மாட்டிடம் பால் கறக்காதே..! மீண்டும் வாலாட்டும் பீட்டா..!
பண்டைய காலம் முதல் உலகில் வாழும் மக்களின் உணவு பழக்க வழக்கங்கள், அவர்கள் வாழும் இடத்தின் தட்பவெப்ப சூழலை அடிப்படையாகக் கொண்டே பின்பற்றப்பட்டு வந்தன. உலகமயமாக்கல் என்ற பார்வை எப்போது தலையெடுத்ததோ அப்போதிலிருந்து, நாம் என்ன உடை உடுத்த வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், நமது பேச்சு, நடவடிக்கை, கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் நிர்ணயிப்பது வர்த்தக உலக மாபியாக்கள் கையில் தான் உள்ளது.
துரித உணவு தொடங்கி பேலியோ, கீட்டோ, வீகன் என பல்வேறு உணவு முறைகளை பிரபலப்படுத்தி வர்த்தகம் செய்து வருகிறது இந்த மாபியா கூட்டம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கிட்டத்தட்ட உலகமயமாக்கல் என்ற பார்வை தான் ஜங் ஃபுட்ஸ் என்று கூறப்படும் துரித உணவு முறைக்கு தமிழர்களை மாறச் செய்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகள், நோய்ப் பெருக்கம் போன்றவற்றை கண்ட பின்னரே தமிழர்கள் தங்களை மீண்டும் பாரம்பரிய உணவு முறைக்கு மாற்றி வருகின்றனர். அதுவும் சொற்ப அளவாகவே உள்ளது.
கேட்பாரற்று, தானிய சந்தையில் விற்காமல் கிடந்த கவுனி அரிசி, குதிரைவாலி, நொய்யல், சிகப்பரிசி, கம்பு, கேழ்வரகு, சாமை போன்ற தமிழர்களின் பாரம்பரிய உணவு தானியங்களின் மீதான பார்வை தற்போது தான் திரும்பி வருகிறது.
பீட்டாவின் கோரிக்கை
இந்நிலையில் வெண்மை புரட்சிக்கு வித்திட்டு பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தியாவில் முன்னணி பால் உற்பத்தி நிறுவனங்களில் முதன்மையான அமுல் நிறுவனத்திற்கு, ‘பீட்டா’ (PETA-People for the Ethical Treatment of Animals) என்ற விலங்கு நல அமைப்பு டிவிட்டரில் கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்தது. அதில், “மாட்டிடம் இருந்து பால் கறப்பதை கைவிட்டுவிட்டு சோயா போன்ற இயற்கை தாவர வித்துக்களில் இருந்து பால் தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியிருந்தது.
அத்துடன், “மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு என இரண்டு வாயுக்களும் நாம் உணவிற்காக வளர்க்கும் பிராணிகளின் கழிவுகளிலிருந்து அதிக அளவு வெளியிடப்படுகிறது. உலகின் பசுமை வாயு வெளியேற்றத்தில் 51 சதவிகிதம் கால்நடை வளர்ப்பினால் தான் நிகழ்கிறது.
உலகின் மக்கள் தொகை பெருக்கத்திற்கும், அதனால் ஏற்பட்ட உணவுத் தேவை பெருக்கத்துக்கும் ஈடுகொடுக்க, 2050-ம் ஆண்டில் உணவுக்காகப் பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகரிக்கும்‘ என்று ஐ.நா சபையின் ஆராய்ச்சி அறிக்கையை முன் வைக்கிறது பீட்டா.
அமுல் இயக்குனரின் காட்டமான பதில்
விலங்கு நல அமைப்பின் இந்த கோரிக்கைக்கு அமுல் நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.எஸ்.சோதி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
அதில், அமுல் நிறுவனத்தின் மூலம் 10 கோடி பால் விவசாயிகள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பீட்டா வழங்குமா.? விவசாயிகள் 10 கோடி பேரில் 70 சதவிதம் நிலமற்றவர்கள் அவர்களுடைய குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை பீட்டா செலுத்தமா.? அவர்கள் எத்தனை பேர் விலை உயர்ந்த ஆய்வுகள் கொண்ட சைவ பாலை தொழிற்சாலைகளில் தயாரிக்க முடியும். அத்துடன் சோயா பாலின் விலை மிகவும் அதிகம் என்றும் அந்த பால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகாது.
கடந்த 75 ஆண்டுகளாக உருவாக்கியுள்ள விவசாயிகள் வளங்களை பணக்கார வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்து மரபணு மாற்றப்பட்ட சோயாவை அதிக விலைக்கு சந்தைப்படுத்த வேண்டும் என்பதே பீட்டாவின் குறிக்கோளாக உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “தாவர வித்து அடிப்படையிலான உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் பால் வர்த்தகத்தின் பங்குகளை தங்களுடன் இணைத்து வருகின்றன. தாவர அடிப்படையிலான உணவு தயாரிப்புகள் மரபணு மாற்றப்பட்ட ஆய்வக உணவுகளைத் தவிர வேறொன்றுமில்லை, அவை பெரிய கார்ப்பரேட் மற்றும் எம்.என்.சிக்களால் இலாபம் ஈட்டுவதற்கான ஒரே நோக்கத்துடன் ரசாயனங்கள் மற்றும் செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றனவே அன்றி அவர்களின் வாழ்வாதாரம் அல்ல.
இந்திய பால் தொழில் என்பது பல நூற்றாண்டுகளாக மனிதர்கள்-விலங்குகளின் ஒத்துழைப்புக்கான ஒரு உதாரணமாகுமம். ஆனால் வெளிநாட்டு நிதியுதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்திய பால் தொழிலுக்கு களங்கம் விளைவிக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன, கால்நடைகள் ஒரு விவசாயிகளின் குடும்பத்தின் ஒரு பகுதியாகும், யாரும் மாட்டை சித்திரவதை செய்வதில்லை” என்றும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.சோதியின் முகத்தில் அடித்தாற் போன்ற இந்த காட்டமான பதிலை பீட்டா சற்றும் எதிர்பார்க்கவில்லை.
மாட்டுப்பால், சோயாப்பால் என்ன வித்தியாசம்?
ஒப்பீட்டளவில் பாதாம், பருத்தி, தேங்காய் போன்ற தாவர வித்துக்களில் இருந்து எடுக்கப்படும் பாலில் உள்ள சத்துக்கள் மாட்டுப் பாலில் உள்ள சத்துக்களுக்கு ஈடாகாது.
மாட்டுப் பாலில் விட்டமின், மினரல்ஸ், கால்சியம், புரோட்டின் என 13 வகையான சத்துக்கள் அடங்கியுள்ளன. சோயா பாலுடன் ஒப்பிடும் போது மாட்டுப் பாலில் சர்க்கரை அளவு மட்டுமே அதிகமாக உள்ளது. மற்ற அனைத்தும் பாதிக்கும் கீழாகவே உள்ளது.
மாட்டுப் பாலில் உள்ள லாக்டோஸ் என்ற ஒரு வகையான சர்க்கரை சிலருக்கு அலர்ஜியை தரக்கூடியது. ஏற்கனவே சர்க்கரை நோய்க்கான மருத்துவ வர்த்தகம் உலகளவில் பல்லாயிரம் கோடி நடைபெற்று வருகிறது. இப்போது அதற்கு மாற்றாக சர்க்கரை சத்து குறைவாக உள்ள சோயா பாலை நீங்கள் ஏன் அருந்தக் கூடாது என கேள்வி எழுப்பி புதிதான ஒரு வர்த்தகத்தை தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளது பன்னாட்டு வர்த்தகம்.
பீன்ஸிலிருந்து எடுக்கப்படும் சோயா பாலில் சத்துக்கள் அனைத்தும் செறிவுட்டப்பட்டவை. குறைவான கார்ப்போஹைட்ரேட், சர்க்கரை அளவு உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் சோயா பாலை பரிந்துரைப்பார்கள். அவ்வளவே.!
உணவில் சிறந்தது சைவமா, அசைவமா என்ற பட்டிமன்றமெல்லாம் நடைபெறுவதுண்டு. பொதுவாக நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரியை எரிப்பதற்கு உரிய வேலையை நாம் செய்ய வேண்டும். மூக்குமுட்ட மட்டன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு கல்லா பெட்டியில் காசு வாங்கிப் போடும் வேலையை செய்யக் கூடாது. பருப்பு சாதாம் சாப்பிட்டு விட்டு வண்டி இழுப்பதும், மூட்டை தூக்கும் வேலையை செய்யக் கூடாது.
ஒவ்வொருவரும் அவர்களின் வேலைக்கு ஏற்ற உணவினை, நம் உடலுக்கு எது ஏற்ற உணவாக உள்ளது என்பதை தன்னளவில் முடிவு செய்ய வேண்டுமே ஒழிய உணவு வர்த்தகர்களின் வியாபார ஸ்தலமாக நமது உடலை ஆக்கிக் கொள்ளக் கூடாது என்பதே சரியான வாதமாக பலரும் முன்வைக்கின்றனர்.
மாட்டுக்கு வலிக்குமாம்
பீட்டா சொல்லும் காரணம்….
மாட்டுப் பாலிலிருந்து மாற வேண்டும் என்பதற்கு பீட்டா சொல்லும் காரணம், “பெரும் வர்த்தக நோக்கத்துடன் செயல்பட்டு வரும் பால் உற்பத்தி செய்யும் பண்ணைகளில், சந்தையின் தேவைக்காக மாட்டின் மடியில் இயந்திரங்கள் பொருத்தி அவற்றிற்கு வலி உண்டாகும் வகையில் பால் கறக்கப்பட்டு மாடுகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன. அதிக பால் தேவைக்காக மாடுகளுக்கு ஊசி போடுகிறார்கள்” என்ற காரணங்களை முன் வைக்கிறது.
பீட்டாவுக்கு ஏன் இந்த வேலை?…..
இது குறித்து சுற்றுச்சூழல் செயலாளரும், நாட்டு மாடுகள் குறித்த ஆய்வுகள் செய்தவருமான கார்த்திகேய சிவசேனாபதி, “நிலமற்றவர்கள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு பால் வியாபாரமே வாழ்வாதாரமாக உள்ளது. மாட்டை விவசாயிகள் தெய்வமாகக் கருதுகிறார்கள். மாட்டை கொடுமைப்படுத்தி ஊசி போட்டு பால் கறக்கிறார்கள் என்றால் அதை கண்காணித்து தண்டனை பெற்று தர வேண்டிய வேளையைத் தான் பீட்டா போன்ற அமைப்பு செய்ய வேண்டும்.
அதைவிட்டுவிட்டு பன்னாட்டு வர்த்தகர்களுக்கு ஆதரவாக மாட்டுப் பாலையே முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவது தவறானது.
உடலில் கால்சியம் குறைபாட்டை களைய மருத்துவர்களே மாட்டுப் பாலைத் தான் பரிந்துரைக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு கொஞ்ச காலம் அமைதியாக இருந்த பீட்டா இப்போது கொல்லைப்புற வழியாக உள் நுழைந்து வாலாட்டுகிறது.
நமக்கான உணவை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை பீட்டா நிர்ணயிக்க வேண்டிய அவசியம் இல்லை. காலை எழுந்ததும் பால், டீ, காபி அருந்தி விட்டு வேலைக்குச் செல்கிறவர்கள், பாதாமும், சோயாவும் அரைத்து பால் தயாரித்து பின்னர் அதிலிருந்து டீ, காபி போட்டுக் குடிக்க வேண்டுமா..?
பால் விலையுடன் ஒப்பிடும் போது சோயா பால் பவுடரின் விலை எத்தனை மடங்கு அதிகம் என்பதை பீட்டா உணர வேண்டும். குறைவான செலவில் கிடைக்கும் அதிக சத்துள்ள பாலை புறுந்தள்ளி, அதிக விலை கொடுத்து குறைந்த சத்துள்ள சோயா பாலை நாம் ஏன் அருந்த வேண்டும்.?
அனிமல் புரோட்டீன் மூளை வளர்ச்சிக்கு நல்லது. சைவம் சாப்பிடுகிறவர்கள் கூட நெய், பால், தயிர் பயன்படுத்துகின்றனர். மாட்டுப் பால் வேண்டாம் என்று சொல்லும் சைவ உணவுக்காரர்கள் நெய், வெண்ணை பயன்படுத்துவதை தவிர்க்கலாமே. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் அனிமல் புரோட்டீன் தேவையை குறைத்து அவர்களை மூளையற்றவர்களாக மாற்றுவது தான் பீட்டாவின் நோக்கமாக உள்ளது” என்று குறிப்பிடுகிறார்.
பீட்டாவை தடை செய்ய மோடிக்கு கோரிக்கை
அமுல் நிறுவனத்தின் துணைத் தலைவர் வலம்ஜி ஹம்பல் தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்திய பால் துறை மூலம் 10 கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கில் அமுல் சைவ பால் மற்றும் உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்று சமீபத்தில் பரிந்துரைத்த பீட்டாவை தடை செய்யுமாறு” பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர், இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பால் துறை ஒரு முக்கிய பங்களிப்பு அளிக்கிறது. ஆனால் தன்னார்வ தொண்டு நிறுவனம் பரப்பிய தவறான தகவல்களால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சமரசம் செய்ய முடியுமா” என்று குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.கோவிந்தராஜன்