண்டுவோர் 91714-19911 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.