தீபாவளி பலகாரம்.. விற்பனை இனிக்குமா.?
தீபாவளியன்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தங்கள் வீட்டில் செய்த பலகாரங்களை வழங்கி மகிழ்வது தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தீபாவளி பண்டிகை சிறுவர்களை ஈர்ப்பதற்கு காரணம் பலகாரமும் பட்டாசும் தான். “அக்கா நீங்க பலகாரம் சுட்டாச்சா..” அக்கம்பக்க விசாரிப்புகள்.
பொருளாதார சூழல் மற்றும் படித்த படிப்பை வீணாக்க வேண்டாம் என வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பு ஒவ்வொருவரும் வீடுகளில் பலகாரம் செய்வது குறைந்து வருகிறது.
இதுவே பலகார கடைகளின் பெருக்கத்திற்கு காரணமாக அமைந்தது. திருச்சி மாவட்டத்தில் வழக்கமான ஸ்வீட் ஸ்டால் மட்டுமின்றி, தீபாவளி காலங்களில், தற்காலிக வியாபாரமாக பலகாரம் செய்பவர்கள் 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
அஸ்வின், மகாராம்ஸ் பி.ஜி.நாயுடு , போன்ற பெரிய ஸ்வீட் ஸ்டால்களில் கோம்போ பேக் என அனைத்து வகை இனிப்புகளையும் அழகிய டப்பாக்களில் வைத்து அரை கிலோ, ஒரு கிலோ என்ற அளவில் விற்பனை செய்வார்கள். தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்க இனிப்புகள் வழங்க இது போன்ற கடைகளை நாடுவர்.
தீபாவளி சீட்டு நடத்துபவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இனிப்பு வழங்கிட தற்காலிக கடை களை தான் நாடுவர். வழக்கமான ஸ்வீட் ஸ்டால்களுடன் ஒப்பிடும் போது இங்கு விலை குறைவு என்பதே காரணம். மேலும் ஒரு குடும்பத்தில் இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளுக்கு தீபாவளி பலகாரம் செய்து தருவது இந்த தற்காலிக கடைகள் தான்.
“வழக்கமாக தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பலகார ஆர்டர் வரத் தொடங்கி விடும். சிறு வியாபாரிகளும் ஆர்டர் தருவார்கள்.
பத்து நாட்களுக்கு முன்பிருந்து பலகாரம் சுடத் தொடங்குவோம். ஆனால் இந்த ஆண்டு இது வரை (5ம் தேதி) ஆர்டர் தொடங்கவில்லை. காரணம் கொரோனா தாக்கம்” என்கிறார் திருச்சி, எடத்தெரு பகுதியில் தற்காலிக பலகார கடை நடத்தும் சகாயராஜ்.
“30 வருடமாக விசேஷங்களுக்கு சமையல் செய்து தருகிறேன். தீபாவளி பலகாரக் கடையை 19 வருடமாக செய்து வருகிறேன். தீபாவளி விற்பனையில் வழக்கமாக உள்ள சுறுசுறுப்பு இந்த ஆண்டு இல்லை. ஆயுத பூஜைக்கு மறுநாளே கடை போட தொடங்கி விடுவோம். ஆனால் மொத்த விற்பனை விசாரணை தொடங்கவே இல்லை. சில்லரை விற்பனையே ஒரு நாளைக்கு இரண்டாயிரம் மூவாயிரம் நடக்கும்.
ஆனால் இந்த வருடம் ஆயிரம் ரூபாய்க்கு கூட விற்பனை தொடங்கவில்லை. எண்ணெய், பூண்டு, உளுந்து என அனைத்தும் விலை ஏறிவிட்டது. தரமான எண்ணெய் பயன்படுத்தினால் மட்டுமே பலகாரங்கள் ஒரு மாதத்திற்கு கெடாமல் இருக்கும். ஆனாலும் விற்பனை குறித்து ஒரு கணிப்பு இல்லாததால் பலகாரங்களின் விலையை ஏற்ற முடியவில்லை. 10 பேருக்கு வேலை கொடுத்து, 19 ஆண்டுகள் இந்த தொடர்ந்து தீபாவளி பலகாரம் வியாபாரம் செய்து வருவதால் இந்தாண்டு தடை இருக்கக்கூடாது என்பதால் கடை போட்டிருக்கிறேன்.
வழக்கமாக ஜாங்கிரி, மைசூர்பாகு, பாதுஷா, லட்டு என நான்கு இனிப்பு பலகாரங்களை செய்வோம். இந்தாண்டு சோமசா, அதிரசத்தைத் தவிர இனிப்பு பலகாரம் எதுவும் செய்யவில்லை. முறுக்கு, எல்லடை, மிக்சர், ரிப்பன் பக்கோடா மட்டுமே செய்து தருகிறோம்.
தீபாவளி விற்பனை சம்பள தேதிக்கு பின்பு தான் அதிகரித்திருக்கும். மேலும் பல தனியார் நிறுவனங்களில் கொரோனா காரணமாக போனஸ் வழங்கவில்லை என்பதாலும் தீபாவளி விற்பனையில் மந்தநிலை நீடிக்கிறது. கடைசி ஐந்து நாட்கள் கண்டிப்பாக தீபாவளி விற்பனை நன்றாக இருக்கும் என நம்புகிறோம்” என்றார்.
ஆமாம்..
நம்பிக்கை தானே வாழ்க்கை.!