இந்தியாவில் முதன்முறையாக திருச்சியில் தயாராகும் Chainless Cycles
சைக்கிள் சந்தையை ஆக்ரமிக்க இருக்கும் செயின் இல்லா சைக்கிள்..!
செயின் இல்லா சைக்கிள்கள், சைக்கிள் பரிமாண வளர்ச்சியில்
புதியதொரு வரலாற்றை எழுதத் தொடங்கியுள்ளது…
மிதிவண்டி..!
இப்படி சொன்னால் நம்மை உற்று நோக்குவார்கள். சரி… சைக்கிள் என்றே எளிமையாக கூறுவோம். சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு பின்பே மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கான காலச்சக்கரம் வேகமாக சூழலத் தொடங்கியது எனலாம். 220 ஆண்டுகளுக்கு முன்பு சக்கரத்தின் மீதான உற்று நோக்கிய பார்வையே, பரோன் கார்ல் வொன் ட்ரைஸ் என்பவருக்கு சைக்கிள் உருவாக்கத்திற்கான அடித்தளம் அமைத்துத் தந்துள்ளது. மரத்தால் ஆன சைக்கிள் உருவானதை தொடர்ந்து படிப்படியாக அதன் வடிவமைப்பு ஒவ்வொரு காலத்திலும் மேம்பாடு அடையவே செய்தது.
அன்றைய காலத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டியில் சென்றவர்கள் மரத்தாலான சைக்கிள் ஓட்டுபவர்களை ஏளனமாகவே பார்த்து கடந்து சென்றிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை திரும்பிப் பார்க்க வைத்தது பல்சக்கரம் மற்றும் இயங்கு சங்கிலி (Chain). இவை இரண்டும் பொருத்தப்பட்ட சைக்கிள் தயாரிப்பு (1876) தொடங்கிய பின்பே சைக்கிள் வர்த்தகம் ரெக்கை கட்டிப் பறக்கத் தொடங்கியது.
இன்றைய திருமணங்களில் மாப்பிள்ளைக்கு சீர்வரிசையாக மோட்டார் பைக், கார் (அம்பானி லெவல் என்றால் ஹெலிகாப்டர்..!) வழங்குவது போல் அன்று சைக்கிள் முக்கிய சீர்வரிசை பொருளாக கோலோச்சியது. இப்படியான வளர்ச்சியை கொண்ட சைக்கிளை ஓவர்டேக் செய்தது மோட்டார் பொருத்திய இருசக்கர வாகனம். இருசக்கர வாகனங்களின் ஆக்ரமிப்பால் சைக்கிளின் தேவை குறையத் தொடங்கியதும் பொது மக்களை கவர சைக்கிள் உற்பத்தியாளர்கள் புதுப்புது மாடல்களை உருவாக்கினர். இளம்பெண்களுக்கு SLR, இளைஞர்களுக்கு RANGER ரக சைக்கிள்கள் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கென பற்சக்கர அடுக்குகள் கொண்ட கியர் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் சைக்கிள்கள், இழந்த பெருமையை மீட்டெடுக்கத் தொடங்கியது.
உடலின் அத்தனை உறுப்புகளையும் இயங்க வைப்பது சைக்கிள்.
அரைமணி நேரம் சைக்கிள் ஓட்டினால் உடலில் 300 கலோரி கொழுப்பு எரிக்கப்படுகிறது. சர்க்கரை அளவு சீராகிறது என்றான தகவல்கள் பரவத் தொடங்கியதும் காலை நேர சாலைகளில் சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு உயர்ந்தது. சைக்கிள் மீதான பார்வையை அதிகரிக்க ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி உலக சைக்கிள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இன்றைய சாலைகளில் இருவர் மட்டுமே சைக்கிள் ஓட்டிக் கொண்டு வருகிறார்கள். ஒருவர் சைக்கிள் விளையாட்டு வீரர். மற்றொருவர் 50 ப்ளஸ் மனிதர்கள். இப்படியான சூழலில், வரலாற்றின் இடையே நுழைந்த ‘கொரோனா‘ சைக்கிள் விற்பனையை இருமடங்கு அதிகரிக்கச் செய்தது.
ஒரு சைக்கிளுக்கு ஏன் இவ்வளவு நீள பில்டப் எனத் தோன்றுகிறதா..? விஷயம் இருக்கிறது.
மர சைக்கிளைத் தொடர்ந்து பற்சக்கரம் மற்றும் செயின் இவை இரண்டின் வருகை சைக்கிளின் வரலாற்றை சுமார் 140 ஆண்டுகாலம் சுமந்து வந்திருக்கிறது என்றே சொல்லலாம். மாற்றம் என்பது மாறாதது என்று சொல்வார்கள் தானே. சைக்கிள் வரலாற்றில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்த இந்த பற்சக்கரம் மற்றும் செயின் இவை இரண்டுமே தற்போது தூக்கி கிடாசப்பட்டு செயின் இல்லா சைக்கிள்கள், சைக்கிள் பரிமாண வளர்ச்சியில் புதியதொரு வரலாற்றை எழுதத் தொடங்கியுள்ளது.
திருச்சி மாவட்டம், துவாக்குடி, என்.ஐ.டி. எதிர்புறம் உள்ளது Ceeyes Engineering Industries Pvt Limited. . 40 ஆண்டுகால வரலாற்றை கொண்ட இந்நிறுவனமானது இந்திய ரயில்வேயில் டீசல் இன்ஜின் இயங்க பயன்படும் CAMSHAFTஉற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஒரு நிறுவனமாகும். இரயில்வே மட்டுமின்றி இந்தியாவில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் துப்பாக்கித் தொழிற்சாலை, மரைன் துறைக்கு தேவையான உதிரிபாகங்கள் மற்றும் டிராக்டர்களுக்கு தேவையான CAMSHAFT தயாரித்து வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது இந்நிறுவனம்.
புதிய கண்டுபிடிப்பின் மீதான தேடலை கொண்ட இந்நிறுவனம், வெளிநாடுகளில் செயின் இல்லா சைக்கிள்கள் உலா வருவதை கண்டவுடன் இந்தியாவிலும் இப்படியான சைக்கிளை நம் நிறுவனத்தில் தயாரித்து வழங்கினால் என்ன என்ற நோக்குடன் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் களத்தில் இறங்கினர்.
பொதுவாக சைக்கிள்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் தயாரிக்கப்பட்டு நாடு முழுக்க விநியோகம் செய்யப்படுகிறது. செயின் இல்லா சைக்கிள் தயாரிக்க முடிவெடுத்த பின் அதன் முக்கிய உதிரிபாகங்களை “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் தங்கள் நிறுவனத்திலேயே தயாரிப்பது என முடிவெடுத்தனர். முதற்கட்டமாக சைக்கிளின் வடிவத்தை கொடுக்கும் ‘சட்டகத்தில்’ ((Frame)) கவனம் செலுத்தத் தொடங்கினர். Frame துருப்பிடிக்காமல் நீடித்து நிலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதனை Aluminium Alloy 6061 என்ற உலோகத்தை கொண்டு வடிவமைத்தனர். Aluminium Alloy 6061-ல் தயாரிக்கப்படும் Frame, Tig Welding முறையில் பற்றவைத்து வடிவமைக்கப்படுகிறது.
அடுத்து செயினுக்கு மாற்றாகPropeller Shaft Driving System.. நான்கு Spiral bewel gear, , ஐந்து High Quality Bearing மற்றும் அதிக வலிமை கொண்ட கார்பன் ஸ்டீலினால் உருவாக்கப்பட்ட Pedal Shaft, Drive Shaft இவையனைத்தையும் உள்ளடக்கியது இந்த Propeller Shaft Drive.
Chrome Alloy உலோகத்தை தேர்வு செய்து அவற்றை சூடாக்கியும், குளிர்வித்தும் என பன்முறை அதன் வெப்ப தன்மையை மாற்றி மாற்றி அதன் உறுதித்தன்மை அதிகரிக்கச் செய்தே இந்த Propeller Shaft Drive உள்ள பாகங்கள் தயாரிக்கப்படுகிறது.
“இந்தியாவில் முதன்முதலாக Aluminium Alloy 6061 உலோகம் கொண்டு சைக்கிள் தயாரிக்கும் ஒரே நிறுவனம் சி.எஸ். இன்டஸ்ட்ரீஸ் மட்டுமே. பொதுவாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கு வாரண்டி வழங்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் சைக்கிள் Frame-ற்கு 5 வருடமும், Propeller Shaft Drive-விற்கு பத்து வருடமும் வாரண்டி தருகிறோம்” என்கிறார் சி.எஸ். நிறுவன, சைக்கிள் விற்பனை பிரிவின் மண்டல மேலாளர் வி.சேகர்.
தொடர்ந்து அவர் நம்மிடம் கூறுகையில், “சராசரியாக ஒரு மனிதனால் அதிகபட்சமாக ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 80 முறை மட்டுமே பெடல் செய்ய முடியும். ஆனால் ஒரு நிமிடத்திற்கு 3000 (rpm) வேகத்தில் சுற்றினாலும் பழுது ஏற்படா வகையில் தரம் வாய்ந்தாக இந்த Propeller Shaft Drive கியர் அமைந்திருக்கிறது. சாதாரண சைக்கிளுடன் ஒப்பிடுகையில் இந்த செயின் இல்லா சைக்கிள் பன்மடங்கு மேம்பட்டதாகவே இருக்கும். வழக்கமாக, செயின் கொண்ட சைக்கிளை இயக்கும் போது செயினில் ஆடை மாட்டிக் கொள்ளும் சாத்தியக் கூறுகள் உள்ளது. மேலும் பல்சக்கரம் தேய்மானம் அடையும். கியர் சைக்கிளில் உள்ள பல்சக்கர தொகுப்பை மாற்ற ரூ.3,500 வரை செலவு செய்ய நேரிடும். அது போன்ற நிலை இதில் இருக்காது.
பராமரிப்பது எளிது. கடற்கரை பகுதிகளிலும் இந்த சைக்கிளை இயக்கலாம். உப்புக் காற்றால் அரிப்பு ஏற்படாது. தூசு படியாது. பெடல் செய்வது எளிது. ரூ.27,300 முதல் ரூ.52,400 விலையில், 6 மாடல்களில், கியர் மற்றும் கியர் இல்லா சைக்கிள்களை விற்பனை செய்கிறோம்” என்றார். “ஏன் இவ்வளவு விலை. சாமானியனுக்கு எட்டாத விலையில் உள்ளதே.. குறைந்த விலைக்கு தரக் கூடாதா..? என்ற நம் கேள்விக்கு பதிலளிக்கையில், “எங்கள் நிறுவனம் ஏரோ ஸ்பேஸ் தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனம். நாங்கள் தயாரிக்கும் சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் Handle Bar, Double Wall Rim, Tyre உள்ளிட்ட அனைத்து உதிரி பாகங்களும் மிகுந்த தரம் வாய்ந்ததாகவே இருக்கும். இதில் பொருத்தப்படும் Propeller Shaft Drive கட்டமைப்பின் தரம் ஆட்டோமோடிவ் இயந்திரங்களில் உபயோகமாகும் கியரின் தரத்திற்கு இணையானது.
20,000 கி.மீ. தாண்டி, பழுதின்றி, தேயாமல் இயங்கும் சக்தி கொண்டது என்பதாலேயே அதற்கு மட்டும் பத்து வருட வாரண்டி தருகிறோம். அதனால் தரத்துடன் ஒப்பிடும் போது நுகர்வோர்கள் விலையை ஒரு பொருட்டாக எண்ண மாட்டார்கள். இரண்டு ஆண்டுகளில் சைக்கிளுக்கான Handle Bar, Fork, Rim, Pedal போன்ற அனைத்து உதிரிபாகங்களையும் நாங்களே உற்பத்தி செய்வதற்கான பணியினை மேற்கொண்டு வருகிறோம். செயின் இல்லா சைக்கிளுக்கு மட்டுமின்றி அனைத்து சைக்கிள்களுக்குமான உதிரிபாகங்களும் தயாரிக்க உள்ளோம். எனவே வரும் காலத்தில் சைக்கிள் உதிரிபாகங்களை நாடி வடமாநிலத்திற்குச் செல்லத் தேவையில்லை” என்றார்.
STEED என்ற பெயர் கொண்ட இந்த CHAINLESS CYCLE இந்தியா முழுவதும் விற்பனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 40 டீலர்கள் உள்ளனர். திருச்சியில் தில்லைநகர், புத்தூர், திருவரம்பூர், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஷோரூம்களில் இந்த சைக்கிள் கிடைக்கிறது. சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம், பராமரிப்பது எளிது, பழுது ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு மற்றும் வாரண்டி என அனைத்து சிறப்பம்சங்களையும், சாதாரண சைக்கிள்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயின் இல்லா சைக்கிள்கள் சந்தையை பெருமளவில் ஆக்ரமிக்கும் என்றே நம்பலாம்.