புதிய தொழில்முனைவோருக்கு ரூ. 5 கோடி வரை கடனுதவி
ரூ.30 இலட்சம் வரை மானியம்!
குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவங்கள் துறை சார்பில் முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் புதிய உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ.10 இலட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான கடனுதவியை வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் பெற்று தொழில் தொடங்க வழிவகை செய்கிறது.
இதற்கான தகுதிகள்: பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு/ஐடிஐ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழிற் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். பொதுப் பிரிவினர் 21 வயது முதல் 35 வயது கொண்டவராக இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினர் எனில் 45 வயது வரை இருக்கலாம். தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவராக இருத்தல் வேண்டும். முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள் : திட்ட மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் நிலையான முதலீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.30 இலட்சம் வரை முதலீட்டு மானியமாக வழங்கப்படும். கடனை திரும்பச் செலுத்தும் முழு காலத்திற்கும் 3 விழுக்காடு பின்முறை வட்டி மானியமாக வழங்கப்படும். பொது பிரிவினருக்கான மூலதனப்பங்கு திட்ட மதிப்பீட்டில் 10 விழுக்காடு மற்றும் சிறப்புப் பிரிவினருக்கு 5 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள்: வயதிற்கான அத்தாட்சியாக பிறப்பு சான்றிதழ் நகல் அல்லது கல்லூரி மாற்றுச் சான்றிதழ், இருப்பிட அத்தாட்சியாக குடும்ப அட்டை நகல் அல்லது வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ் மற்றும் ஆதார் நகல், பட்ட/பட்டய படிப்பு/அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற் பயிற்சி சான்றிதழின் நகல், சாதிச் சான்றிதழ், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆக இருப்பின் அதற்குரிய அத்தாட்சி சான்றிதழ்
திட்ட அறிக்கை மற்றும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான உத்தேச விற்பனை மற்றும் பணப்பாய்வு அறிக்கை, திட்ட மதிப்பீட்டில் நிலத்தின் மதிப்பு சேர்க்கப்பட்டிருந்தால் உரிய ஆவணங்களின் நகல், பட்டய கட்டுமான பொறியாளரிடமிருந்து பெறப்பட்ட கட்டிடத்திற்கான உத்தேச மதிப்பீடு, இயந்திர தளவாடங்களுக்கான விலைப்பட்டியல், சான்றுறுதி அலுவலரிடமிருந்து ரூ.20 மதிப்பிலான முத்திரை தாளில் பெறப்பட்ட உறுதிமொழிப் பத்திரம், பங்குதாரர் நிறுவனமாக இருப்பின் கூட்டு ஒப்பந்த பத்திர நகல். மேலும் விவரங்களுக்கு www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் அறியலாம்.