அபாயமாகும் ஆன்லைன் வர்த்தகம்… அலறும் வியாபாரிகள்..!
உள்ளுர் சந்தையில் பொருள் வாங்குவதைவிட ஆன்லைனில் வாங்குவது விலை குறைவு என்ற எண்ணத்தை மக்களிடம் விதைத்த ஆன்லைன் நிறுவனங்கள் தற்போது அத்தகைய மக்களிடமிருந்து சேவை கட்டணம் (SERVICE CHARGES), விநியோகக் கட்டணம் (DELIVERY CHARGES) என்ற பெயரில் பணத்தை கறக்கின்றன.
இது வரை அத்தகைய வசதியினை அனுபவித்து வந்த மக்களுக்கு இப்போதைய சிறு கட்டணம் பெரும் சுமையாக தெரியவில்லை. ஆரம்பத்தில் சேவை கட்டணம் இன்றி குறைந்த விலையில் இப்போது சேவைக் கட்டணத்துடன் விநியோகக் கட்டணம் சரி.. அதனால் என்ன..,?
அதைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்..
சமீபத்தில் திருச்சி, மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், ஆன்லைன் மூலம் தயிர் சாதம் ஆர்டர் செய்தார். விலை ரூ.160 என வந்தது. சுமார் அரை மணி நேரமாகியும் தயிர் சாதம் வரவில்லை. இதனால் அவர் அந்த ஆர்டரை கேன்சல் செய்தார். பின்னர் குறிப்பிட்ட அந்த ஹோட்டலை கடந்து வரும் தனது நண்பரிடம், அந்த ஹோட்டலில் தயிர் சாதம் ஒரு பார்சல் வாங்கி வரச் சொன்னார். அவரும் வாங்கி வந்தார். விலை ரூ.110 மட்டுமே.! ஆன்லைன் மூலம் வாங்கியிருந்தால் ரூ.50 நஷ்டம். இது தான் இப்போதைய ஆன்லைனின் அவதாரம். மக்களை பழக்கத்திற்கு அடிமையாக்கி விட்டதன் அறிகுறி..!
உணவினை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் சந்தையில் கால்பதித்த போது பலரும் ரூ.100க்கு முன்னணி ஹோட்டல்களிலிருந்து ஆன்லைனில் பிரியாணி வாங்கி சாப்பிட்டது ஞாபகம் இருக்கிறதா..? இப்போது அப்படி வாங்க முடியுமா..?
தொடக்கத்தில் உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் நடக்கும் நேரடி விற்பனையில் கடை வாடகை, மின் கட்டணம், ஊழியர்கள் சம்பளம் என பல்வேறு செலவுகளை கருத்தில் கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தை வரவேற்றார்கள். “நம் பொருளை அவர்கள் விற்று அவர்களே வசூலும் செய்து தருகிறார்கள். பின் நமக்கென்ன” என்று இருந்தார்கள்.
இப்போது சேவை கட்டணம், விநியோகக் கட்டணம் என கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். உற்பத்தியாளர்களின் பொருளை 50 சதவீதத்திற்கும் மேல் குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனமே விற்பதால், “நாங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு தான் பொருளை விற்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பொருளை விற்காமல் போட்டியாளர்களின் பொருளை சந்தைப்படுத்துவோம்” என மிரட்டுவார்கள்.
அனுபவசாலி கூறிய அறிவுரை
அமேசானுடன் ஒப்பந்தம் செய்பவர்கள் ஒப்பந்தத்தில் உள்ள சரத்துக்களை படித்துப் பார்த்து ஒப்பந்தமிட வேண்டும் என அறிவுரை கூறுகிறார் ஒரு அனுபவசாலி. அமேசானில் ஒப்பந்தம் செய்து வெளியேறிய ஒரு வர்த்தகர், “அமேசானில் ஒப்பந்தமிட்டு பொருட்களின் படத்தை போட்டதோடு சரி. விற்பனையாகவே இல்லை. சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்தோம் எனச் சொல்லி ஆரம்பத்தில் புரமோஷன் சார்ஜஸ் என ஒரு கட்டணத்தை வசூலிப்பார்கள். பின்னர் ரிட்டன் சார்ஜஸ் என ஒரு கட்டணத்தை வசூலிப்பார்கள். வாடிக்கையாளர்கள் பொருட்களை ரிட்டன் செய்கிறார்களா அல்லது இவர்களே ரிட்டன் சூழலை உருவாக்குகிறார்களா எனத் தெரியவில்லை. அமேசானில் பெரு வியாபாரிகள் மட்டுமே லாபத்தை அனுபவிப்பார்கள். சிறு வியாபாரிகளுக்கு பெரும்பாலும் நஷ்டம் தான். ஆன்லைன் வர்த்தகமே வேண்டாம்டா சாமி என நான் வெளியேறிவிட்டேன்” என புலம்பினார்.
“நம் உற்பத்தி பொருட் களை 50 சதவீதத்திற்கும் மேல் அவர்கள் தானே விற்கிறார் கள்.. என்ற எண்ணத்துடன் உற்பத்தியாளர்களும் வேறு வழியின்றி ஒப்பந்தத்தில் கையப்பம் இடுவார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் விலைக்கு பொருளை பெற வேண்டும். வெளிநாட்டு ஆன்லைன் நிறுவனம், அந்நிய செலாவணியை அள்ளிச் செல்லும். அதாவது இந்திய லாபத்தை தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்லும்.
ஆன்லைன் நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் தனது ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வேறு அதிக லாபம் தரும் உற்பத்தியாளர்களிடம் வர்த்தகம் வைத்துக் கொள்ளும். இதனால் வாடிக்கையாளர்களின் நேரடி தொடர்பை இழந்த உற்பத்தியாளர்கள் தங்கள் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
அமேசான் நிறுவனம் இந்தியாவில் காலடி வைக்கும் போது, “நாட்டின் கடைக்கோடி விற்பனையாளர்களும் பயன்பெறும் வகையில் ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொள்வோம்” என ஆசை வார்த்தை காட்டினார்கள். இந்தியாவும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு தாராளமாக சிவப்புக் கம்பளம் விரித்தது. ஆனால் கடைக்கோடி விற்பனையாளர்கள் நஷ்டப்பட்டு கடையை மூடும் நிலைக்குத் தான் தள்ளப்பட்டார்கள். இது குறித்து ராய்ட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனம் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதில், “அமேசான் இந்தியாவில் கடைகோடி விற்பனையாளர்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. 4 லட்சம் இந்திய விற்பனையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் தொழில் புரிய வாய்ப்பு ஏற்படுத்தியிருப்பதை பெருமையாக, சத்தமாகச் சொன்னாலும் உண்மையில் 33 பெரு வர்த்தகர்களின் பொருட்கள் மட்டுமே அமேசானின் 3ல் 1 பங்கு இடத்தை ஆக்கிரமித்திருக்கிறது. வர்த்தக பங்குகளிலும் அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது” என அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இப்போது தான் அமேசானின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதையடுத்து வர்த்தகர்கள் கூட்டமைப்பு அமேசான் மேல் ஏராளமான புகார்களை கூறி வருகின்றன. சிறு வியாபாரிகள் பலரும் புகார்களை கிளப்பியுள்ளனர்.
கொரோனா காலத்தில் நஷ்டத்தை சந்தித்த பியூச்சர் குழுமம் தனது நிறுவனத்தை ரூ.24,713 கோடிக்கு இந்திய நிறுவனத்திடம் விற்க முற்பட்டது. ஆனால் பியூச்சர் நிறுவனத்தில் 5 சதவீதம் ஷேர் வைத்திருக்கும் அமேசான், இதை எதிர்த்து வழக்கு தொடுத்தது. அந்த வழக்கு தள்ளுபடியானது. இதையடுத்தே அமேசான் குறித்த பல்வேறு தகவல்கள் வெளி உலகத்திற்கு தெரியத் தொடங்கியிருக்கிறது. தவிர்க்க முடியாத சூழல், கிடைக்காத பொருட்களா.. ஆன்லைனில் வாங்க முயற்சிக்கலாம். அருகாமை கடைகளில் கிடைக்கும் பொருட்களை கூட சோம்பேறித்தனத்தால் ஆன்லைனில் வாங்கி உங்கள் பணத்தை இழக்கா தீர்கள். இனியாவது தேவையற்ற ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்ப்போம்.