பல்வேறு நகரங்களில் இருந்து திரும்பிய ஏராளமான தொழிலாளர்கள் தற்போது கால்நடை பராமரிப்பை நோக்கி நகர்ந்துள்ளதால் அவர்களுக்கு உதவும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசால் தொடங்கப்பட்ட செயலி தான் இ—கோபாலா.
கால்நடை வளர்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் அளிக்கக் கூடிய ஒரு தளமாக இந்த இ-கோபாலா செயலி (e-Gopala App) இருக்கும். அதோடு விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இந்த ஆஃப் வழங்குகிறது.
விலங்குகளின் ஊட்டச்சத்துகள் என்ன? அவற்றில் முதன்மையானது எது, விலங்குகளின் ஊட்டச்சத்து உணவு பற்றிய தகவல்கள், ஆயுர்வேத மருத்துவ நடைமுறை, நீங்கள் வளர்க்கும் விலங்குகளின் நோய்கள் மற்றும் சிகிச்சை முறை பற்றிய தகவல்களையும் பெறலாம். அதோடு தரமான விந்து மற்றும் கரு போன்றவற்றை வாங்கவும், நோய் இல்லாத கருக்களை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது உள்ளிட்ட பலவற்றிற்கும் இந்த ஆப் பயனுள்ளதாக இருக்கும்.
செயற்கை கருவூட்டல் மற்றும் கால்நடை முதலுதவி, தடுப்பூசி உள்ளிட்ட பல சேவைகளையும் இந்த செயலி மூலம் பெற முடியும். விவசாயிகள் தங்கள் விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் தேதிகள் குறித்த அலர்ட்கள், கால்நடைகள் கன்று ஈன்றல் தேதிகளை அனுப்புவதற்கும் இந்த செயலி உதவுகிறது. அதோடு விவசாயிகள் அருகிலுள்ள நோய்த் தடுப்பு முகாம்கள் அல்லது பயிற்சி திட்டங்கள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.
இந்த இ-கோபாலா செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் மொபைல் எண்ணினைக் கொண்டு இந்த செயலில் பதிவு செய்வதன் மூலம், அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.