ஏ.டி.எம் கார்டு பரிவர்த்தனை ‘நச்னு’ டிப்ஸ்..!
1. வங்கியிலிருந்து ஏ.டி.எம் கார்டை வாங்கிய உடன் உடனடியாக பின் (PIN-Personal Identification Number) நம்பரை மாற்றவும். குறிப்பிட்ட இடைவெளியில் இந்த எண்ணை மாற்றுவதன் மூலம் மோசடியில் சிக்காமல் தவிர்க்கலாம்.
2. பின் எண்ணை எங்கும் எழுதி வைக்க வேண்டாம். அதை மனப் பாடமாக வைத்திருங்கள். மூன்றாம் நபர் யாருக்கும் தெரியப்படுத்தக் கூடாது.
3. உங்கள் ஏ.டி.எம் கார்டை நீங்கள் மட்டுமே பயன்படுத்துங்கள். கணக்கு வைத்திருப்பவரை தவிர வேறு எந்த நபருக்கும் பரிவர்த்தனைக்காக ஏ.டி.எம் கார்டு கொடுக்கப்பட்டு, அதன் மூலம் பண இழப்பு ஏற்பட்டால் வங்கி பொறுப்பு ஏற்காது. கணவர் மனைவியின் ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கும்போது ஏதாவது சிக்கல் வந்தாலும் வங்கி பொறுப்பு ஏற்காது; இழப்பீடு தராது. மேலும், ஏ.டி.எம் கார்டை தவறாகப் பயன்படுத்தியதாக வங்கி வழக்கு தொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.
4.வங்கி வளாகத்தில் செயல்படும் ஏ.டிஎ.ம் இயந்திரம் அல்லது 24 மணி நேரமும் பாதுகாப்பு காவலருடன் இயங்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவது எப்போதும் நல்லது.
5.ஏ.டி.எம் கார்டை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும்போது, மெய்நிகர் விசைப் பலகையை (Virtual Keyboard) பயன்படுத்துவது மூலம் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் யூசர் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு பதிவாவது தடுக்கப்படும்.
6.ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்கப்பட்டவுடன் எஸ்.எம்.எஸ் மற்றும் மெயில் மூலம் தகவல் பெறும் வசதிக்கு வங்கியில் பதிவு செய்வது அவசியம்.
7.ஏ.டி.எம் கார்டு தொலைந்து போனால் உடனடியாக வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த கார்டை முடக்கச் சொல்லுங்கள்.