Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வணிகம் பழகு… தொழில் முனைவோருக்கான புதிய தொடர் – 2

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

வணிகம் பழகு… தொழில் முனைவோருக்கான புதிய தொடர் – 2

தளராத மனஉறுதி..! ஏறத்தாழ 186 வருடங்களுக்கு முன்பு நடந்த ஓர் உண்மை சம்பவம் ..!
நியூயார்க் நகரத்திற்கும் அதன் அருகில் இருந்த “Long Island” தீவுக்கும் இடையே பாலம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். கடல் மீது பாலம் கட்டுவது என்பது அந்த காலத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயம். ஆனால், பாலம் கட்ட முடியும் என்று John Roebling என்ற ஒரு பொறியாளர் யோசனை தெரிவித்தார்.

இதை கேட்டு பாலம் கட்டும் வல்லுநர்கள் உட்பட பலரும் “சரியான முட்டாள்தனம்“ என்று அவரை கேலி செய்தனர். ஆனால், ஜான் மனம் தளரவில்லை. பாலத்தை எப்படிக் கட்டலாம் என்று கட்டிட பொறியாளரான தன் மகன் வாஷிங்டனுடன் தீவிரமாக ஆலோசனை நடத்திவிட்டு வேலையை ஆரம்பித்தார். கட்டுமான பணிகள் ஆரம்பித்த ஒரு சில மாதங்களுக்குள்ளேயே பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் ஜான் பரிதாபமாக இறந்து போனார்.

இது நடந்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே வாஷிங்டனும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அவரது பேசும் திறன் பறிபோனது. வலது கையும் செயல்பட முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டது. பாலம் கட்டும் முயற்சியை பரிகாசம் செய்தவர்களுக்கோ பயங்கர குஷி. ஜானும், வாஷிங்டனும், “அசல் முட்டாள்கள்”என்று நிரூபணம் ஆகிவிட்டதாக கூத்தாடினார்கள்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடந்த வாஷிங்டனால் பேசவோ, எழுதவோ முடியவில்லை. அதனால், தான் சொல்ல நினைத்ததை தந்தி பாஷை மாதிரி மனைவியின் கையில் தனது இடது கைவிரல்களால் தட்டித் தட்டிப் புரிய வைத்தார். சில நாட்களில் இந்த பாஷை கணவன்- மனைவி இரண்டு பேருக்கான தனி மொழியாகிவிட்டது.

ஒரு நாள் வாஷிங்டன் தனது மனைவி மூலமாக பாலம் கட்டும் பொறியாளர்களை மருத்துவமனைக்கு வரச்சொல்லி பாதியில் நின்று போன பாலம் கட்டும் வேலையை மீண்டும் ஆரம்பிக்க உத்தரவுகள் பிறப்பித்தார். அடுத்தடுத்து வேலைகள் எப்படி நடைபெற வேண்டும் என்பதை தனக்கும் தன் மனைவிக்குமிடையே பரிச்சயமாகிவிட்ட புதிய பாஷையின் மூலமாக தெரிவிக்க, வாஷிங்டன் கனவு கண்டபடியே அந்த பாலம் எழுந்து நின்றது. பத்து வருடம் கழித்து ‘Brooklyn Bridge’ என்ற பெயரில் அந்த பாலத்தில் போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது. குறை சொன்னவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

தளராத மனஉறுதியால் உருவான புருக்ளின் பாலம்

சென்ற இதழ் கட்டுரையில் அஸ்திவாரம் எவ்வளவு முக்கியம் என்று கூறினேனோ அது போல், தளராத மனஉறுதி, நாம் நினைத்த எல்லைக்கு, நம்மை இட்டுச் செல்லும் என்பதற்கு வாஷிங்டன் கட்டமைத்த ‘‘Brooklyn Bridge’’ ஒரு நிஜ சாட்சியம்..!

 

விடாமுயற்சி..!
கோரன் கிரப் (GORAN KROPP)


இவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மலையேற்ற நிபுணர். ஒரு அதிசய பிறவி என்று கூட சொல்லலாம். உயரமான பனிமலைகளில் ஏறுபவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர் துணையில்லாமல் மலையேற முடியாது. ஆனால், இவரோ ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமலும், உதவியாளர்கள் இல்லாமலும், தனியொருவராக எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு புதிய சாதனையை படைத்தவர்.

இந்த சாதனையைச் செய்ய இவர் மேற்கொண்ட செயலினை அறிந்தால் மிகுந்த ஆச்சர்யமாக இருக்கும், மலையேற்ற பயிற்சி பெற இவர் நேரம், காலம் பார்க்க மாட்டார். எந்த நேரம் வேண்டுமானாலும் தூங்கவும், எந்த நேரம் வேண்டுமானாலும் தூக்கம் கலைந்து எழுந்திருக்கவும் பயிற்சி எடுக்கும் நோக்கத்தில் கண்களை மூடிக்கொண்டு, கைபோன போக்கில் கடிகாரத்தில் அலாரத்தை செட் செய்வார்.
இப்படிச் செய்வதால் இரவு படுத்த உடனேயும் அலாரம் அடிக்கலாம். அதற்காக மனிதர் துளி கூட கவலைப்படமாட்டார். உடனடியாக படுக்கையை உதறிவிட்டு மலையேற்ற பயிற்சியை ஆரம்பித்துவிடுவார்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இப்படி பசி, தூக்கம் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூட பொருட்படுத்தாமல் மனதையும், உடம்பையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் எவரெஸ்ட் சிகரத்தை தனி ஒருவராக தொட்டு சாதனை படைத்தார் கோரன் கிரப். விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி எனச் சொல்வார்களே, அது கோரன் கிரப்பிற்கு பொருத்தமான வார்த்தைகளாகும்.

வாழ்க்கையில் நிர்ணயித்த இலக்கை அடைய துடிப்பவர்கள் கேளிக்கை, பொழுதுபோக்கு போன்றவைகளில் அடிமைபடக் கூடாது. கேளிக்கைகளும், பொழுதுபோக்கும் நம் வெற்றிப் பாதையில் தடைக்கற்களாக இருந்தால் அவற்றை தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். மன இறுக்கத்திலிருந்து வெளிவருவதற்கும், தன்னை புதுப்பித்துக் கொள்வதற்கும்தான் கேளிக்கையும், பொழுதுபோக்கும் தேவை என்பதை உணர்ந்தவர்கள் மட்டுமே அதிசயதக்க சாதனைகளை செய்திருக்கிறார்கள்.

நாம் எடுத்துக் கொண்ட வேலையில் வெறும் உடல் உழைப்பை மட்டும் கடுமையாக அளித்தால் மட்டும் போதாது. உழைப்புடன் சற்றே புத்திசாலித்தனத்தை கலக்க வேண்டும். அப்படிச் செய்தால் நாம் செய்யும் வேலை மேலும் சிறப்பாக அமையும்.

உழைப்புடன் தேவை புத்திசாலித்தனம்..!
ஒரு மரம்வெட்டி. மிகக் கடுமையான உழைப்பாளி அவன். தினமும் 12 மணி நேரம் உழைப்பான். ஆனால், அவனைவிட குறைந்த நேரம் உழைத்த அவனது நண்பன் தினம், தினம் அதிக மரங்களை வெட்டி, அதிகம் சம்பாதித்து வந்தான். இதை கண்ட அந்த மரம்வெட்டி, ஒரு நாள் தன் நண்பனிடம், “ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை செய்தால் கூட உன் அளவுக்கு என்னால் மரங்களை வெட்ட முடியவில்லையே? அது ஏன்? என்று கேட்டான். அதற்கு அந்த நண்பன், “நான் ஒரு மணி நேரம் மரம் வெட்டியதும், ஐந்து நிமிடம் ஓய்வெடுப்பேன். அந்த ஓய்வு நேரத்தில் என் கோடாரியை கூர் தீட்டிக்கொள்வேன். அவ்வளவுதான் ரகசியம்..! “ என்றான்.

மழுங்கின கோடாரியை வைத்து மாங்கு மாங்கு என்று வேலை பார்த்த உழைப்பாளிக்கு நண்பனின் புத்திசாலித்தனம் புரிந்தது. கடுமையான உழைப்பாளியாக இருந்தால் மட்டும் போதாது. புத்தியை பயன்படுத்தி உழைக்க வேண்டியதே முக்கியம் என்ற உண்மை அவனுக்கு புரிந்தது.

வியாபாரத்தில் அடுத்தவர்களின் விமர்சனங்களையும், யோசனைகளையும், கருத்துக்களையும் மதிப்பளித்து காது கொடுத்து கேட்கலாம். ஆனால், அவற்றில் எது ஏற்றுக்கொள்ளக்கூடியது, எது ஒதுக்கப்படவேண்டியது என்று முடிவெடுக்க தெளிவான சிந்தனை அவசியம். உள்நோக்கம் கொண்ட விமர்சனங்களால் விரிசல் விடாத நெஞ்சுரம் மட்டும் இருந்துவிட்டால் உள்ளே இருக்கும் உந்துசக்தி நம்மை நிச்சயம் மிகப் பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

கோரன் கிரப்பின் மனஉறுதியும், வாஷிங்டனின் விடாமுயற்சியும் நமக்கு இருக்கும் பட்சத்தில் வெற்றி என்பது நம் கைகெட்டும் தூரத்தில் தான்..!-

பழகலாம் தொடர்ந்து..!

கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை imagefelixrtn@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு வரவேற்கிறோம்..

முந்தைய தொடர் 1 படிக்க…

வணிகம் பழகு… தொழில்முனைவோருக்கான புதிய தொடர் – 1

https://businesstrichy.com/business-practice-new-series-for-entrepreneurs-1/

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.