வணிகம் பழகு தொடர் – 5 உதவி பேராசிரியர் உலகளாவிய பிசினஸ்மேன் ஆன கதை!
உலகத்தில் உள்ள மிகச் சிறந்த வணிகத் தலைவர்களையும், நம் நாட்டின், வணிக பெருமையை உலகறிய செய்த வணிக மேதைகளையும் நாம் சந்தித்தோம். இனி
நமது தமிழகத்திலிருந்து உலக மெல்லாம் பரவிச் சென்ற ஒருவரை நாம் சந்திக்கப் போகிறோம்.
பொதுவாக தொழில் முனைவோருக்கான ஊக்கம்எதிலிருந்து வேண்டுமானாலும் வரலாம். நாம் பார்த்த விஷயம், கேட்ட நிகழ்வு, படித்த புத்தகம், ரசித்த சினிமா
எதிலிருந்து வேண்டுமானாலும் வரலாம். ஒருவருக்கு தீராத தாகமும், வெற்றி பெற
வேண்டும் என்ற உறுதியும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உந்துதலும்
ஏ ற் ப ட் டால் என்னவாகும் என்கிற கதையைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம். நமது ஹீரோ “ஹாட் பிரட்ஸ் மகாதேவன்” ( Hot Breads Mahadevan)
இவர் பிறந்தது உடுமலைப் பேட்டையில் இருவரும் மருத்துவர்கள். இவர்
குடும்பத்திற்கும் தொழிலுக்கும் இம்மியளவும் சம்பந்தமில்லை.
1977ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து
வந்த போது ஆர்த்தர் ஹேலி எழுதிய “ஹோட்டல்” என்ற நாவலைப் படித்துள்ளார். அதிலிருந்து உணவுத் தொழிலில் இறங்க வேண்டும் என்ற தீராத ஆர்வம் அவரது
உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. உணவுத் தொழிலில் தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள மாலை வேளைகளில் பகுதி நேரமாக ஹோட்டல்களில் பணிபுரியத் தொடங்கினார்.
இந்த வேலை தான் என்று இல்லாமல், ரிசப்னிஸ்ட், ரெஸ்ட்டாரண்ட் சூப்பர்வைசர், பார் மேனேஜர். ஏன் பெல்பாயாக கூட வேலை பார்த்திருக்கிறார். அப்போது அவருக்கு ஆச்சரியமாக தோன்றிய ஒரு விஷயம், ஒருவேளை உணவிற்காக அவர்கள் செலவிடும் தொகை நம் ஒரு மாத வருமானத்தை காட்டிலும் அதிகமாக
இருக்கிறதே? அப்போது அவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கும் என்பது தான்..! தொடக்கத்தில் உணவு சம்பந்தப்பட்ட தொழிலில் ஆர்வம் இருந்தது. இப்போது இத்தொழில் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகியது.
1982ம் வருடம் உதவி பேராசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தொழிலைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆரம்பித்தார். நண்பர் ஒருவருடன் சேர்ந்து Take away Chinese restaurant ஒன்றை ஆரம்பித்தார். சைனீஸ் உணவு வகைகளுக்கு நல்ல தேவை இருந்த காலகட்டம் அது. வாடிக்கையாளர்களுக்கு இருந்த தேவையை உணர்ந்து சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பிஸினஸ் நன்றாக இருந்தது.
அடுத்த கட்டமாக ஒரு Chinese Dinning Restaurant Cascade எனும் பெயரில் ஆரம்பித்தார். இதன் பிறகு தான் மெயின் பிக்சர் ஆரம்பமாகிறது. சைனீஸ் ரெஸ்டாரெண்ட் தொடர்பாக சிங்கப்பூர் சென்றிருந்த போது அங்கு, அளவில் சிறியதாகவும், பார்க்க அழகானதாகவும் இருந்த பேக்கரிகள் இவரை கவர்ந்தன. இதே போல் நம் ஊரில் வைத்தால் என்ன என்று தோன்றியது. சிந்திக்க ஆரம்பித்தார். இதற்கு அவருடைய நண்பர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு. “இது சரிவராது, நம் ஊருக்கு சம்பந்தமில்லாதது, ‘பிரட்’ என்றாலே உடல்நிலை சரியில்லாதவர்கள் மட்டுமே சாப்பிடுவது. பிரட் தயாரித்தால் ஆஸ்பத்திரிக்குத் தான் சப்ளை செய்ய முடியும். இட்லி, தோசை சாப்பிடும் ஊரில் யார் பிரட்டை டிபனாக சாப்பிடுவார்கள்” என்று தொடர்ந்து எதிர்த்தார்கள். ஆனால், மகாதேவன் வெறும் பிரட் விக்கிற கடையாக பேக்கரியை பார்க்கவில்லை.
நமது சென்னை மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு பேக்கரி ஐட்டத்தில் பலவிதமான உண்ணும் பொருட்களை 1989ல் “HOT BREADS ” எனும் பெயரில்
அறிமுகப்படுத்தினார்.
இதற்காக கடுமையாக உழைத்தார். ப்ரெட் தயாரிக்கும் இயந்திரத்தை இறக்குமதி செய்ய அரசிடம் அனுமதி பெறவே 5 மாதங்கள் ஆனது. முதல் கிளை சென்னை
எக்மோரில் உள்ள அல்சா மாலில் திறக்கப்பட்டது. பல்வேறு சுவைகளில் பேக்கரி உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. அனைத்துமே சூப்பர் ஹிட். முதல் நாளிலிருந்தே வியாபாரம் களை கட்டத் தொடங்கியது..! கல்லாவும் தான்!!. அடுத்த 6 மாதங்களில் மேலும் 3 கிளைகளுடன் வியாபாரம் வெற்றி நடைபோட Hot Breads Mahadevan என்கிற பெயர் நிலைத்துப்போனது.
தொடர்ந்து பெங்களூர், கொச்சி, ஹைதராபாத் என்று இந்தியா முழுவதும் கிளைகள். பேக்கரி உற்பத்தியில் வேறு புது உத்திகளை பிரான்ஸ் போய் கற்றுக்கொண்டு வந்து இங்கு அனைவருக்கும் சொல்லிக்கொடுத்தார்.
வியாபார வாய்ப்பிற்காக துபாய் சென்ற போது, அங்கும் தனது வியாபாரத்திற்கான வாய்ப்புகளை கண்டு கொண்டு, கிளை பரப்பினார். சரவண பவன்,அஞ்சப்பர் போன்றவர்கள் வெளிநாட்டில் கிளை பரப்ப முக்கிய ஆரம்பமாக ஹாட் பிரட்ஸ் மகாதேவன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாட் பிரட்ஸ் கிளைகளை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கும் விரிவுபடுத்தி, தொழில், ஆட்டோபைலட் மோடில் போய்க் கொண்டிருக்கிறது.
உடுமலைப்பேட்டையில் வியாபார தொடர்புகள் ஏதும் இல்லாதிருந்த ஒருவர் உலக அளவில் வியாபாரத்தில் கொடி கட்டி பறந்தது எப்படி?
ஒருவர் ஜீரோவிலிருந்து ஹீரோ ஆவதற்கு என்ன செய்தார்?
1. முதலில் எண்ணம்.. தொழில் செய்யவேண்டும் என்கிற
எண்ணம்.
2. வாடிக்கையாளர்களின் தேவையை கண்டறிதல்
3. வாய்ப்புகளை அடையாளம் கண்டு கொளல்
4. ரிஸ்க் எடுத்தல்.
5. தீராத வேட்கை, அர்ப்பணிப்பு
6. தொழிலை போட்டியாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டுவது.
7. நிர்வாக உள்கட்டமைப்பு.
இவையே சென்னை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இருந்த ஒருவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது. நாமும் மனம் வைத்தால் உலகமே
நமது கையில்…
அடுத்த இதழில் வெறும் கையால் முழம் போட்டு உலக மார்க்கெட்டை அளந்த நம்மூர் விற்பன்னர்களை சந்திக்கவிருக்கிறோம். சற்றே காத்திருங்கள்.
பழகலாம் தொடர்ந்து!
கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை imagefelixrtn@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு வரவேற்கிறோம்.