திருச்சி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புகள்
பட்டாசு கடைகள் உரிமை பெற விண்ணப்பிக்கலாம்:
தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, திருச்சி மாவட்ட தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக் கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008-க்குட்பட்டு, உரிய ஆவணங்களுடன் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும், அதன் பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அழைப்பு..!
தரமான அரிசி வழங்கும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடப்பு கொள்முதல் பருவம் 2020–21ல் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவர்களாக செயல்பட்டு வரும் தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து பொது வினியோக திட்டத்துக்கு வழங்கி வருகிறது. மண்டலங்களில் கூடுதலாக இருப்பில் உள்ள நெல்லினை கழகத்தில் இணையாத தனியார் புழுங்கல் அரவை ஆலைகள் மூலம் கழக நிபந்தனைகளுக்கு உட்பட்டு, செப்டம்பர் 15ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை அரவை செய்து, முதல் அரிசியை கிடங்கில் ஒப்படைப்பு செய்ய ஏதுவாக தனியார் புழுங்கல் அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கூடுதல் விவரங்களுக்கு திருச்சி, கன்டோன்மென்ட், கோர்ட் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
மீன்பிடி உரிமை பெற விண்ணப்பிக்கலாம்
இதே போல் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், “திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து ஓடை நீர்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமை தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் 5 ஆண்டுகளுக்கு (2021—–22 முதல் 2026—27 முடிய) குத்தகை விட ஒப்பந்தப்புள்ளி மூலம் ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. குத்தகை எடுக்க விரும்புவோர் மீன்பிடிப்பு விபரங்கள் மற்றும் குத்தகை தொடர்பான விபரங்களை திருச்சி, மன்னார்புரம், காஜா நகர், காயிதே மில்லத் தெரு. எண்.4ல் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஒப்பந்தப்புள்ளி விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகள் நகலை www.tenders.in.gov.in மற்றும் www.fisheries.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து அதில் காணப்படும் வழிகாட்டுதல்களின்படி ஏலம் கோரவும் தெரிவிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.