தொழில் முனைவோர் கவனம் செலுத்த வேண்டியது!
தன்னம்பிக்கை
தன் மீதும் தனது திறமை மீதும் பூரண நம்பிக்கை வைத்தல், ஒரு காரியத்தையோ, சவாலையோ வெற்றிகரமாக முடிக்க சந்திக்க தன்னால் முடியும் என்ற நம்பிக்கை வைத்தல், எதிர்ப்பு இருந்தாலும் தனது முடிவில் உறுதியாக இருத்தல், மற்றவர்கள் செய்யத் தயங்கும் ரிஸ்க்கான செயலை செய்தல்.
புதிய சிந்தனை, சுய செயல்பாடு
காரியத்தை முடிக்க சாதாரணமாக தேவைப்படுவதை விட கூடுதல் முயற்சி எடுத்தல், பிறராலோ அல்லது சூழ்நிலையாலோ உந்தப்படுவதற்கு முன்பே காரியத்தில் இறங்குதல், தொழிலை புதிய இடங்களில் புதிய பொருள்கள்-புதிய சேவை மூலமாக விரிவாக்க செயல்படுவது.
தகவல் சேகரித்தல்
இலக்கை அடைய தேவையான தகவல்களை சுயமாக சேகரிக்க முற்படுவது.
சுயமாக சந்தை ஆய்வு செய்தோ, வல்லுநர்களை கலந்தாலோசித்தோ, தெரிந்தவர்கள் மூலமாகவோ தொழிலுக்கு பயனுள்ள தகவல்களை முயன்று சேகரித்தல்.
வாய்ப்புகளை உருவாக்குதல்
வாய்ப்புகளுக்காக சூழ்நிலையை கவனித்தல், கண்டறிதல் உடனடியாக அதை பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்தல், அசாதாரணமான வாய்ப்புகளையும் உருவாக்கி தொழிலுக்குத் தேவையானவற்றை அடைதல்.
முறையான திட்டமிடல்
இலக்கை அடைய சரியான படிப்படியான திட்டமிடல் பெரிய செயலை சிறிய சிறிய செயல்களாக மாற்றி எளிதில் முடிக்கும் திறமை. தடைகளை முன்னறிந்து திட்டமிடல், சீரான மற்றும் முறையான செயல் ஆற்றல்
விடா முயற்சி
தடைகளை தாண்டி இலக்கை அடைய திரும்பத் திரும்ப செயல்படுதல், பெரிய தடை வரும்போதும் மனம் சோராது செயல்படுதல், புதிய செயல்கள் மூலம் தடைகளை உடைத்தல்.
தரத்திற்கான முனைப்பு
தனது தொழிலில் தற்போதுள்ள தரத்தையோ அல்லது அதையும் விட மேம்பட்ட தரத்திலோ பொருளை- சேவையை தர முனைப்புடன் செயல்படுதல், தனது பொருளையும் மற்ற போட்டியாளர்களின் பொருளையும் ஒப்பிட்டு தரத்தை மேம்படுத்த எப்போதும் முயலுதல்.
செயலை முடிக்க முனைப்பு
எடுத்துக் கொண்ட செயலை சொந்த செளகரியங்களையும் தியாகம் செய்து எப்பாடுப்பட்டாவது முடிக்க அரும்பாடு படல். செயலில் இறங்கும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு முழு பொறுப்பு எடுத்துக் கொள்ளல்.
வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை கொடுத்தல்.
பிரச்சனைகளுக்கு தீர்வு காணல்
இலக்குகளை அடைய புதிய அசாதரணமான தீர்வுகளை கண்டறிதல், தடை வரும்போது மாற்று தீர்வை செயல்படுத்துதல் புதிய வழிமுறைகளை தொடர்ந்து கண்டறிய முனைதல்.
வலியுறுத்தல்
பிரச்சனைகளையும், கருத்து வேறுபாடுகளையும் மற்றவர்களோடு தைரியமாக நேரடியாக எடுத்து வைத்தல், மற்றவர்கள் செய்ய வேண்டிய பணிகளை எடுத்துரைத்து வேலை வாங்குதல்.
கண்காணித்தல்
இலக்கை அடைய போட்ட திட்டப்படி செயல்கள் நடைபெறுகிறதா என்று அறிய நடைமுறைகளை உருவாக்குதல் – செயல்படுத்துதல் தானே திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் செயல்பாடுகளையும் கண்காணித்தல்.
ஊழியர் நலனில் அக்கறை
தொழிலாளிகளின் நலத்தை மேம்படுத்த செயல் ஆற்றுதல் அவர்களுடைய சொந்த நலனிலும் அக்கறை கொள்ளுதல்.