திருச்சியில் பட பட பட்டாசு…. தீபாவளி விற்பனை… சத்தம் அதிருமா?
ஜி. ஜெயபிரகாஷ், உரிமையாளர் முத்து பட்டாசுக்கடை
தீ பாவளி சந்தையை துணிக்கடைக்கு அடுத்து ஆக்ரமிப்பது பட்டாசு கடைகள் தான். ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக பட்டாசு கடை அமைக்க தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்படும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு விதிகள் உள்ளதால் கடைகள் அமைக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.
பட்டாசு கடை வைக்கும் இடம் கல் மற்றும் கான்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும். கட்டடத்தில் மின் விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பட்டாசு வைத்திருக்கும் அறை 9 சதுர மீட்டருக்கும் குறைவானதாக இருக்கக் கூடாது. அதேபோல் அந்த அறை 25 சதுர மீட்டருக்கு அதிகமான சுற்றளவிலும் இருக்கக் கூடாது உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் புதிய கடைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டே வந்தது.ஆனால் இந்த ஆண்டு அது போன்ற விண்ணப்பங்கள் குறைவு தான் என்கிறது மாவட்ட நிர்வாகம்.
பட்டாசு கடைகளில் மத்தாப்பு, கேப் போன்றவற்றை தனியிடங்களில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். வெடிகள், சரவெடிகள், புஸ்வானம் வைத்திருக்கும் பகுதிகளில் மாத்தாப்புகளை வைக்கக் கூடாது. கடைகளின் உள்ளே அதிகளவு வாடிக்கையாளர்கள் நிற்க அனுமதிக்கக் கூடாது.
சரக்குகளை ஏற்றி இறக்கும் வேலையை வாடிக்கையாளர்கள் குறைவாக இருக்கும் நேரத்தில் செய்ய வேண்டும்“ உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பட்டாசு விற்பனை கடைகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
சிவகாசியில் ஒவ்வோராண்டும் தீபாவளி முடிந்த பதினைஞ்சாவது நாளிலேயே அடுத்த ஆண்டுக்கான உற்பத்தியை தொடங்கிவிடுவர். வருடத்திற்கு ரூ.3,000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படும். ஆனால் இந்தாண்டு மூன்று மாதம் முழு ஊரடங்கிற்கு பின்னர் குறைவான தொழிலாளர்களை கொண்டு தொழிற்சாலைகள் நடத்த அறிவுறுத்தப்பட்டதால் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
”இந்தாண்டு ஆர்டருக்கு ஏற்பவே உற்பத்தி செய்யும் நிலையில் சிவகாசி பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளதால் விற்பனையும் அதற்கேற்றார் போல் இருக்கும்” என்கிறார் 35 ஆண்டுகளாக தற்காலிக பட்டாசு கடை நடத்தும் முத்து பட்டாசு கடையின் உரிமையாளர் ஜெயபிரகாஷ்.
திருச்சி, பாலக்கரை பகுதியில் பட்டாசு கடை வைத்திருக்கும் ஜெயபிரகாஷ் கூறுகையில், ”பட்டாசு வைப்பதற்கு அன்று முதல் இன்று வரை ஒரே விதிமுறைகள் தான். இந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கச் சொல்லியிருக்கிறார்கள். மற்றும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சில விதிமுறைகளை கடைபிடிக்கச் சொல்லி இருக்கிறார்கள். மற்றபடி கடை வைக்க புதிதான கெடுபிடிகள் எதுவும் கிடையாது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு கடைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருட்களின் விலை 5 முதல் 10 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதால் பட்டாசு விலையும் அதற்கேற்றாற் போல் விலை உயரும். ஆனால் பெரிய அளவில் விலை அதிகம் இருக்காது.
வழக்கமாக வடநாட்டிற்கு தேவையான தீபாவளி பட்டாசுகளை மார்ச் மாதம் முதல் அனுப்பத் தொடங்கிவிடுவர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தாக்குதலால் மிகவும் தாமதமானது. தற்போது தேவைக்கு ஏற்றாற் போல், அதாவது ஆர்டருக்கு தகுந்தவாறு மட்டுமே சிவகாசியில் பட்டாசுஉற்பத்தி நடைபெறுகிறது.
30 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக கடை நடத்தும் அனுபவம் உள்ளதால் விற்பனையை ஓரளவு கணித்து அதற்கேற்பவே கொள்முதல் செய்திருக்கிறேன். தீபாவளி பட்டாசு விற்பனையானது, மொத்த விற்பனை ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கும். சில்லரை விற்பனை கடைசி பத்து நாளில் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தாண்டு விற்பனை காலகட்டம் மொத்தமாக 20 நாட்கள் தான் உள்ளது” என்றார்.
பம்பரம் போல் சுழன்று பறக்கும் கூகுள் பேன்ஸி, நேராக மேலெழும்பி பறக்கும் ட்ரோன் கேமிரா, செல்பி ஸ்டிக், போட்டோ பிளாஷ் என ஆபத்தில்லாத புதிய புதிய பட்டாசு ரகங்கள் பட்டாசு கடையினை ஆக்ரமித்துள்ளன. பொதுவாக பொது மக்கள் தீபாவளி கொண்டாட எவ்வித தடையும் அரசு விதிக்காது என வியாபாரிகளும், பொது மக்களும் நம்புகின்றனர்.
பட்டாசு விற்பனையாளர்களோ, பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்காமல் இருந்தால் எதிர்பார்க்கும் விற்பனை இலக்கை ஓரளவு எட்டிவிடுவோம் என்கின்றனர்.