எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தவில்லை என்பவர்களா நீங்கள்?
இதற்கான காரணமே ஆடம்பரம் தான். உங்களுக்கேற்ற லைப்ஸ்டைலை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். 15 ஆயிரம் சம்பளம் வாங்குபவரிடம் பைக் கூட ஆடம்பரம் தான். ஈஎம்ஐ மற்றும் பெட்ரோல், 2 மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் என செலவு செய்ய நேரிடும். உங்கள் வருமானத்துக்கு ஏற்ற வாழ்க்கையை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
முதலில் உங்களிடம் என்னவெல்லாம் இருக்கிறது என பட்டியலிடுங்கள். 2 ஜீன்ஸ் பேண்ட் இருக்கிறது. சனிக்கிழமை மட்டும் தான் ஜீன்ஸ் பேண்டும், டீசர்டும் அணிய வேண்டும் என்றால் மூன்றாவது ஜீன்ஸ் பேண்டுக்கு அவசியமில்லைதானே.. 50 சதவீதம் தள்ளுபடி போட்டு ஜீன்ஸ் விற்கிறார்கள் என்பதற்காக கூடுதலாக நாலு பேன்ட் வாங்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. பீரோவில் அயர்ன் பண்ணி அடுக்கி வைத்திருக்க போகிறோம். அவ்வளவு தான்.
ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்குள் நுழைகிறீர்கள். அங்கிருக்கும் கடையில் அழகான வாட்ச் ஒன்றை பார்த்து விலை விசாரிக்கிறீர்கள். உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்…
கொஞ்சம் தள்ளி போய் வேறு இடத்தில் உட்கார்ந்து யோசிக்க வேண்டும். அந்த வாட்ச் தற்போதைக்கு தேவைதானா… நேரத்தை செல்போனிலேயே காணலாமே… அந்த வாட்ச் இல்லாமல் வாழ முடியாத நிலை என்றால் வாட்சை வாங்கலாம். இதுதான் நுகர்வு கலாசாரத்தில் பலியாகாமல் இருப்பதற்கான சூத்திரம்.
ஐந்து நிமிடம் யோசிப்பதால் காசு, பணமா செலவாகிறது… தேவைக்கு அதிகமாக நம்மிடம் சேரக்கூடிய ஒவ்வொரு பொருளும் குப்பைக்கு சமமே என்பதை மனதில் நிறுத்தினாலே போதும், நம் வாழ்க்கையில் செல்வங்களை சேர்க்கலாம்.