ஜப்பானைச் சேர்ந்த சோனி நிறுவனத்தின் இயக்குநர் இபுகா, ஹாலந்து நாட்டைச் சேர்ந்த இங்வார் கம்ப்ராட், அமெரிக்காவைச் சேர்ந்த டிஸ்னி, கே.எஃப்.சி. நிறுவனர் கர்னல் சாண்டர்ஸ் என வெளிநாடுகளில், பிசினஸில் பிரமாண்ட வெற்றிகளை சாதித்தவர்களுக்கு இணையான மனிதர்கள் நம் நாட்டிலும் பலர் உண்டு.! இவர்களின் பிரம்மாண்ட வெற்றிகளுக்கு பின்னால் பொதித்திருக்கும் ரகசியங்களை அறிந்து கொண்டால் நாமும் டாடா, பிர்லா தான்.
“பெரிய அம்பானினு நெனப்பு” என்று இப்போது சொல்கிறோமே அது போல் எண்பதுகளில்(1980’) “பெரிய டாடா, பிர்லானு நினைப்பு”. என்ற வாசகம் சரளமாய் உபயோகிக்கப்படும். அடிக்கடி உபயோகித்தாலும் அவர்கள் பெரிய கோடீஸ்வரர்கள் என்பதை தாண்டி நம்மில் பலருக்கு அவர்களை பற்றிய பின்னணி விபரங்கள் தெரியாது.
இந்தியாவின் முதல் கோடீஸ்வரரான டாடாவைப் பற்றி தெரிந்து கொள்வோம். முதலில் ஒரு சின்ன சம்பவம்.
பிஸினஸ் வாழ்க்கையில் ஜே.ஆர்.டி டாட்டா அடியெடுத்து வைத்த போது, அவருக்கு வயது இருபத்தொன்று. டாட்டா ஸ்டீல் என்ற தன் குடும்ப நிறுவனத்தில் அவர் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே அவருக்கு கடுமையான டைஃபாய்ட் ஜூரம் வந்துவிட்டது. டாக்டர்கள் அவரை வீட்டிலேயே ஓய்வெடுக்க சொல்லியிருந்தார்கள். அதன்படி வீட்டிலிருந்த டாட்டா, சும்மாயிருக்கவில்லை. பெரிய பெரிய பிசினஸ் புத்தகங்களை எடுத்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவரது சகோதரி அவரிடம்,
ஜுரம் தான் அடிக்கிறதே, ஓய்வெடுப்பதை விட்டுவிட்டு இப்படி புத்தகங்களை எடுத்து வைத்து படித்துக்கொண்டிருக்கிறாயே..?” என்று கேட்டார். அதற்கு டாட்டா சொன்ன பதில்,
“நான் டாட்டா குடும்பத்தில் பிறந்திருக்கிறேன். அதற்கு தகுதியானவனாய் என்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா?”. இது தான் ஜே.ஆர்.டி டாட்டா.
ஜே.ஆர்.டி.டாட்டா பள்ளி படிப்பு முடித்ததும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிப்பதாக இருந்தது, ஆனால் டாட்டாவால் கேம்பிரிட்ஜ் செல்ல இயலவில்லை. அவரது தந்தை இறந்துவிட, அவரது இடத்தை நிரப்ப டாட்டா ஸ்டீல் நிறுவனத்திற்கு பொறுப்பேற்றார்.
அவர் போட்ட முதல் புதிய பாதை, இந்தியாவிற்கு மிகப்பெரிய நன்மையைச் செய்தது. அந்த காலத்தில், இந்தியாவில், விமான சேவை கிடையாது. விமானச் சேவையை துவக்கினால் மக்களுக்கு பயன்படும் புதிய பிசினஸாக இருக்கும் என்று நினைத்தார். 1932ல் கராச்சியிலிருந்து அகமதாபாத் வழியே பம்பாய்க்கு “டாட்டா ஏர்லைன்ஸ்” நிறுவனம் தனது முதல் சேவையை தொடங்கியது. கம்பெனியின் முதல் வருட லாபம் பத்தாயிரம் ரூபாய்.
டாடா தொடங்கிய அந்த “டாடா ஏர்லைன்ஸ்” நிறுவனம் தான் பின்னர் உருமாறி கோடி கோடியாய் சம்பாதிக்கும், “ஏர் இண்டியா”வாக இறக்கை கட்டிப் பறந்தது. இந்தியாவின் முதல் விமானச் சேவையை தொடங்கும் போது டாட்டாவிற்கு வயது 28.
1945-ம் ஆண்டு இந்தியாவிற்கு அணுசக்தி அவசியம் என்பதை உணர்ந்து, இந்தியாவின் முதல் அணுசக்தி சோதனைக் கூடத்தை அணுசக்தி விஞ்ஞானி ஹேமிபாபாவை கொண்டு உருவாக்கினார்.
எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கணித்து அதற்கேற்ப திட்டங்கள் போடும் தீர்க்கதரிசியாக டாட்டா இருந்தார்.
பிற கோடீஸ்வர தொழிலதிபர்களிடமிருந்து ஜே.ஆர்.டி.டாட்டா வேறுபடுவது இந்த விஷயங்களில் தான். அவர் எந்த தொழிலில் இறங்கினாலும் அது நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் நன்மை செய்யுமா என்று சிந்தித்தே இறங்கினார். டாட்டா பொறுப்பேற்ற பிறகு டாட்டா நிறுவனங்கள் தொடாத துறையே இல்லை.
“உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன..?” என்று டாட்டாவிடம் கேட்ட போது அவர் கூறிய பதில் இது.
“நான் மனிதர்களை நம்பினேன். யாரிடம் எப்படி வேலை வாங்குவது என்பதைக் கண்டுபிடித்தேன். ஒரு கம்பெனியின் தலைவனாக இருப்பதற்கு முக்கிய தகுதி அது. நன்றாக வேலை செய்ய மற்றவர்களை ஊக்கப்படுத்தினேன். நன்றாக வேலை செய்பவர்களிடம் குறுக்கே புகுந்து என் கருத்தை கூற மாட்டேன் அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுவேன். அது மட்டுமில்லாமல் எனது திட்டங்கள் எப்போதும் எதிர்காலத்தை உத்தேசித்தே செயல்படுத்தப்படும். எனது நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியடைந்ததற்கு இது தான் காரணம்.”
இப்படி தனது வெற்றிக்கு காரணம் கூறும் ஜே.ஆர்.டி.டாட்டா இறக்கும் போது அவருக்கு வயது எண்பத்தொன்பது..! ஒரு கோடீஸ்வர பிஸினஸ் மனிதரை சந்தித்தோம். எல்லோரும் கோடீஸ்வரர் வீட்டில் பிறக்க முடியுமா? இதோ அதற்கு நேரெதிராய் ஒரு சுவராசியமான மனிதரை சந்திப்போம்…
நாற்பது ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை துவங்கி உலகம் முழுவதும் தனது ஹோட்டல் சாம்ராஜ்யத்தை நிறுவியவரின் வெற்றிக் கதை.
சொந்த ஊரில் பிழைக்க வழியில்லாமல் வேலை தேடி சிம்லா வந்தவருக்கு ஹோட்டலில் வேலை கிடைத்தது. சம்பளம் மாதம் நாற்பது ரூபாய். அதிகாலை நான்கு மணிக்கு ஹோட்டலுக்கு வந்துவிட வேண்டும். ஹோட்டலில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவர் வேலை. சிம்லாவில், காலையில் எழுந்ததும் விருந்தினர்களின் முதல் தேவை சுடு தண்ணீராகத் தான் இருந்தது. இப்போதுள்ளது போல் அந்த காலத்தில் ஸ்விட்சை தட்டியதும் குழாயில் வெந்நீர் கொட்டாது. பாய்லரில் தான் தண்ணீரை சுட வைத்து அறைகளுக்கு அனுப்ப வேண்டும். இது தான் அவரின் முதல் பணி. வேலையில் சேர்ந்த முதல் இரண்டு நாட்கள் அதிகாலை நான்கு மணிக்கு வந்து கொண்டிருந்தவர், பிறகு இரண்டு மணிக்கே ஹோட்டலுக்கு வர ஆரம்பித்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்,
“நான்கு மணிக்கு வந்தால் நான்கு மணிக்கே எழுந்து விடும் சில விருந்தினர்களுக்கு, சுடுதண்ணீர் நேரத்திற்கு தர முடிவதில்லை. இரண்டு மணிக்கே அந்த வேலையை துவக்கிவிட்டால் குறையில்லாமல் சேவையை அளிக்கலாம்”. என்றார்.
இந்த ஆர்வத்தை பார்த்த நிர்வாகம் அடுத்த மாதமே சம்பளத்தை நாற்பது ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாயாக உயர்த்தியது. அவர் தான் எம்.எஸ் ஓபராய். இப்படித்தான் அவரது வாழ்க்கை துவங்கியது. பன்னிரண்டு வருடங்கள் அந்த ஹோட்டலில் வேலை பார்த்து, தொழிலில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டார்.
முதலாளி ஹோட்டலை விற்றுவிட்டு இங்கிலாந்து செல்ல முடிவு செய்தார். அவர் ஹோட்டலுக்கு குறித்த தொகை இருபதாயிரம் ரூபாய். இன்று இருபதாயிரம் ரூபாய் என்பது சாதாரண தொகையாக இருக்கலாம். 1934ல் அது மிகப் பெரிய தொகை. எப்படியாவது ஹோட்டலை வாங்கி விட வேண்டுமென்று ஓபராய்க்கு ஆசை. மனைவியிடம் சொன்னார்.
மனைவி கொடுத்த தைரியமும், ஹோட்டல் தொழிலில் தனக்கு இருந்த அனுபவத் தெளிவும், ஹோட்டலை வாங்கினால் கண்டிப்பாய் லாபகரமாக நடத்த முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. ஹோட்டலை விலைக்கு வாங்கினார்.
அந்த சமயம் கல்கத்தாவில் காலரா நோய் பயங்கரமாக பரவி ஏராளமானோர் பலியாகிக் கொண்டிருந்தார்கள். பலர் ஊரைவிட்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். இதனால் ஹோட்டல் தொழில் பயங்கரமாக அடிவாங்கியது. ஐந்நூறு அறைகள் கொண்ட கிராண்ட் ஹோட்டலை மூடப்போவதாக ஓபராய்க்கு தகவல் கிடைத்தது. மாதம் ஏழாயிரம் ரூபாய் வாடகைக்கு கிராண்ட் ஹோட்டலை எடுத்தார்.
முட்டாள்தனமான முடிவு என்று உடன் இருந்தோர் அனைவரும் எச்சரித்தனர்.
பெரிய ஹோட்டல் ஒன்றை நிர்வகிக்கும் வாய்ப்பு கிடைக்கிறதே என்ற எண்ணமும், இந்த வாய்ப்பை லாபகரமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் ஒன்று சேர, ஹோட்டலை வாடகைக்கு எடுத்தார் ஓபராய். அவரிடம் இருந்த துணிச்சலும், நம்பிக்கையும் அவருக்கு வெற்றியை கொடுத்தது.
காலரா காலத்திலும் கிராண்ட் ஹோட்டல் பாதுகாப்பானது என்பதை மக்களுக்கு உணர்த்தினார். அங்கு தங்குபவர்களுக்கு கூடுதல் வசதிகளை செய்து கொடுத்தார். இரண்டாம் உலகப் போர் மூண்டது. சுற்றுலா பயணிகளின் வரவு குறைந்தது. ஓபராய் செமத்தியாக மாட்டிக்கொண்டார் என்று அனைவரும் நினைத்தனர்.
எந்த பிரச்சினையிலும் ஒரு வியாபார லாபத்தை கண்டுபிடிக்கும் திறமை படைத்த ஓபராய், இந்த சிக்கலிலும் சில்லரை பார்க்க வழி கண்டுபிடித்தார்.
உலகப்போருக்காக பிரிட்டிஷ் படையினர் இந்தியாவுக்கு வந்திருந்தனர். பிரிட்டிஷ் அரசுடன் ஓபராய் பேசினார். பிரிட்டிஷ் படையினர் தங்க ஹோட்டலை வாடகைக்கு கொடுத்தார். ஹோட்டல் அறைகள் நிரம்பின, ஓபராயின் பணப்பெட்டியும் நிரம்பியது.
2002ம் வருடம் ஓபராய் இறக்கும் போது அவருக்கு வயது 103.
உலகில் அவரது ஹோட்டல்கள் இல்லாத இடமே இல்லாத அளவு தனது ஹோட்டல்களின் எண்ணிக்கையை பெருக்கினார். இத்தனை பெரிய சாம்ராஜ்யம் நாற்பது ரூபாய் சம்பளத்தில் துவங்கியது என்றால் ஆச்சரியம் தானே..!
இந்த வெற்றிக்கு ஓபராய் கூறும் காரணம் என்ன..?
“நிறைய சொல்லலாம். சிக்கல்களில் இருக்கும் போது சிரமத்தை பார்க்காமல் சிறந்ததை பார்த்தது. மிக முக்கியமாய் ஹோட்டலுக்கு வருபவர்களின் தேவைகளை அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மேலாக பூர்த்தி செய்தது. தரத்தை மிக முக்கியமாக நினைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக உழைப்பு, உழைப்பு, உழைப்பு..”.
உண்மை தான் உழைப்பைவிட பெரிய முதலீடு வேறு ஏது?
தொழிலை லாபத்தையும் தாண்டி சமுதாய முன்னேற்றத்திற்கான ஒரு விஷயமாக பார்ப்பது, வாய்ப்புகளை அடையாளம் கண்டு கொள்வது, பிரச்சனைகளிலும் வாய்ப்புகளை உருவாக்குவது – இவற்றால் இவர்கள் உலகால் அறியப்பட்டார்கள்.
முயன்றால் நமக்கான அடையாளத்தை பெறலாம் என்பதற்கு சான்று ஜே.ஆர்.டி டாட்டாவும், எம்.எஸ் ஓபராயும். உலகால் அறியப்பட்டு முத்திரை பதித்தவர்கள். நம் தமிழகத்திலும் ஏராளமானோர் உண்டு. அவர்களைப் பற்றி வரும் வாரங்களில்…
பழகலாம் தொடர்ந்து!
கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை imagefelixrtn@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு வரவேற்கிறோம்.