நடப்பு நிதி ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.1,094.58 கோடியாக இருந்தது. இது கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருவாயுடன் ஒப்பிடுகையில் 14.18 சதவீதம் குறைவாகும். செலவினத்துடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5.07 கோடியிலிருந்து 13 சதவீதம் அதிகரித்து ரூபாய் 69.27 கோடியாக அதிகரித்துள்ளதாக இந்தியா சிமெண்ட்ஸ் தெரிவித்துள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடப்பு நிதியாண்டில் ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.5,431 கோடி. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதே காலகட்டத்தில் 8.6 சதவீதம் அதிகமாகும். நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் வங்கி ரூ.148 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ஜூன் காலாண்டில் வங்கி ஈட்டிய 121 கோடியுடன் ஒப்பிடுகையில் 2.3 சதவீதம் அதிகமாகும்.
டாடா குழுமத்தைச் சேர்ந்த நுகர்வோர் மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான வோல்டாஸ் நடப்பு 2020-21-ம் நிதி ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஈட்டிய வருமானம் ரூ.1,650.80 கோடி. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு ஈட்டிய ரூ.1,494.56 கோடியுடன் ஒப்பிட்டால் 10.45 சதவீதம் கூடுதலாகம். நிகர லாபம் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ. 107.28 கோடியிலிருந்து 25.74 சதவீதம் சரிவை கண்டு ரூ.79.66 கோடியானது என வோல்டாஸ் தெரிவித்துள்ளது.
மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் லுாபின் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ஒட்டு மொத்த நிகர லாபமாகும் ரூ.211 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருமானம் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.3,822.21 கோடியிலிருந்து ரூ.3,835 கோடியாக அதிகரித்துள்ளது. எஸ்.பி.ஐ. வங்கியின் இரண்டாவது காலாண்டில் நிகர லாபம் ரூ.3,375.40 கோடியாகும். இது கடந்த ஆண்டுன் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 55 சதவீதம் கூடுதலாகும்.
செப்டம்பருடன் முடிவடையும் 3 மாதங்களில் நிகர வட்டி வருவாய் ரூ.28,181 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் ஒப்பிடும் போது 14.56 சதவீதம் கூடுதலாகும்.
முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ஈட்டிய வருமானம் ரூ.3,505 கோடியாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் கூடுதலாகும். நிகர லாபம் ரூ.325 கோடியிலிருந்து 56 சதவிகிதம் அதிகரித்து ரூ.506 கோடியானது.