வியாபார உலகில் சீசன் பிசினஸ் செய்வதெற் கென்றே ஒரு சாரார் உள்ளனர். அது போல் சிவகாசியில் பட்டாசு வாங்கி வந்து விற்பனை செய்பவர்களும் உண்டு. நீங்கள் பட்டாசு கடை போட விரும்புகிர்களா..? அதற்கு என்ன செய்ய வேண்டும்..? தொடர்ந்து படியுங்கள். மாவட்ட நிர்வாகம் வகுத்துள்ள விதிமுறைகள் என்னென்ன என்பதை முதலில் பார்ப்போம்.
- வெடிப்பொருள் சட்டப்படி பட்டாசு கடை வைக்கும் இடம் கல் மற்றும் காங்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும்.
- கடையின் இருபுறங்களிலும் சென்று வர பாதை கட்டாயம் இருக்க வேண்டும்.
கட்டடத்தில் மின் விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்பு, திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றின் கீழ் பட்டாசு கடைகளை வைக்கக் கூடாது, - பட்டாசு வைத்திருக்கும் அறை 9 சதுர மீட்டர் குறைவானதாக இருக்கக் கூடாது, அதேபோல அந்த அறை 25 சதுர மீட்டருக்கு அதிகமான சுற்றளவிலும் இருக்கக் கூடாது.
- ஒரு பட்டாசு கடைக்கும் மற்றொரு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
- உதிரி பட்டாசுகளை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது.
“இங்கு புகை பிடிக்கக்கூடாது” உள்ளிட்ட எச்சரிக்கை விளம்பர பலகைகளை பட்டாசு கடை முன்பு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். - பட்டாசு கடையின் அருகே தீயணைப்புத் துறை வாகனம் வரும் அளவுக்கு வழி இருக்க வேண்டும்.
- உரிமம் பெற்ற கட்டடத்தை தவிர வேறு இடங்களில் பட்டாசு இருப்பு வைத்திருக்கக் கூடாது.
இப்படியான 30 விதிமுறைகள் உள்ளன. இவற்றை பின்பற்றினால் தான் தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும்.
வழக்கமாக திருச்சி மாநகரில் பட்டாசு கடை வைக்க ஆர்.டி.ஓ. மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் இ-சேவை மூலம் நீங்கள் விண்ணப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பித்த பின் உங்கள் கடை உள்ள பகுதியை சேர்ந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்குவார்கள். அதன்பின் தான் உங்களுக்கு கடை வைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
கடை வைத்த பின்பு காவல்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள், விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்வார்கள். பின்பற்றாவிட்டால் கடைக்கான அனுமதியை ரத்து செய்து விடுவார்கள். மேலும் முறையாக அனுமதி பெறாமல் பட்டாசு கடை வைப்போர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. ஜாக்கிரதை.!
தற்காலிக் கடைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வருகிற அக்.23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர்
அறிவித்துள்ளார்.